புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 மார்., 2013


அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால் கேட்டுத் தெளிவு பெறலாம் : கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையில் பாராட்டு விழா நடைபெற்று - விவசாயிகள் எல்லாம் மன நிறைவோடு  விழாவிற்கு வந்திருந்து சிறப்பித்துள்ளார்கள்
. குறுவை, சம்பா சாகுபடிக்கு காவிரி நீர் கிடைக்காமல், பயிர் கருகி அதனால் விவசாயிகள் உள்ளம் கருகி, 17 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு மாண்டு - முதலமைச்சர் அறிவித்த நிவாரணம் யார் யாருக்குக் கிடைக்கவில்லை என்று பட்டியல் இட்டுக்காட்டி, அவர்களுக்கெல்லாம் தஞ்சை பாராட்டு விழாவில் முதலமைச்சர் நிவாரணங்களை அறிவிக்கவில்லை!


மாறாக கடந்த காலத்தில் தனித்தனியாக அறிக்கைகள் மூலம் என்னைத் திட்டியதையெல்லாம் தொகுத்து சேகரித்து வந்து, அந்தக் கூட்டத்திலே மணிக் கணக்கிலே படித்து விட்டுத் திரும்பியிருக்கிறார் ஜெயலலிதா! அவர் கூறுவதைப் போல காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்து விடவில்லை.
முதலமைச்சர் ஜெயலலிதா தஞ்சையில் பேசும்போது, “வென்றவர் சொல்வது எல்லாம் வேதம் ஆகுமா?” என்ற தலைப்பிலே நான் ஓர் அறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும், அதிலே உண்மைக்குப் புறம்பான செய்திகளை சொல்லியிருந்தாலும், என்னையும் அறியாமல் இந்தப் பிரச்சினையில் தலைப்பின் மூலம் “வென்றவர் என்று அவரைக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறிக் கொண்டு தனக்குத்தானே பெருமைபட்டுக் கொண்டிருக்கிறார்.
காவிரிப் பிரச்சினையில் ஜெயலலிதா கூறிய அடுக்கடுக்கான பொய்களை எல்லாம் அந்தக் கடிதத்தில் வரிசையாக எடுத்துக்காட்டி, தேர்தலிலே வெற்றி பெற்ற ஒருவர் சொல்வதெல்லாம், அதாவது காவிரிப் பிரச்சினையில் பேட்டியிலே கூறியிருப்பதெல்லாம் “வேதம் ஆகி விடுமா - “வேதம் என்பதைக்கூட “உண்மை என்ற பொருளிலேதான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இதெல்லாம் இலக்கிய ரசனையோடு வெளியிடப் படும் தலைப்புகளாகும். அம்மையாருக்கு அது புரியாவிட்டால் அங்கே யாராவது இலக்கியம் தெரிந்தவர்கள் இருப்பார்களானால், அவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறலாம்.
நடுவர் மன்றம் அமைக்க 6-7-1986இல் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார் என்று ஜெயலலிதா சொல்கிறார். அதற்கு முன்பு 17-2-1970 அன்று, நான் முதலமைச்சராக இருந்தபோது தான், நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்று, தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு முதன் முதலாக கடிதம் எழுதப்பட்டது.
8-7-1971 அன்று நடுவர் மன்றம் அமைத்திட வேண்டுமென்று தி.மு. கழக ஆட்சியில்தான், நான் முதலமைச்சராக இருந்தபோதுதான், மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4-8-1971இல் தமிழக அரசால் உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்றும், அன்றைய பிரதமர் வற்புறுத்தலால் அப்போது தமிழக முதல்வராக இருந்த நான் அந்த வழக்கைத் திரும்பப் பெற்றதால் பெருத்த பின்னடைவு ஏற்பட்டதாகவும் தஞ்சைக் கூட்டத்தில் ஜெயலலிதா பேசியிருக்கிறார். 1971ஆம் ஆண்டு ஒரு வழக்கு ஹேமாவதி அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த உச்ச நீதி மன்றத்தில் தொடரப்பட்டது. அதை முரசொலி மாறன், கோ.சி. மணி, ஜி.கே. மூப்பனார் மற்றும் தஞ்சை மாவட்டத்திலுள்ள பல்வேறு விவசாயச் சங்கங்கள் எல்லாம் முன்னின்று நடத்தினார்கள்.
அப்போதுதான் பிரதமராக இருந்த இந்திரா காந்தி என்னை அழைத்து, பேச்சுவார்த்தை மூலம் காவேரி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம், இடையிலே நீங்கள் வழக்கு போட்டிருக்கிறீர்களே, வழக்கு இருக்கும்போது எப்படி பேச முன் வருவார்கள், என்னை நம்பி இந்த வழக்கைத் திரும்பப் பெறுங்கள் என்று சொன்னார்கள். நான் உடனே தன்னிச்சையாக வழக்கைத் திரும்பப் பெற்று விடவில்லை. அனைத்துக் கட்சித் தலைவர்களை தலைமைச் செயலகத்திற்கு அழைத்துப் பேசி விட்டுத்தான் அந்த வழக்கை தமிழக அரசு திரும்பப் பெறுவது என்று முடிவு செய்த போதுகூட, மீண்டும் எப்போது விரும்பினாலும் அந்த வழக்கைத் தொடரலாம் என்று அதற்கு வழி வைத்துக் கொண்டு அந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
1998ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு. கழக ஆட்சியிலே தான் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் ஒப்பந்தமே ஏற்பட்டது. பாரதப் பிரதமர் தலைமையில் காவேரி நதி நீர் ஆணையம் அமைக்கப்பட்டது. கண்காணிப்புக் குழு அமைந்தது.
1998இல் வாஜ்பாய் பா.ஜ.க. பிரதமராக இருந்தார். நான் தமிழகத்தின் முதல் அமைச்சர். ஜெயலலிதா தமிழகத்திலே எதிர்க்கட்சியாக இருந்தாலும் பா.ஜ.க. கூட்டணியிலே மத்தியிலே இருந்தார். அப்போது பிரதமர் வாஜ்பாய் என்னிடம், 12ஆம் தேதி உச்ச நீதி மன்றம் மத்திய அரசின் கருத்தினைக் கேட்டிருக்கிறது, அதற்குள் அனைவரும் பேசி ஒரு நல்ல முடிவெடுக்கலாம், வாருங்கள் என்று அழைத்தார். நான் தன்னிச்சையாக அப்போதும் முடிவெடுக்கவில்லை. 40க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்களை அழைத்துப் பேசினேன். அதில் 30 பேர் நான் டெல்லி கூட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்றனர்.  10 பேர் போகக் கூடாது என்றார்கள்.
ஜனநாயகத்தில் எதைக் கேட்பது? ஒன்பது மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பிரதமர் வாஜ்பாயே அமர்ந்து ஒப்பந்தம் கண்டார். காவேரி நதி நீர் ஆணையமும் அமைந்தது. அதைத்தான் தற்போது ஜெயலலிதா நான் செய்த துரோகம் என்கிறார். பா.ஜ.க.வின் பிரதமர், தமிழகத்திலே தி.மு. கழக ஆட்சி நடைபெற்ற போது, அவ்வாறு ஒப்பந்தம் கண்டார் என்பதற்காக ஜெயலலிதா அந்தக் கூட்டணியிலிருந்தே விலகினார். ஆனால் அவர் விலகியது பற்றி அப்போது அந்த மூத்த மனிதர், வாஜ்பாய் எவ்வளவு நொந்து கொண்டு அறிக்கை விடுத்தார் என்பதை நான் இந்தக் கடிதத்திலே குறிப்பிட விரும்பவில்லை.
தற்போது முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சை மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா எப்படி நடைபெற்றிருக்கிறதோ, அதைப் போலவேதான் 1998ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் ஒப்பந்தம் ஏற்பட்ட போது, முதல் அமைச்சராக இருந்த எனக்கு இதே தஞ்சையில் காவிரிப் பாசன விவசாயிகள் சார்பில் 23-8-1998 அன்று நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்தவர் யார் தெரியுமா? அப்போதும் விவசாயச் சங்கத் தலைவராக இருந்த இந்த மன்னை ரெங்கநாதன் தான். தற்போது பொன்னியின் செல்வி சிலையைப் பரிசாகக் கொடுத்த ரெங்கநாதன் அப்போது காவிரித் தாய் சிலையை எனக்குப் பரிசாக வழங்கினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தஞ்சையிலே பாராட்டு விழா என்றால் நன்றாகப் பாராட்டட்டும். ஆனால் அங்கே போய் நின்று கொண்டு என்னை துரோகி என்றும், கர்நாடக வழக் கறிஞர் போல தொடக்கம் முதல் செயல்பட்டேன் என்றும் சரமாரியாகத் தாக்கியிருப்பது நியாயம் தானா?’’ என்று கூறியுள்ளார்.

ad

ad