12 ஜூலை, 2015

ராஜீவ் கொலை வழக்கு ஐந்து நீதிபதிகள்இடம்பெறும் அரசியல் சாசன அமர்வு

[
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து விசாரிக்க அரசியல் சாசன அமர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 18-ம் திகதி தீர்ப்பளித்தது.
இதனுடன் இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ராபர்ட் பயஸ், ரவிக்குமார், ஜெயச்சந்திரன் ஆகிய நால்வரையும் விடுதலை செய்ய தமிழக சட்டசபையில் ஜனவரி 19-ம் திகதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. முக்கியமான இந்த வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்யும் விவகாரம் மாநில அரசுக்கு இல்லை என்று மத்திய அரசு அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த வழக்கில் தலைமை நீதிபதியிலான அமர்வு ஏப்ரல் 24-ம் திகதி அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டதுடன், விடுதலைக்கு இடைக்காலத் தடையும் பிறப்பித்தது.
இதற்கிடையே கடந்த ஆண்டு ஜூலை 9-ம் திகதி இந்த வழக்கில் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளுக்கு அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான அமர்வு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் அரசியல் சாசன அமர்வில் இடம்பெறும் ஐந்து நீதிபதிகள் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி தத்து, இப்ராஹிம் கலியுல்லா, பி.சி.கோஷ் , ஏ.எம். சாப்ரே, யு.யு.லலித் அடங்கிய அமர்வு வரும் 15-ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.