12 ஜூலை, 2015

தமிழர் தாயகத்தில் சாதனை படைப்போம் தமிழ் மக்களுக்கு சம்பந்தன் அழைப்பு

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக ஆசனங்களைப் பெற்று சாதனை படைக்கும் என்ற நம்பிக்கையில் நாம் உள்ளோம். இந்தச் சாதனையை நிலைநாட்ட எமது தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
தலைவரும் திருகோணமலை மவட்ட முதன்மை வேட்பாளருமான இரா. சம்பந்தன் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

“இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள எமது சொந்த நிலங்களை மீட்டு எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை நாம் நல்லதொரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். “இவ்வருடம் ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டதால் காட்டாட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயக ஆட்சியை - நல்லாட்சியை ஏற்படுத்தினோம்.
எனினும், இந்த ஆட்சியில் எமது உரிமைகள் அனைத்தையும் நாம் பெறவில்லை. எனவே தமிழரின் சொந்த இடங்களில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்றி எமது மக்கள் நிம்மதியாக வாழவும், தமிழ் அரசியல் கைதிகள் என்ற பெயரில் சிறைகளில் வாடுகின்ற எமது உறவுகளை மீட்கவும், காணாமல் போனோர் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தவும், எமக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெறவும் நாம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஓரணியில் நிற்க வேண்டும் என்றார்.