12 ஜூலை, 2015

ஆப்கானிஸ்தானில் ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலிஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத தலைவன் ஹபீஸ் சயீத் பலியாகினான் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானதாக்குதலில் சிக்கி பலி ஆனார். இது தொடர்பாக ஆப்கான் தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் விடுத்துள்ள அறிக்கையில், ஆப்கானில் நங்கர்ஹார் மாகாணத்தில் ஆச்சின் பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பதுங்கி உள்ளதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன. அந்த தகவல்கள், அமெரிக்க கூட்டுப்படைகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. அதன்பேரில் அமெரிக்க கூட்டுப்படைகள் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஹபீஸ் சயீத், மேலும் 30 பிற தீவிரவாதிகளுடன் கொல்லப்பட்டார். தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமெரிக்க ராணுவ கர்னல் பிரையன் டிரைபஸ் கூறும்போது, ‘ஆச்சின் பகுதியில் அமெரிக்க கூட்டுப்படைகள் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தின. கூட்டுப்படைகளை அச்சுறுத்திக்கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது’ என்றார். இந்த தாக்குதல் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் குறிப்பிடத்தக்க வெற்றி, ஹபீஸ் சயீத்தின் மரணம், முக்கிய மைல் கல் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

தலிபான் தீவிரவாதிகளால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிய ஆப்கானிஸ்தானில் தற்போது ஐ.எஸ். தீவிரவாதிகளின் ஆதிக்கமும் தொடங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் சமீபத்தில் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தலிபான் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதம் இடையே மோதல் வெடித்தது. ஆப்கானிஸ்தானின் நான்கார்ஹார் மாகாணத்திற்குள் ஊடுருவிய ஐ.எஸ். தீவிரவாதிகள் தலிபான் தீவிரவாதிகள் தலையை வெட்டி கொலை செய்தனர் என்று ஆப்கானிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் தலையிடக்கூடாது என்று ஐ.எஸ். தீவிரவாத தலைவருக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தலிபான் மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு இடையே பேச்சுவார்த்தை தொடங்கிஉள்ளது