12 மார்., 2013


இலங்கை தமிழர் பிரச்சனை: பாராளுமன்றத்தில் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு
பாராளுமன்றம் இன்று கூடியதும் சபாநாயகர் மீராகுமார், முன்னாள் உறுப்பினர் வீரென்ஷா மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தார். அதை தொடர்ந்து இலங்கை
தமிழர் உள்பட பல்வேறு பிரச்சனைக்காக அமளி ஏற்பட்டது. இதனால் பாராளுமன்றம் முடங்கியது.

தி.மு.க. பாராளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவையின் மைய பகுதிக்கு வந்து பிரபாகரனின் 12 வயது மகன் பிணை கைதியாக வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட படத்தை காண்பித்து கோஷமிட்டார். மற்ற தி.மு.க. உறுப்பினர்களும் கோஷமிட்டனர். 
இதேபோல அ.தி.முக. உறுப்பினர்களும் அவையின் மைய பகுதிக்கு வந்து இலங்கை தமிழர் பிரச்சனையை கிளப்பினார்கள். பாரதீய ஜனதா உறுப்பினர்கள் சோனியாவின் மருமகன் வதோராவின் நில மோசடி விவகாரம் தொடர்பாக கோஷமிட்டனர். 
இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் சபாநாயகர் கேள்வி நேரத்தை எடுத்தார். உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவரால் சபையை நடத்த இயலவில்லை. இதை தொடர்ந்து சபாநாயகர் மதியம் 12 மணி வரை ஒத்தி வைத்தார். பின்னர் அவை கூடியதும் இலங்கை தமிழர் உள்பட பல பிரச்சனைக்காக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை மீண்டும் கூடியது இதே பிரச்சினை பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. எனவே, நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. 
டெல்லி மேல்சபையிலும் இலங்கை தமிழர், நில மோசடி உள்பட பல்வேறு பிரச்சினை கிளப்பப்பட்டது. தொடர்ந்து அமளியும் ஏற்பட்டது. இதனால் மேல்சபையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.