பயங்கர சூறாவளி காரணமாக ரயில்கள் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின், ஷாங்காய் அருகே உள்ள ஜிஜாங் மாகாணத்தில் கடந்த சிலநாட்களாக கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து கடும் சூறைக்காற்றும் வீசி வருகிறது. மணிக்கு சுமார் 187 கிமீ வேகத்தில்
சூறாவளிகாற்று வீசுவதால் மரங்கள் பெயர்ந்து விழுந்தன. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து விட்டதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கனமழையால் மின்தடையும் நீடிக்கிறது.
கடும் சூறாவளியால் 8 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. 10 மீட்டர் வரை அலை எழும்புகிறது. இதையடுத்து, கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 30 ஆயிரம் மீன்பிடி படகுகள் கரைக்கு திரும்பின. சூறாவளி காரணமாக கடல் சீற்றம் அதிகம் உள்ளதால், கடற்கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
சூறாவளியால் விமானம், ரயில் சேவை பாதிக்கப்பட்டு உள்ளன. இதுவரை சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சூறாவளியால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பான இடங்களில் தங்கவகைப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கனமழை தொடரும் என்பதால் சீன அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.