புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 அக்., 2013

சகலகலாவல்லி மாலை 
குமரகுருபர சுவாமிகள் கலைமகளை வேண்டியப் தமிழில் பாடிய பாமாலை ஆகும். குமரகுருபர சுவாமிகள் தனது ஞான தேசிகரான தருமபுர ஆதீன நான்காவது குருமுதல்வராக விளங்கிய ஸ்ரீமாசிலாமணி தேசிகரிடத்து விடைபெற்று காசிக்குச் சென்றார். அப்பொழுது தில்லி பாதுஷாவாக விளங்கிய முகம்மதிய மன்னனை வாதிலே வெல்லக் கருதி அம்மன்னனது மொழியாகிய இந்துஸ்தானியை அறிந்து கொள்வதற்காக சகலகலாவல்லி மாலை என்னும் பாமாலையைப் பாடினார்.
அழகிய தமிழ் மொழியில் பாடப்பட்ட சகலகலாவல்லி மாலை வெண்டாமரைக்... எனும் பாடலில் தொடங்கி மண்கண்ட வெண்குடை.. எனும் இறுதிப் பாடலில் முடிகிறது. இதில் பத்துப் பாடல்கள் அடங்குகின்றன. ஈழத்தில் நவராத்திரி காலங்களில் ஒன்பது நாளும் சகலகலாவல்லி மாலை சைவ மக்களால் பாடப்பட்டு வருகின்றது.

******************************************
குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை

வெண் தாமரைக்கு அன்றி நின் பதம் தாங்க என் வெள்ளை உள்ளத்
தண்டாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க வொழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய் தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய் பங்கயாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைப் பாற்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.

அளிக்கும் செழுந்தமிழ்த் தெள்அமுதுதார்ந்து உன் அருட் கடலில்
குளிக்கும் படிக்கென்று கூடும் கொலொ உளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.

தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியும் சொற் சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவினின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.

பஞ்சப் பிதந்தரு செய்ய பொற்பாதம் பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராது என்னே நெடுந்தாட் கமலத்
தஞ்சத் துவசம் உயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக்
கஞ்சத்தவி சொத்திருந்தாய் சகல கலாவல்லியே.

பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுதெளிது எய்த நல் காயெழு தாமறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளால் பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும் படிநின் கடைக்கணல் காயுளங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே சகல கலாவல்லியே.

சொல்விற் பனமும் அவதான முங்கவி சொல்ல வல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளினாசனஞ்சேர்
செல்விக்கு அரிது என்றொரு காலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெரும் செல்வப் பேறே சகல கலாவல்லியே.


சொற்கும் பொருட்கும் உயிரா மெய்ஞ் ஞானத்தின் ஒற்றமென்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார் நிலந்தோய் புழைக்கை
நற்குஞ் சரத்தின் பிடியோடு அரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாயே சகல கலாவல்லியே.

மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பிலும் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலாவல்லியே.

ad

ad