12 மார்., 2013


சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டி இன்று தொடங்குகிறது. இதில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால் முதல் நிலை வீராங்கனையாக களமிறங்குகிறார்.
நாளை நடைபெறும் மகளிர் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டத்தில் சாய்னா, தரநிலையில் 40-வது இடத்தில் உள்ள ஃப்ரான்ஸ் வீராங்கனை சஷினா விக்னேஸ்வரனுடன்(தமிழ் பெண்மணி ) மோதுகிறார். இருவரும் இதற்கு முன்பு 2011-ம் ஆண்டு ஒரு போட்டியில் விளையாடியுள்ளனர். அதில் சாய்னாவே வெற்றி பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் முன்னணி சீன வீராங்கனைகள் பங்கேற்கவில்லை. மேலும் தரநிலையில் பின்தங்கியுள்ள வீராங்கனைகளுடன் காலிறுதி போட்டி வரை சாய்னா மோதும் வகையிலேயே போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இதனால் நடப்பு சாம்பியனான சாய்னா நேவால் மீண்டும் பட்டம் வென்று ஹாட்ரிக் சாம்பியனாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற சாய்னா, கடந்த அக்டோபரில் நடைபெற்ற டென்மார்க் ஓபன் பட்டத்தை தவிர வேறு எந்தப் பட்டத்தையும் கைப்பற்றவில்லை.