13 அக்., 2013

மன்னார் ஆயரின் வேண்டுகோளுக்கிணங்க வடமாகாணசபையின் ஒன்பது அங்கத்தவர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு ஒத்திவைப்பு
மன்னார் ஆயர் வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் வேண்டுகோளை ஏற்று நாளை முல்லைத்தீவில் நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒன்பது உறுப்பினர்களதும் பதவியேற்பு வைபவம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளதாவது:
நாளை 14ஆம் திகதி முல்லைத்தீவில் நடைபெறவிருந்த வடக்கு மாகாணசபையின் ஒன்பது உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் என்னுடன் கலந்துரையாடினார்.
தற்பொழுது கூட்டமைப்பிற்குள் ஏற்பட்டுள்ள மனத்தாங்கல்கள் தீர்க்கப்பட வேண்டியதும் தீர்க்கப்படக்கூடியதும் ஆகும்.
ஆகவே நாளை நடைபெறவுள்ள பதவிப்பிரமாணத்தை நீங்கள் ஒத்திவைத்து அதனை மாகாணசபையின் தொடக்கத்தின்போதோ அல்லது அதற்கு முன்பாகவோ செய்வதினூடாக கூட்டமைப்பின்மேல் நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும்படி கேட்டிருந்தார்.
அவரது கோரிக்கை தொடர்பாக கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளைச் சேர்ந்த சித்தார்த்தன் அவர்களுடனும் சிவாஜிலிங்கம் அவர்களுடனும் கலந்துரையாடப்பட்டது.
அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் அதனை உறுதியான அமைப்பாக ஒருகட்சியாகப் பதிவு செய்து அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் தான் சகல கட்சிகளையும் அழைத்து மிகவிரைவாகப் பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இவற்றைச் சரியான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு ஏதுவாக அவரது கருத்தை ஏற்று நாளை நடைபெறவிருந்த பதவிப்பிரமான வைபவத்தை நாங்கள் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளோம்.
இதனை சபையின் ஆரம்ப நிகழ்வின்போதோ அல்லது அதற்கு முன்னதாக இன்னொரு திகதியிலோ எண்ணியுள்ளோம் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.