13 அக்., 2013

கொழும்பு வந்த சனல் 4 ஊடகவியலாளரால் கிலிகொண்ட சிறிலங்கா பாதுகாப்புத்தரப்பு

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் ஒருவர், சிறிலங்கா வந்துள்ளதாகத் கிடைத்த தகவலை அடுத்து, கடந்தவாரம் பாதுகாப்பு அதிகாரிகள், உச்சக்கட்ட விழிப்பு நிலையில் இருந்ததாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

கொழும்பிலுள்ள ஒரு அடுக்குமாடியில், சனல் 4 ஊடகவியலாளரும், அவரது துணையும், தங்கியுள்ளதாக புலனாய்வு அமைப்புகள், தீவிரவாத விசாரணைப் பிரிவுக்குத் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில், குறிப்பிட்ட பிரித்தானிய தொலைக்காட்சி ஊடகவியலாளரும் அவரது துணையும், அடிக்கடி சிறிலங்கா வந்து செல்வதும், அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காகவே வந்திருந்ததும் தெரியவந்தது.

எனினும், அவர்கள் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் தகவல்களைத் திரட்டுவதற்காக வந்தனரா என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரம் காட்டினர்.

அத்துடன், அவர்கள் தங்கியிருந்த அடுக்குமாடியின் முகாமையாளரிடம் கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவின் போர்க்குற்றங்களை சனல் 4 தொலைக்காட்சி அம்பலப்படுத்தி வருவதால், அதன் மீது சிறிலங்கா கடும் சீற்றத்தில் இருக்கிறது.

அடுத்த மாதம் கொழும்பில் கொமன்வெல்த் உச்சி மாநாடு நடக்கவுள்ள சூழலில், சனல் 4 தொலைக்காட்சி புதிய சர்ச்சைகளை கிளப்பிவிடுமோ என்று சிறிலங்கா அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது.