12 மார்., 2013

சங்கக்காரா, டில்ஷன் சதத்தால் டிரா செய்தது இலங்கை
இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது.
முதல் டெஸ்ட் காலேயில் நடந்தது. முதல் இன்னிங்சில் இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 570 ஓட்டங்கள் எடுத்து "டிக்ளேர்" செய்தது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 638 ஓட்டங்கள் எடுத்தது.

நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 116 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டில்ஷன் (63), சங்கக்காரா (49) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று தொடங்கிய ஐந்தாவது நாள் ஆட்டத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த டில்ஷன், அபுல் ஹைசன் பந்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்தார்.
டில்ஷன் டெஸ்ட் அரங்கில் தனது 16வது சதத்தை பூர்த்தி செய்தார். இவர் 126 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில், சங்ககராவும் 32வது சதத்தை பதிவு செய்தார்.
இவர் 105 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார். அரை சதம் கடந்த விதானகா 59 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இலங்கை அணி 4 விக்கெட்டுக்கு 335 ஓட்டங்கள் எடுத்தநிலையில் “டிக்ளேர்” செய்தது.
267 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணிக்கு அனாமுல் ஹேக் 1 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் 1 விக்கெட்டுக்கு 70 ஓட்டங்கள் எடுத்தபோது இலங்கைக்கெதிராக வங்கதேச அணி முதல் முறையாக போட்டியை “டிரா” செய்தது. ஜஹுருல் இஸ்லாம் 41 ஓட்டங்களும், அஷ்ரபுல் 22 ஓட்டங்களும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.