12 மார்., 2013


24 கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த; வலி. வடக்குக் காணிகளை நிரந்தரமாகப் பறிக்க முடிவு
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நலன்புரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள்.

 
யாழ். மாவட்டத்தில் வலி. வடக்குப் பகுதியைச் சேர்ந்த 24 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய பிரதேசத்தை மக்களிடம் கையளிக்காமல், படைத்தரப்பின் தேவைக்காக முற்றுமுழுதாகப் பறித்தெடுக்க அரசு முடிவெடுத்துள்ளதாக 'உதயன்' பத்திரிகைக்கு நம் பகரமாக அறியவந்தது.
 
காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானத்தளம் என்பவற்றையும், படைத்தளக் கட்டுமானங்களையும் விரிவாக்கம் செய்யும் நோக்கிலேயே இந்தப் பிரதேசம் சுவீகரிக்கப்பட்டுள்ளது.
 
மக்களின் இந்தக் காணிகளைச் சுவீகரிப்பதற்காக யாழ். செயலகத்தில் அலுவலகம் ஒன்று இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் காணி அமைச்சர் ஜானக பண்டார தென்னக்கோன், பிரதிக் காணி அமைச்சர், யாழ். மாவட்ட இராணுவத் தளபதி ஹத்துருசிங்க ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
 
குறித்த பகுதிகளைக் கையகப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அரச அதிகாரிகளை அரசின் உயர் மட்டம் பணித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் என்றோ ஒருநாள் தம்மடைய சொந்த நிலங்களில் மீளக்குடியேறிவிடலாம் என்று நம்பியிருந்த மக்கள் பெரும் வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
 
கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அகதிகளாக நலன்பரி நிலையங்களிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். கடற்றொழில், விவசாயம் போன்ற தமது வாழ்வாதாரத் தொழில்களுக்கு அடிப்படையான சொந்த நிலங்களை இழந்துவிட்டு நிவாரணங்களை நம்பி வாழும் நிலை இவர்களுக்கு  ஏற்பட்டிருந்தது.
 
போர் முடிவுற்ற பின்னர் தமது சொந்த நிலத்தில் மீளக் குடியேற்றுமாறு இந்தப் பகுதி மக்கள் அகிம்சைப் போராட்டங்களில் ஈடுபட்டனர். நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தனர். மக்களை தமது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆனால் அவற்றையெல்லாம் மீறி தொடர்ந்தும் படைத்தரப்பின் கட்டுப்பாட்டிலேயே அந்தப் பகுதிகளில் பாதுகாப்பு வேலியிடப்பட்டு வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையில் தம்முடைய நிலத்தை மீளவும் தம்மிடமே ஒப்படைக்குமாறு கோரி கடந்த மாதம் 15 ஆம் திகதி தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் குறித்த 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் குதித்திருந்தனர். ஆயினும் தம்முடைய நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் படைத்தரப்பின் தேவைகளுக்காக, வலி. வடக்குக்கு உட்பட்ட 24 கிராமசேவையாளர் பிரிவுகளையும் சேர்ந்த காணிகளை கையகப்படுத்தும் அரசின் செயலால், மக்கள் வேதனையும், கொதிப்பும் அடைந்துள்ளனர்.