தொகுதியில் கட்சிகளின் ஆதிக்கமே ஓங்கியிருப்பதையும் சாதிகளின் ஆதிக்கம் இல்லாதிருப்பதையும் நம்மால் உணர முடிந்தது.
வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த பழனி, ராமமூர்த்தி போன்றவர்கள், ""தி.மு.க.வுக்கே எங்கள் வாக்கு. காரணம் முற்போக்குக் கொள்கை உள்ள சுயமரியாதைக் கட்சி அது'' என்றனர். அப்படின்னா ""முதலியார் சமூகத்தைச் சேர்ந்த தி.மு.க. அண்ணாதுரைக்குத்தான் ஓட்டுப் போடுவீங்களா?'' என வாயைக் கிளறினோம். அந்த இருவரும், ""சாதியைப் பத்திப்
பேசாதீங்க. ஜாதியை நம்பி, ஜாதி வெறியைத் தூண்டி இங்க போன சட்டமன்றத் தேர்தலில் காடுவெட்டி குரு களமிறங்கினார். அவரை வன்னிய மக்களான நாங் கள்லாம் சேர்ந்து 1 1/2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிச்சோம்'' என்றார்கள் அழுத்தமாய்.
திருவண்ணாமலை பேகோபுரத் தெருவில் நாம் சந்தித்த மஞ்சுளா, ""வாரத்துக்கு ஒருநாள்தான் நகராட்சி யில் குடிதண்ணீர் விடறாங்க. அதனால் மத்த நாளெல்லாம் தண்ணிக்காகத் தெருத் தெருவா அலையிறோம். நகராட்சிச் சேர்மனிடம் போய்க்கேட்டா அதிகாரிகளைக் கேளுங்கன்னு சொல்றார். நாங்க அதிகாரிகளுக்கா ஓட்டுப் போட்டோம்?'' என்கிறார் காட்டமாய்.
கீழ்பென்னாத்தூர் வெள்ளை யப்பனோ, ""குடிக்கிறார், உளர்றார்னு சொல்றீங்க. இருந்தாலும் விஜயகாந்த்துக்கிட்ட ஒரு பயர் இருக்கு'' என்கிறார் உற்சாகமாக.
ஜோலார்பேட்டை ராமசாமி ""போன தடவை இலைக்குப் போட்டு வீரமணியை ஜெயிக்க வச்சோம். மந்திரி ஆனார். ஆனா எங்க ஊர் ரோடு களைப் பாருங்க... ஒரு எழவையும் அவர் செய்யலை. அதனால் இந்த முறை மாத்திப் போடப்போறேன்'' என்கிறார் காரமாய்.
-ராஜா, சுரேஷ் & சர்வே டீம்