புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

தமிழகத்தில் பிரசாரத்துக்கு தலைவர்கள் படையெடுப்பு சோனியா-நரேந்திரமோடி வருகிறார்கள்

மு.க.ஸ்டாலின்- விஜயகாந்த்
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திறந்த வேனில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர்
நாகப்பட்டினம் தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏப்ரல் 5-ந்தேதி முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு பேசுகிறார்.
பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழகம் முழுவதும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளுக்கும் சென்று திறந்த வேனில் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவடைவதற்கு முன்பே தனது பிரசாரத்தை தொடங்கி விட்ட விஜயகாந்த், நேற்று நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.
பா.ம.க. தலைவர்கள் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோரும் தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று வருகிறார்கள். காங்கிரசுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் மற்றும் தலைவர்கள் பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலைவர்களும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாளை மதுரையில் பிரசாரம் தொடங்குகிறார்.
நரேந்திரமோடி
தேசிய தலைவர்களும் தமிழ்நாட்டில் தீவிர பிரசாரம் செய்ய உள்ளனர். நாடு முழுவதும் தேர்தல் பிரசார பேரணிகளில் பங்கேற்றுவரும் பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திரமோடி ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு 2 முறை வந்து திருச்சி மற்றும் சென்னை வண்டலூரில் நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் பேசினார்.
தற்போது பா.ஜனதா தலைமையில் தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், நரேந்திரமோடி மீண்டும் தமிழகத்திற்கு வந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேரணியில் பங்கேற்க இருக்கிறார்.
வருகிற திங்கட்கிழமை அன்று பொதுச்செயலாளர் முரளிதரராவ் தலைமையில் நடைபெற இருக்கும் தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் நரேந்திரமோடி தமிழகம் வரும் தேதி குறித்து முடிவு செய்யப்படும்.
மன்மோகன்சிங்- சோனியா
தமிழ்நாட்டில் தனித்து களம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் தமிழகம் வருகிறார்கள். அவர்கள் பிரசாரம் செய்யும் தேதி குறித்து விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று, தமிழக தலைவர் ஞானதேசிகன் நேற்று தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் தேசிய தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாட்டில் பிரசாரம் செய்ய இருக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கி உள்ள நிலையில், அகில இந்திய தலைவர்களும் தமிழகத்திற்கு படையெடுக்க இருப்பதை அடுத்து தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

ad

ad