13 அக்., 2013

சிறிலங்காவின் வடக்கில் பலர் பாலியல் தொழிலாளிகளாக மாறுகின்றார்களா?

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" 

இவ்வாறு IRIN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி ஆய்வில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவின் முன்னைய போர் வலயத்தில் பெண்கள் குடும்பங்களைத் தலைமை தாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்களில் பலர் பாலியல் தொழிலாளிகளாகவும் மாறிவருவது அதிகரித்துள்ளது.

சிறிலங்காவின் வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் வாழும் 7000 வரையான பெண்கள் தமது வருமானத்தை அதிகரிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக உள்ளுர் அமைப்பு ஒன்றின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"தமது கணவன்மாரை இழந்த அல்லது காணாமற் போனவர்களின் மனைவிமார்கள் தமது குடும்பத்தைக் கொண்டு நடாத்துவதற்காகப் பாலியல் தொழிலில் ஈடுபடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கணிசமான பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில் தயக்கம் காண்பிக்கின்ற போதிலும், தமது வருவாயைப் பெருக்குவதற்காகவும் குடும்பச் செலவுகளைச் சமாளிப்பதற்காகவும் பெண்களில் பலர் பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளனர்" என போரால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஆய்வினை மேற்கொண்ட வடக்கில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனமான 'போரால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பின்' தலைவி விசாகா தர்மதாச தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் வடக்கில் 59,000 இற்கும் மேற்பட்ட பெண்கள் தமது குடும்பங்களைத் தலைமை தாங்குவதாக சிறிலங்கா அரசாங்கத்தால் 2012ல் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "தமது தந்தையர்கள், கணவன்மார் மற்றும் சகோதரர்களால் முன்னர் சுமைதாங்கப்பட்ட குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தற்போது இந்தப் பெண்கள் தாங்குகிறார்கள். தமது குடும்பங்களைப் பொருளாதார ரீதியில் பாதுகாக்க வேண்டியவர்களாக இவர்கள் உள்ளனர். வறுமை மற்றும் தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கான தெரிவுகள் காணப்படாமை போன்றன இந்தப் பெண்கள் பாலியல் தொழிலாளிகளாக மாறவேண்டிய நிலையை உருவாக்குகின்றன" என தர்மதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"சிறிலங்காவின் வடக்கில் இராணுவத்தினரின் நிலைகொள்ளல் அதிகரித்துள்ளமை, தெற்கிலிருந்து வடக்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடுவதற்காக தொழிலாளர்கள் கொண்டுவரப்படுதல் போன்றன வடக்கில் பாலியல் தொழில் அதிகரிப்பதற்கான பொதுவான காரணங்களாகக் காணப்படுகின்றன" என தர்மதாச மேலும் தெரிவித்தார்.

இதற்கும் மேலாக, புலம்பெயர் தமிழர்கள் தமது சொந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக வடக்கிற்கு வருகைதருவது அதிகரித்துள்ள நிலையில் இங்கு பணத்திற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாவட்டத்தின் தொண்டுப் பணியாளரான சாந்தினி வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் வடக்கில் சாதி மற்றும் வர்க்கம் போன்றன கலாசாரத்தில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன. இந்நிலையில் இங்கு பாலியல் தொழில் என்பது தகாத ஒன்றாகவே நோக்கப்படுகிறது. இவ்வாறான ஒரு கலாசாரப் பின்னணியில் வாழும் தமிழ்ப் பெண்கள் முதலில் தமது தந்தையர்களாலும், திருமணத்தின் பின்னர் தமது கணவன்மாராலும், பின்னர் தமது மகன்களாலும் பராமரிக்கப்படுவதுடன், கட்டுப்படுத்தப்படுகின்றனர்.

மூன்று பத்தாண்டுகால யுத்தத்தின் பின்னர், தமது கணவன்மாரை இழந்து வாழும் பெண்கள் இவ்வாறான பாரம்பரியம் மற்றும் கலாசாரத்திலிருந்து வெளியேறி தாமே தமது குடும்பத்தின் சுமையைத் தாங்கவேண்டியவர்களாக உள்ளனர். தமது கல்வி மற்றும் விவசாயம் தவிர ஏனைய தொழில்களில் இந்தப் பெண்கள் ஈடுபடுவது இங்கு வரவேற்கப்படவில்லை.

"இந்தக் கட்டமைப்புக்கள் மாற்றமடைந்துள்ளன. இந்தப் பெண்களின் வாழ்வியல் மாற்றமடைந்துள்ளது. இவர்கள் தமது கிராமங்களில் பாலியல் தொழிலில் ஈடுபட நேர்வதால் இதனை இவர்கள் வாழும் சமூகம் அறிந்துகொள்கிறது" என சாந்தினி வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காச் சட்டத்தின் பிரகாரம் பாலியல் தொழில் என்பது சட்டரீதியற்றதாகவே நோக்கப்படுகிறது. "போர் காரணமாக பல ஆயிரக்கணக்கான தமிழ் ஆண்கள் இறந்துள்ளனர். காணாமற்போயுள்ளனர். தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபடுவதால் இவர்களின் வாழ்வியலை மேம்படுத்துவதற்கான உதவிகளை வழங்க வேண்டும் நாம் கோருகிறோம்" என போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் பணிபுரியும் 'மன்னார் பெண்கள் அபிவிருத்திச் சங்கம் மற்றும் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கான மன்னார் பெண்கள் அமைப்பு' போன்றவற்றின் நிறுவுனரான சிறீன் சரூர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாலியல் தொழில் தவிர்ந்த ஏனைய தொழில் வாய்ப்புக்களில் ஈடுபடுவதற்கான வழிகள் உருவாக்கப்பட வேண்டிய தேவையுள்ளது என 2010 தொடக்கம் இன்றுவரை 1500 பெண்களைத் தலைமை தாங்கும் குடும்பங்கள் மத்தியில் ஆய்வை மேற்கொண்ட யாழ்ப்பாணத்தில் செயற்படும் பெண்கள் மற்றும் அபிவிருத்திக்கான மையத்தின் இயக்குனரான சறோஜா சிவச்சசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கில் வாழும் மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாசாரம் காரணமாக இங்கு பாலியல் வர்த்தகம் என்பது மிகமெதுவாகவே வேரூன்றுவதாக நம்பப்படுவதாக சறோஜா சிவச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

"பாலியல் தொழிலை விடுத்து வேறு தொழில்களில் பெண்கள் ஈடுபடுவதை ஊக்குவிப்பதற்கு நாம் முயல்கிறோம். ஆனால் தமக்கு மிகக் குறைவான தெரிவே உள்ளதாக பெண்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நாங்கள் இந்தப் பெண்களுக்கு கருத்தடை உபகரணங்களை வழங்குவதுடன் இவர்கள் தம்மைத் தாமே பாதுகாப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கிவருகிறோம்" என மன்னார் மாவட்டத்தில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

"இந்தப் பிரச்சினை எவ்வளவு தூரம் உள்ளது என்பதை நாம் அறியாமலிருக்கலாம். சிறிலங்காவில் பாலியல் தொழில் என்பது சட்டரீதியற்றதாகும். இது தொடர்பான ஆய்வைச் சரியாக மேற்கொள்ளாது இதில் எவ்வளவு பேர் ஈடுபடுகின்றனர் என்பதைக் கூறுவது கடினமானதாகும். ஆனால் இதனைக் கவனத்திற் கொண்டு நடவடிக்கை எடுக்கவேண்டும்" என சிறிலங்காவின் சமூக சேவைகளின் பிரதி அமைச்சர் சந்திரசிறி சூரியராய்ச்சி தெரிவித்துள்ளார்.

வடக்கில் வாழும் தமிழ் மக்களின் மிகப் பிரதான மதமாக இந்துமதமே காணப்படுகிறது. இவர்களின் பாரம்பரிய சமூகக் கட்டமைப்பின் பிரகாரம் இங்கு பாலியல் தொழில் தொடர்பாக ஆய்வை மேற்கொள்வதென்பது மிகவும் கடினமானதாகும். ஆனால் தமது கணவன்மாரை இழந்த பெண்களின் இயல்புநிலையானது மீளக்கொண்டுவருவது மிகவும் கடினமானதாகும். இதனல் இவர்கள் தமக்கான வாழ்வை மேம்படுத்துவதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர்.

"நான் ஒரு பாலியல் தொழிலாளியாக இருப்பதை விரும்பவில்லை. நான் மிகவும் மதிக்கப்படும் ஒரு இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவள். போரின் போது எனது தந்தையும் கணவனும் இறந்துவிட்டனர். மூன்று பெண்களைக் கொண்ட எமது குடும்பத்தில் நான் மூத்த பெண். நான் எனது அம்மா, இரண்டு சகோதரிகள் மற்றும் எனது ஒரேயொரு மகன் ஆகியோரைப் பராமரிப்பதற்காக இத்தொழிலில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டேன்" என 20 வயதில் தனது கணவனை இழந்து தற்போது 29 வயதான கிளிநொச்சியைச் சேர்ந்த வாசுகி இராமலிங்கம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தெரிவித்தார்.

26 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் தொடர்ந்தது. சிறிலங்காவில் 12 சதவீதத்தைக் கொண்ட தமிழ் மக்களுக்கு தனியான நாடு ஒன்றைப் பெற்றுக் கொடுப்பதற்காக புலிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மே 2009ல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இந்த யுத்தத்தில் 60,000 வரையானோர் தமது உயிர்களை இழந்தனர்