ஆசிரியர்கள் போராட்டத்தினை குழப்பியடிக்க மேற்கொண்ட முயற்சி தோல்வியில்!
யாழ்.கோப்பாயைச் சேர்ந்த ஆசிரியர் நிரூபன் கடந்த வருடம் செப்ரம்பர் 19ஆம் திகதி காணாமல் போன நிலையில் இந்த வருடம் மார்ச் 12ஆம் திகதி மாங்குளம் பிரதேசத்தில் காணி ஒன்றில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்றில் எலும்புக் கூடு ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் மறுநாள் நிரூபனின் சகோதரி இந்த எச்சம் தனது சகோதரனுடையது என்பதை உறுதிப்படுத்தியிருந்தார். இந்தச் சம்பவங்களின் தொடராக நிரூபன் காணாமல் போனமை, சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் நீதியான விசாரணை வேண்டும் எனக் கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.
இதன் அடிப்படையில் இன்று பிற்பகல் 2.30மணியளவில் உடைகளில் கறுப்புப்பட்டி அணிந்து திரண்ட ஆசிரியர்கள் கண்டனக் கோசங்களை எழுப்பினர், “ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி!”, “ஆசிரியர் நிரூபனை ஏன் கொன்றாய்?”, “ஆசிரியர்களை சுதந்திரமாக சேவை செய்ய அனுமதி”, “நிரூபனின் கொலைக்கு விசாரணை எங்கே?”, “நீதி கேட்பவர்களை கைது செய்து பழிவாங்காதே”, “இலங்கை எலும்புக்கூடுகளின் நாடா?” , “அரசே! ஆசிரியர் நிரூபனின் எலும்புக்கூட்டுக்கு பதில் கூறு” போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.