12 மார்., 2013


அமெரிக்கா கூட்டிய கூட்டத்திலிருந்து இடைநடுவில் வெளியேறிய சிறிலங்கா- இரா.துரைரத்தினம்.thx thinakathir

ஜெனிவா மனித உரிமை பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையின் நகல் கடந்த வியாழக்கிழமை மாலை அமெரிக்காவினால் உறுப்பு நாடுகளுக்கு வழங்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான கூட்டம் ஐ.நா.மனித உரிமை பேரவையின் 21ஆம் இலக்க மண்டபத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
 ஏற்கனவே வழங்கப்பட்ட பிரேரணையின் நகல் தொடர்பாக நாடுகளின் கருத்துக்களை அறியும் ஒரு விவாதமாகவே இந்த கூட்டம் அமைந்திருந்தது.
அமெரிக்காவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் இலங்கை உட்பட உறுப்பு நாடுகள் கலந்து கொண்டன. பெரும்பாலும் எல்லாநாடுகளும் கலந்து கொண்ட இக் கூட்டத்தில் இந்தியா மட்டும் கலந்து கொள்ளவில்லை. கருத்து எதுவும் தெரிவிக்காது மதில் மேல் பூனையாக இருப்பதற்காக இதில் இந்தியா கலந்து கொள்ளவில்லையா அல்லது இந்த பிரேரணையை முற்றாக நிராகரிக்கும் வகையில் கூட்டத்தை பகிஷ்கரித்தா என்பது தெரியவில்லை. ஆனால் இக் கூட்டம் நடைபெற்ற சமகாலத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையின் பொது மண்டபத்திலும் அதற்கு வெளியிலும் இந்திய தூதுவர் உட்பட அதிகாரிகள் காணப்பட்டனர்.
பொதுவாக தமிழகம் உட்பட இந்தியாவில் அமெரிக்கா கொண்டு வரும் பிரேரணைக்கு ஆதரவாகவும், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வேண்டும் என பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போதிலும் ஜெனிவாவில் உள்ள இந்திய இராஜதந்திரிகள் சிறிலங்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருப்பதையே அவதானிக்க முடிகிறது.
இதனால்தான் இந்த பிரேரணையை முற்றாக நிராகரித்து இக் கூட்டத்தை இந்தியா பகிஷ்கரித்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.  கூட்டம் ஆரம்பமானதும் அங்கு சமூகமளித்திருந்த அனைவருக்கும் பிரேரணை நகலின் பிரதிகள் வழங்கப்பட்டன.
ஐ.நா. மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் என்பதால் மண்டபத்தில் இலங்கையிலிருந்து வந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த தமிழர்கள் சிலரும் கலந்து கொண்டனர். இதில் மனித உரிமை அமைப்புக்களின் ஊடாக இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார், கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரும் சமூகமளித்திருந்தனர். ஆனால் அங்கத்துவ நாடுகளை தவிர வேறு யாருக்கும் அக் கூட்டத்தில் கருத்துக்களை கூற சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
இலங்கையில் நல்லிணக்கத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காகவும் ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கையை வரவேற்கும் வகையிலும் இப்பிரேரணை கொண்டுவரப்படுவதாக கூறிய ஜெனிவாவுக்கான அமெரிக்க தூதுவர் உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைக்கலாம் என தெரிவித்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.
இதனை தொடர்ந்து அங்கு சமூகமளித்திருந்த ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ஆரியசிங்கவுக்கு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. சிறிலங்கா தூதுவர் எடுத்த எடுப்பிலேயே இப்பிரேரணையை முற்றாக நிராகரித்ததுடன் இது நீதியற்றது, அநீதியானது, மனித உரிமை பேரவையின் விதிமுறைகளுக்கு முரணாக உறுப்பு நாடு ஒன்றில் குற்றம் சுமத்துகின்ற நடவடிக்கை என கூறினார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி விட்டதாகவும் ஏனைய விடயங்களை நிறைவேற்றுவதற்கு தமக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கூறினார். சிறுவர் போராளிகளை புனர்வாழ்வளித்து விடுவித்திருக்கிறோம், மீள்குடியேற்றத்தை துரிதமாக செய்திருக்கிறோம் என்றும் சிறிலங்காவின் பழைய பல்லவியையே அவர் பாடினார்.
இதனை தொடர்ந்து கருத்துக்களையும் விமர்சனங்களையும் முன்வைத்திருந்த நாடுகள் இரு அணிகளாக பிரிந்து நின்றதை அவதானிக்க முடிந்தது.
முதலில் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுவது பற்றி நாடுகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தன. ஐரோப்பிய நாடுகள் மற்றும் கனடா ஆகிய நாடுகள் இந்த தீர்மானம் கொண்டுவரப்படுவதை வரவேற்ற அதேவேளை ஆசிய நாடுகளும், ஆபிரிக்க நாடுகளும், ஒரு சில தென்அமெரிக்கா நாடுகளும் இத்தீர்மானம் கொண்டுவரக் கூடாது என கூறின. அவை இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் தலையிடக் கூடாது என்றும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தின.
விசேடமாக சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், ஈரான், யப்பான், போன்ற நாடுகள் தமது கடும் எதிர்ப்பை தெரிவித்தன.
ஐரோப்பிய நாடுகளும் கனடா போன்ற மேற்கு நாடுகளும் மட்டுமே இப்பிரேரணையை ஆதரித்தன. பிரித்தானியா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, ஒஸ்ரியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன சிறிலங்காவில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதையும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தின.
ஓஸ்ரியா மட்டும் சனல் 4 தொலைக்காட்சி நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை சுட்டிக்காட்டி அதில் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் போர்க்குற்றங்களுக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.
இந்நிலையில் கூட்டம் ஆரம்பமாகி 50ஆவது நிமிடத்திலேயே சிறிலங்கா தூதுவர் ஆரியசிங்க கூட்டத்தை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். நாடுகள் கூறிய கருத்துக்களையோ விவாதங்களையோ அவர் கேட்கவில்லை. சிறிலங்கா தூதரக பெண் அதிகாரி மட்டுமே அங்கு நடைபெறும் விடயங்களை குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தார்.
சிறிலங்கா தூதுவரின் நடவடிக்கை சிறிலங்காவின் ஒழுக்கத்தை பிரதிபலிப்பதாகவே அமைந்திருந்தன. அனைத்து நாடுகளின் பிரதிநிதிகள், தூதுவர்கள் அனைவரும் கூட்டம் முடிவடையும் வரை அமர்ந்திருந்து தமது கருத்துக்களை கூறிய போதிலும் சிறிலங்கா தூதுவர் கூட்டத்தின் ஆரம்பத்திலேயே எழுந்து சென்றது அனைவரையும் அவமதிக்கும் வகையிலேயே அமைந்திருந்தது.
ஆரம்பத்தில் இப்பிரேரணை தொடர்பான அபிப்பிராயம் பெறப்பட்ட பின்னர் இந்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக தனித்தனியாக ஆராயப்பட்டது.
இப்பிரேரணையின் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டிந்தன.
(1) இலங்கையில் நல்லிணக்கப்பாட்டைத் தோற்றுவிப்பதற்கும் பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகளை மேற்கொள்வதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆலோசனையும் தொழில்நுட்ப உதவியும் வழங்க முன்வந்துள்ளமையை வரவேற்கின்றோம்.
சட்டத்துறை மாற்றத்தை அணுகுவதற்கு ஏதுவாக திரட்சியான உள்ளகப் பங்களிப்போடு உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறை ஒன்று உருவாக்கப்படவேண்டுமென்ற மேற்படி ஆணைக்குழுவின் பரிந்துரைகளையும், முடிவுகளையும் வரவேற்கின்றோம்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம் ஆகியவை மீறல்கள் தொடர்பாக எழுந்துள்ள முறையீடுகள் குறித்து, சுயாதீனமான நம்பகத்தன்மை கொண்ட சர்வதேச விசாரணை அவசியம் என்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் விடுத்துள்ள அறைகூவலையும் கவனத்தில் கொள்கின்றோம்.
(2) மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு இலங்கை அரசை நாம் வலியுறுத்துகின்றோம்.
(3) கற்றுக்கொண்ட பாடங்களுக்கும் நல்லிணக்கப்பாட்டுக்குமான ஆணைக்குழுவின் சிபாரிசுகளைத் துரிதமாகவும் காத்திரமாகவும் நடைமுறைப்படுத்துமாறு நாம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை அரசுக்கு மீளவும் வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை, நீதித்துறை உத்தரவாதம், சமத்துவம், பொறுப்புக்கூறலுக்கான கடப்பாடுகள் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த நம்பகத்தன்மை வாய்ந்த சுயாதீனமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக பொருத்தமான சட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுமாறும் இலங்கை அரசைக் கோருகின்றோம்.
இவற்றில் அனைத்து இலங்கையருக்குமான நல்லிணக்கப்பாட்டைத் தோற்றுவித்தல், சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஆகியவையும் அடங்கும்.
(4) விசேட நடைமுறைகளை மேற்கொள்ள ஆணை அதிகாரம் கொண்டோருடன் இணைந்து நீடித்துவரும் கோரிக்கைகளுக்கு இலங்கை அரசு தீர்வுகாண முன்வரவேண்டும்.
நீதிவான்கள், சட்டத்தரணிகள், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோரின் சுயாதீனம் ஒடுக்கப்படக்கூடாது. பேச்சுச் சுதந்திரம், அமைப்புகளின் சுயாதீனம், கூடும் உரிமை ஆகியவை நசுக்கப்படக்கூடாது.
ஒருதலைப்பட்சமான மரணதண்டனைகள், பலாத்காரத்தைக் கட்டவிழ்க்கவோ, பலவந்தமாக காணமற்போகச் செய்வதையோ தொழிலாகக்கொண்ட குழு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகிய விவகாரங்களுக்கும், சிறுபான்மையினரின் விவகாரங்களுக்கும் முடிவுகட்டப்படவேண்டும்.
(5) மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை அரசுக்கு ஆலோசனைகள், தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றை வழங்க முன்வந்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவையும், ஆணை அதிகாரம் படைத்தவர்களின் முன்னெடுப்புகளையும் நாம் பெரிதும் ஊக்குவிக்கின்றோம்.
(6) மனித உரிமைகள் பேரவையின் 24 ஆவது அமர்வு இவ்வாண்டு ஒக்டோபரில் நடைபெறும் போது இத்தீர்மானத்தின் நடைமுறை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 25 ஆவது அமர்வில் முழுமையான உள்ளக அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும்
ஓவ்வொரு விடயமாக ஆராயப்பட்ட போது சிறிலங்காவுக்கு ஆதரவான நாடுகள் சிறிலங்காவின் உள்நாட்டு விடயத்தில் தலையீடு செய்யக் கூடாது என்பதையே வலியுறுத்தி நின்றன.
உறுப்பு நாடுகள் தெரிவித்த விமர்சனங்கள் கருத்துக்கள் அடிப்படையில் இந்த பிரேரணை மாற்றம் செய்யப்பட்டு இந்த வாரத்தில் ஐ.நா.மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வருடம் கொண்டுவரப்பட்ட பிரேரணையை அடி ஒற்றியே இம்முறையும் இப்பிரேரணை கொண்டுவரப்படுகிறது.
இதில் எந்த ஒரு இடத்திலும் நடந்த போர்க்குற்றங்களுக்கு சர்வதேச மட்டத்திலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடப்படவில்லை. உள்நாட்டு பொறிமுறைகளின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றே இப்பிரேரணை கோரிநின்கிறது.
இலங்கையின் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் நீதி கிடைக்கும் என மேற்குலக நாடுகள் எதிர்பார்த்து நிற்பது இலங்கையின் ஆட்சி முறையை அறியாமையாகும். கடந்த ஒரு வருடத்திற்கு முதல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை நடத்தி நீதியை வழங்குமாறு ஒரு வருட காலஅவகாசத்தை கொடுத்திருந்தது. அதே காலஅவகாசத்தை இம்முறையும் இப்பிரேரணை மூலம் வழங்கப்பட்டிருக்கிறது.
இறுதி கட்ட போரின் போது நடந்த குற்றங்களுக்கு உள்நாட்டு பொறிமுறையின் கீழ் விசாரணை செய்யப்பட வேண்டும் என கோருவது குற்றவாளிகளிடமே விசாரணையை நடத்துமாறு கோரும் வேடிக்கையான நடவடிக்கையாகும்.
இராணுவம் புரிந்த குற்றங்களுக்கு சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையின் கீழான விசாரணை என்பது இராணுவ நீதிமன்ற விசாரணையாகும். சிறிலங்கா இராணுவமும் சிறிலங்கா அரச உயர்பீடமும் புரிந்த போர்க்குற்றங்களுக்கு சிறிலங்காவின் இராணுவ நீதிமன்றில் நீதி கிடைக்கும் என சர்வதேசம் எதிர்பார்ப்பது மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானதாகும்.
இந்த கூட்டத்தில் பார்வையாளராக கலந்து கொண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்னுடன் பேசுகின்ற போது குறிப்பிட்ட விடயங்கள் முக்கியமானதாகும்.
கடந்த முறை இது போன்ற தீரமானம் இச்சபையில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் இலங்கையில் நிலமைகள் மோசமடைந்தே சென்றிருக்கிறது. ஆட்கடத்தல், கொலை, நீதித்துறை மீதான தலையீடுகள், காணி அபகரிப்பு, ஊடக அச்சுறுத்தல் என சிறிலங்காவின் அடக்குமுறை அதிகரித்து சென்றிருக்கிறதே தவிர குறையவில்லை, எனவே இம்முறையும் அதே தீர்மானத்தை நிறைவேற்றுவதால் இலங்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படப்போவதில்லை என தெரிவித்தார்.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் தமிழரின் நிலை சீரடையப்போவதில்லை. எனினும் இத்தீர்மானத்தின் படி அடுத்த ஆறு மாத காலப்பகுதியில் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் நாயகம் சமர்ப்பிக்க போகும் அறிக்கை தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வு கிடைக்கும் வகையில் அமைய வேண்டும், அதற்காக தமிழர் தரப்பு அனைவரும் இணைந்து வேலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இப்பிரேரணையில் இன்னும் ஒன்றையும் குறிப்பிடவேண்டும், 749 சொற்களை கொண்ட இந்த பிரேரணை நகலில் தமிழர் என்ற சொற்பதம் எங்கும் இடம்பெறவில்லை.
இந்த பிரேரணைக்கு ஆதரவாக பேசும் நாடுகளும் சிறிலங்காவை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என எண்ணுகின்றனவே தவிர பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என செயற்படுகிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.