12 ஜூலை, 2015

சென்னையில் கார் விபத்து: காயமின்றித் தப்பினார் ப.சிதம்பரம்
முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி செல்வதற்காக கார் மூலம் விமான நிலையம் புறப்பட்டார். கிண்டி கவர்னர் மாளிகை அருகே சென்ற போது, சிக்னலுக்காக ப.சிதம்பரத்தின் கார் நின்றது. அப்போது அவருடன் வந்த பாதுகாப்பு போலீசாரின் கார் மீது பின்னால் வந்த கார் ஒன்று மோதியது. 

இதனால், பாதுகாப்பு போலீசாரின் கார் ப.சிதம்பரம் பயணம் செய்த காரின் பின்பகுதியில் மோதியது. இதில் ப.சிதம்பரத்தின் காரில் பின்பக்க விளக்கு உடைந்து கண்ணாடி நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் ப.சிதம்பரத்துக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் பாதுகாப்பு போலீசாரின் கார் சேதம் அடைந்தது. அதில் இருந்த 3 போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. 

உடனடியாக காரில் இருந்து இறங்கிய ப.சிதம்பரம், காயமடைந்த போலீசாரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர், விமான நிலையம் சென்ற ப.சிதம்பரம் டெல்லி புறப்பட்டார். சிக்னலில் விபத்தை ஏற்படுத்திய காரில் 5 பேர் பயணித்துள்ளனர். இவர்கள் புதுச்சேரியில் இருந்து சைதாப்பேட்டை வந்தபோது இந்த விபத்து நடந்தது. காயம் அடைந்தவர்கள் குரோம்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.