புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

தமிழ் மக்களின் அழுத்தங்களால் திணறுகிறதா இந்தியா.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்த வாரம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த பயணத்தின் போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்துப் பேசியிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது சல்மான் குர்ஷித் வெளியிட்டிருந்த ஒரு கருத்து முக்கியமானது.
வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அளித்துள்ள பேராதரவு இந்தியாவுக்கு அரசியல் ரீதியில் பல்வேறு அழுத்தங்களைக் கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தக் கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தளவு பெரிய வெற்றியைப் பெறும் என்று இந்தியா எதிர்பார்த்திருக்கவில்லை என்பதைப் புலப்படுத்துகின்றது.
அதேவேளை வடக்கிலுள்ள தமிழ் மக்கள் இந்தளவுக்கு துணிச்சலான முடிவுகளை வெளிப்படுத்துவார்கள் என்றும் இந்தியா எதிர்பார்த்திருக்கவில்லைப் போலும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் கடைசியாக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்த போது, தேர்தலில் வெற்றி பெற்று உங்கள் பலத்தைக் காட்டுங்கள், மிச்சத்தை தாம் பார்த்துக் கொள்வதாக குறிப்பிட்டதாக, தேர்தல் காலத்தில் கூட்டமைப்புத் தலைவர்கள் பலரும் கூறியிருந்தனர்.
அது தேர்தல் பிரசாரத்துக்கான கதையாக இல்லாதிருந்தால், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை நிரூபித்துக் கொண்டு விட்டது என்பதை நிச்சயம் இந்தியா உணர்ந்திருக்கும்.
இதனால் தான் இந்தியா மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் குறிப்பிட்டிருக்கக் கூடும்.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் ஜனநாயக வரைமுறைகளுக்கு அமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தை நிரூபித்து விட்டது.
அதுபோலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீதுள்ள நம்பிக்கையையும் தமிழ் மக்கள் தெளிவாக வெளிப்படுத்தி விட்டனர்.
இதுவரை காலமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை விடுதலைப் புலிகளின் கோரிக்கைகள் என்றும் பிரபாகரனின் கனவு என்றும் அரசாங்கம் கூறிவந்தது.
அதனை உலக நாடுகள் பலவும் நம்பவும் தவறவில்லை.
இந்தச் சந்தேகம் இந்தியா உள்ளிட்ட நாடுகளிடம் கூட இருக்கத்தான் செய்தது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற பெயரில், தமிழ் மக்கள் எதிர்பார்க்காததை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகிறதா என்ற சந்தேகம் இந்தியாவுக்கும் இருந்திருக்கலாம்.
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அளிக்கப்பட்ட பெருவாரியான வாக்குகள் மூலம் அது விடுதலைப் புலிகளினதோ, தமிழ் தேசியக் கூட்டமைப்பினதோ எதிர்பார்ப்புகள் அல்ல, தமது எதிர்பார்ப்புத் தான் என்று தமிழ் மக்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
இதனால் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை இந்தியா, தன் மீதான அரசியல் அழுத்தங்களாக உணரத் தலைப்பட்டுள்ளது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகள் அபிலாசைகளை விடுதலைப் புலிகளின் அபிலாசைகளுடன் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்த இந்திய ஊடகங்கள் பலவும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் தான் விழித்துக் கொண்டுள்ளன.
தமிழ் மக்கள் மேலதிகமான அதிகாரங்களைக் கோருகின்றனர் தன்னாட்சி உரிமைகளுக்காக வாக்களித்துள்ளனர் என்று இந்தியாவின் தேசியவாத சிந்தனை கொண்ட ஊடகங்கள் பலவும் கருத்துகளை வெளியிட்டன.
தெரிவுக்குழுவைப் புறக்கணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை விமர்சித்தும் அவ்வாறு புறக்கணிப்பது சரியல்ல என்றும் ஆலோசனை கூறிய பெரும்பாலான இந்திய ஊடகங்கள், இப்போது இலங்கை அரசாங்கமே நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறத் தொடங்கி விட்டன.
ஊடகங்கள் மத்தியில் இத்தகைய மாற்றத்தை வெளிப்படையாகக் காண முடிகின்ற போது இந்திய அரசியல் மட்டத்தில், இந்தத் தேர்தல் முடிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தத் தேர்தல் முடிவு தமிழ் மக்களுக்கு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை இந்தியாவுக்கு உணர்த்தியுள்ளது.
13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்துவதற்கு அனுமதிக்காமல் இருப்பது மட்டுமன்றி, இன்னும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட ஒரு அரசியல் தீர்வையும் பெற்றுக் கொடுக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு உள்ளது.
நடுநிலையோடு சிந்திக்கும் ஒரு நாடாக இந்தியா இருந்தால் குறைந்த மட்டத்திலான ஒரு தீர்வுக்காக அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலைக்கு உள்ளானதற்கு தாமும் பொறுப்பு என்ற ’குற்ற உணர்ச்சி அதற்கு ஏற்பட்டிருக்கும்.
தமிழர்கள் அரசியல் வழிமுறைகளுக்கு அப்பால் தமது பலத்தை இழந்து போனதற்கு இந்தியாவும் ஒரு காரணம்.
படைபல ரீதியாக விடுதலைப் புலிகள் பலமாக இருந்தவரை, இதைவிட அதிகமான தீர்வுகள் குறித்தே பேசப்பட்டன. ஆனால் இப்போது அந்த நிலை இல்லை.
புலிகளின் படைபல அழிப்புக்கு துணைபோன இந்தியாவுக்கு, இந்த நிலைக்கு தாமும் காரணம் என்ற உறுத்தல் இல்லாதிருக்க முடியாது.
எனவே தேர்தலில் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் கருத்து கூடுதல் அதிகாரங்கள் தேவை என்ற எதிர்பார்ப்பு, இந்தியாவுக்கு அரசியல் ரீதியாக இன்னும் அழுத்தங்களைக் கொடுத்திருப்பது ஆச்சரியமில்லை.
ஏனென்றால் 26 ஆண்டுகளுக்கு முன்னர் இனப்பிரச்சினைக்குத் தீர்வாகத் தான் முன்வைத்த 13வது திருத்தச் சட்டத்தைக் கூட முழுமையாக நடைமுறைப்படுத்த வழி தெரியாத நிலையில் தான் இந்தியா இப்போது இருக்கிறது.
13வது திருத்தச் சட்டத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளை இந்தியா தடுத்திருந்தாலும் அது நிரந்தரமானது அல்ல.
அதைவிட 13ற்கு அப்பாற்பட்ட தீர்வு ஒன்றை இந்தியா இப்போது பேசத் தொடங்கியிருக்கிறது.
இத்தகையதொரு தீர்வுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக இந்தியா அடிக்கடி கூறிக் கொண்டாலும், இதையெல்லாம் செயற்படுத்தும் பொறிமுறை பற்றி இந்தியா சிந்திக்கவுமில்லை. அதற்கான பொறுப்பை ஏற்கவும் தயாராக இல்லை.
இலங்கை ஒரு இறைமையுள்ள நாடு என்பதால் தீர்வையோ, அதற்கான காலக்கெடுவையோ தம்மால் நிர்ணயிக்க முடியாது என்று கூறும் இந்தியா, இன்னொரு பக்கத்தில்  தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது.
இந்த நழுவல் நிலையில் இருந்து மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னரும் இந்தியா விடுபடவில்லை.
ஒரு பக்கத்தில் தனக்கான அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக இந்தியா கூறினாலும், அந்த அழுத்தங்களைக் குறைப்பதற்கான செயல்முறைகளை வகுக்கத் திராணியற்று நிற்கிறது புதுடில்லி.
இந்த இரண்டக நிலையில் இருந்து புதுடில்லி விடுபடாத வரை, இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவினால் காத்திரமான பங்கை ஆற்றமுடியாது.
வடக்கில் உள்ள தமிழர்கள் தமது அபிலாசைகளை உறுதியாக வெளிப்படுத்தி விட்ட நிலையில் அதற்கு இந்தியாவினால் இன்னொரு சாயம் பூச முடியாது.
அதேவேளை தன்மீது அதிகரித்துள்ள அழுத்தங்களைக் குறைப்பதற்கான முயற்சிகளில் இந்தியா இறங்காத வரை, அதன் தலைப்பாரம் இன்னும் கூடுமே தவிர குறையாது.
ஹரிகரன்

ad

ad