12 ஜூலை, 2015

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்.

சினிமா பட அதிபர் இப்ராகிம் ராவுத்தர் இருதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக, சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான
விஜயகாந்த் நேரில் பார்த்து கண்ணீர் விட்டு அழுதார்.
சுயநினைவின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் இப்ராகிம் ராவுத்தரை அவருடைய நெருங்கிய நண்பரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் நேரில் சென்று பார்த்தார்.
இப்ராகிம் ராவுத்தர் சுயநினைவின்றி இருப்பதைப் பார்த்ததும், விஜயகாந்த் கண்ணீர் விட்டு அழுதார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் தன் கைப்பட ஒரு கடிதத்தை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
‘‘நண்பா, நீ உடல்நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி கேட்டு வேதனையுடன் உன்னை நலம் விசாரிக்க வந்தேன்.
அங்கு நீ சுய நினைவு கூட இல்லாத நிலையில், கட்டிலில் படுத்திருப்பதை கண்டதும் என் மனம் பட்ட துயரத்தை நான் மட்டுமே அறிவேன். உன்னை கண்டவுடன், நாம் சிறுவயது முதல் கொண்ட உண்மையான நட்பும், வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற உறுதியோடு மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து சினிமா உலகில் நாம் போராடி பெற்ற வெற்றி, தோல்விகளும் என் கண்முன் வந்து சென்றது.
காலத்தின் ஓட்டத்தில் எத்தனையோ மனக்கஷ்டங்களும், சந்தோஷங்களும் வந்து சென்றிருந்தாலும், என்றுமே உன்னை என் மனம் மறந்ததில்லை. இப்ராகிம் நீ மீண்டும் நல்ல ஆரோக்கியத்தோடு நலம் பெற்று வரவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. நண்பா, மீண்டு வா. எழுந்து வா.’’
இவ்வாறு அந்த கடிதத்தில் விஜயகாந்த் எழுதியிருக்கிறார்