13 அக்., 2013

கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ் கூட்டமைப்பு எத்தனிப்பது பகல்கனவு!- அருண் தம்பிமுத்து
வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனால் கிழக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை கொண்டுவர தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தனித்தால் அது அவர்கள் காணும் ஒரு பகல்கனவாகத்தான் இருக்கு முடியும்.
என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்புத்
தொகுதியின் அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதிக்கான காரியாலயத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இதுவரைக்கும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது போல்தான் இந்த அதிகாரங்கள் கிடைத்ததும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மக்களை மேலும் ஏமாற்றிப் பிழைப்பார்கள் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
இறுதி யுத்தத்திலும், கடந்த முப்பது வருடங்களாகவும் மக்கள் அழிவுகளைச் சந்தித்த போது சிந்திக்காது வாய்மூடி மெளனம் காத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது காணியும் பொலிஸ் அதிகாரமும் தேவை என்று கூறுவது மிகவும் நகைப்புக்குரியது. இதனை மக்கள் மிகவும் ஆழமாக அறிந்து கொள்ளவேண்டும்.
1987ல் வடக்கு கிழக்கு இணைந்திருந்தது. அப்போது காணி பொலிஸ் அதிகாரங்களை கேட்காத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது வடக்கு கிழக்கு பிரிந்தவுடன் தமக்கு காணி பொலிஸ் அதிகாரங்களைக் கேட்டு கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர்.
ஏற்கனவே கிழக்கில் 48 வீதமிருந்த தமிழ் மக்கள் 1987 காலப் பகுதியில் கிழக்கில் 44 வீதமானார்கள். ஆனால் தற்போது அறிக்கைகளில் 39 வீதமுள்ளதாக கணிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. இருந்தாலும் கிழக்கில் தற்போது 34 வீதம்தான் தமிழ் மக்கள் உள்ளார்கள்.
இந்த நிலையில் வடக்கிற்கு காணி பொலிஸ் அதிகாரங்களை அமுல்படுத்துவது பற்றி பேச வேண்டுமாக இருந்தால் விக்னேஸ்வரனிடம்தான் பேச வேண்டும். கிழக்கிற்கு விக்னேஸ்வரனிடம் பேச வேண்டிய அவசியமில்லை. கிழக்கிற்கு கிழக்கு முதலமைச்சர் அப்துல் மஜீத்திடம் தான் பேசவேண்டும். என்றார் அருண் தம்பிமுத்து.