புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

ஐ.நா வில் கருத்து தெரிவித்த வைத்தியருக்கு இரகசிய பொலீஸ் அழைப்பாணை

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இலங்கையில் நடந்த அவலங்கள் இன்று உலகின் கண்களை திறந்துள்ளதாகவும் ஆனாலும் ஐ.நாவின் மனித உரிமை சபையின் உறுப்பு நாடுகளுக்கு தெளிவு படுத்தும்
நோக்கில் கலந்துரையாடல்களை சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்னெடுத்தன.
இந்தவகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு இறுதி போர் முடிவடையும்வரை அங்கே கடமையாற்றியிருந்த வைத்திய கலாநிதி திரு வரதராஜா அவர்கள் அங்கு இடம்பெற்ற சம்பவங்களை முழுமையாக விபரித்திருந்தார்.
அவர் கருத்து தெரிவித்த நிலையில் இலங்கையில் நேற்று இரகசிய பொலிஸ் முன்னிலையில் மீண்டும் ஆஜராகுமாறு வீட்டுக்கு கடிதம் வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், உங்களால் வருகை தர முடியாது விடின் உங்களுடைய தங்கையை பொலிஸுக்கு அனுப்பி வைக்குமாறும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் வடக்கில் இடம்பெற்ற யுத்தம் நிறைவடையும் வரையிலும் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் நோயாளர்களுக்கு சிகிச்சையளித்த அரச வைத்தியர்கள் பலரில் டாக்டர் டி.வரதராஜாவும் ஒருவராவார்.
அவர் உள்ளிட்ட வைத்தியர்கள் ஐந்து பேர், அந்த நாட்களில் யுத்த களம் தொடர்பில் பி.பி.சி சிங்கள சேவை உள்ளிட்ட பல ஊடகங்களுக்கு தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டனர். இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வைத்தியசாலைகளின் மீது ஷெல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் சாதாரண மக்கள் காயமடைந்தது தொடர்பில் பொய்யான அறிக்கையை வெளியிடவில்லை என்றும் தமிழீழ விடுதலைப்புலி இயக்கத்தினர் எவ்விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கவில்லை எனவும் முல்லைத்தீவில் சேவையாற்றிய வைத்தியர் டி.வரதராஜா தெரிவித்திருந்தார்.
மனித உரிமை கண்காணிப்பகம் ஜெனீவாவில் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, அனுபவத்தை தெரிவித்ததன் பின்னர் பி.பி.சி. சிங்கள செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவருடைய சகோதர வைத்தியர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை கவனத்திற்கொண்டு, பி.பி.சி.யுடனான நேர்காணலை டாக்டர் வரதராஜா நிராகரித்துவிட்டார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னை, நான்காவது மாடியில் தடுத்து வைத்திருந்த காலத்தில், பொய் கூறுமாறு அரசாங்கம் தனக்கு அழுத்தம் கொடுத்தது என்றும் அவர் தனது நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். யுத்த காலத்தில் தான் எவ்விதமான மிகைப்படுத்தல் செய்திகளையும் வழங்கவில்லை என்றும் தான் அக்காலப்பகுதியில் தான் கூறியவை உண்மையானவை என்றும் தான் வழங்கிய செய்திகள் உண்மை என்பதை அங்கிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினரும் ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் எங்களிடம் வருவர். ஆனால், காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து கூறுமாறு புலிகள் எங்களிடம் கூறவில்லை என்றும் டாக்டர் வரதராஜா கூறியுள்ளார். யுத்தத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்ட மேற்படி ஐந்து வைத்தியர்களும், பல மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டதுடன் 2009ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் திகதி தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது புலிகளின் அச்சுறுத்தலினால் யுத்த களம் தொடர்பில் கருத்துகளை தெரிவித்ததாக கூறினர்.
அதற்கு பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஓமந்தையில் சேவையாற்றுவதற்கு அரசாங்க அனுமதி கிடைத்தது. விசேடமாக நாங்கள் சேவையாற்றிய தற்காலிக வைத்தியசாலைகள் பலவற்றின் மீது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறியுள்ள வரதராஜா, யுத்தத்தின் இறுதி மூன்று மாதத்திற்குள் செஞ்சிலுவை சங்கத்தினால் படுகாயமடைந்த 9,000 பேர், முள்ளிவாய்க்கால் மற்றும் புதுமாத்தளன் ஆகிய பிரதேசங்களிலிருந்து திருகோணமலை மற்றும் வவுனியா ஆகிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.
யுத்த வலயத்தில் 3 இலட்சம் மக்கள் சிக்கியிருந்த வேளையில் அங்கு 80 ஆயிரம் பேர் மாத்திரமே எஞ்சி இருந்தனர் என்று அரசாங்கம் தெரிவித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். மருந்துகள்,சாப்பாடு உள்ளிட்ட சகலதையும் 80 ஆயிரம் பேருக்கும் போதுமான அளவு கொடுத்தோம் என்று அரசாங்கம் கூறியிருந்தது. எனினும் மயக்கமடைய செய்யும் மருந்து இல்லை, இரத்தம் கொடுக்கவில்லை, அதனால் பெரிய பெரிய காயங்கள் ஏற்பட்டவர்கள் மருந்துகள் இன்றி, சிகிச்சை இல்லாமல் மரணமடைந்தனர் என்றும் வைத்தியர் தெரிவித்தார்.
இதேவேளை கைது செய்யப்பட்டு நேற்றுமுன்தினம் விடுதலையான இரு மனிதஉரிமை ஆர்வலர்களும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதற்கு தடை விதிக்கும் உத்தரவு நீதிமன்றில் பெறப்பட்டிருப்பதோடு அவா்களது கடவுச்சீட்டுக்களும் இலங்கை அரசால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
இறுதிப்போர் நடைபெற்றபோது 27.02.2009 இல் அவருடைய நேர்காணல் பகுதி 1


இறுதிப்போர் நடைபெற்றபோது 27.02.2009 இல் அவருடைய நேர்காணல் பகுதி 2

ad

ad