12 மார்., 2013


அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டக்காரர்கள் இன்று கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிட்டனர். இப்போராட்டத்தால் அப்பகுதியில் ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டிருந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.


திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் முதல் அணு உலையில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு மின் உற்பத்திக்கு தயார் நிலையில் உள்ளது. அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

இதனிடையே இன்று ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அணு உலையின் ஆபத்தை விளக்கும் வகையிலும் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் இன்று கடல் வழியாக படகுகளில் சென்று அணு உலை முற்றுகைப்போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு 2ஆயிரம் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி 7 கி.மீ. தொலைவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. பலத்த பொலிஸ் பாதுகாப்பையும் மீறி போராட்டக்காரர்கள் இன்று கடல் வழியாக படகுகளில் சென்று முற்றுகையிட்டனர். 

கடல் பகுதியிலும் பொலிஸார் பாதுகாப்பு அரண் அமைத்து உள்ளதால் போராட்டக்காரர்கள் அணு உலையை நெருங்க முடியவில்லை. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் இடிந்தகரை, கூடங்குளம், பெருமணல், கூட்டப்புளி, கூத்தங்குழி உள்பட நெல்லை மாவட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். 

கூடங்குளம் அணு உலை முற்றுகைப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கன்னியாகுமரியில் பூம்புகார் படகு நிலையம் முற்றுகையிடப்பட்டது.