புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மார்., 2014

தண்ணீர் அரசியல் சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது; விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன்
news
குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது. பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல்
முன்னெடுக்கப்படுகிறது என உலக தண்ணீர் தினம் தொடர்பாக வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

தண்ணீர் தினம் தொடர்பில் வெளியிட்ட ஊடகஅறிக்கையிலேயே மேற்கூறப்பட்டவாறு. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பூவுலகில் உயிரிகள் தோன்றுவதற்கும் உயிரிகளின் நிலைத்திருத்தலுக்கும் காரணமாக அமைந்திருப்பது தண்ணீர். ஆனால், இந்த உயிர்த்திரவத்துக்கு இன்று உலகம் பூராவும் பெரும் பற்றாக்குறைவு ஏற்படத் தொடங்கியுள்ளது.

 அதிகரித்துவரும் சனத்தொகையின் எண்ணிக்கையின்படி குடிதண்ணீர், விவசாயம் மற்றும் கைத்தொழில் தேவைகளை ஈடுசெய்ய முடியாத அளவுக்கு மாசுபாடும் காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள வரட்சியும் சேர்ந்து தண்ணீரை அதிகம் தட்டுப்பாடான ஒரு வளமாக ஆக்கிவிட்டுள்ளன.

உலகம் எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்நீர் நெருக்கடி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் திகதியை உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.

உலகில் 800 மில்லியன் மக்கள் குடிப்பதற்குத் தூய குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அசுத்தமான தண்ணீர் காவிவரும் நோய்களால் வாரந்தோறும் 27,000 குழந்தைகள் அநியாயமாகப் பலியாகி வருகின்றன.

அத்துடன் கடும் வரட்சி நிலவும் ஆபிரிக்கப் பகுதிகளில் காய்ந்த  நாக்குகளைச் சிறுநீரால் நனைக்கும் பரிதாபம் உள்ளது. நீர் நெருக்கடிகளை பொருத்தமான வழிமுறைகளில் எதிர்கொள்ளாமல்  இருந்தால் இன்னும் பதினைந்து ஆண்டுகளில் உலக சனத்தொகையில் பாதிப்பேருக்கும் மேல் நல்ல தண்ணீருக்காக அல்லற்பட நேரிடும் என்றும் ஐக்கியநாடுகள் சபை எச்சரித்திருக்கிறது.

தண்ணீரில் மாசுக்களாக இரசாயனங்களும் நோய்க்கிருமிகளும் மாத்திரம் அல்லாமல் கண்ணுக்குத் தெரியாமல் அரசியல் மாசும் கலந்துள்ளது. குளிர்மையை ஏற்படுத்தவல்ல தண்ணீர் சமூகங்களுக்கிடையில் பகை நெருப்பை மூட்டக்கூடிய எரிபொருளாக அரசியல் ஆக்கப்படுகிறது.

மேலும் பற்றாக்குறைவான நீர்வளத்தைப் பங்கு போடுவதில் ஏற்படும் முரண்பாடுகள் தீராத பகையாக முற்றச் செய்யும் தண்ணீர் அரசியலாக சத்தமில்லாமல் முன்னெடுக்கப்படுகிறது.

அத்துடன் நீர் விநியோகத்தை பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் ஒரு பிராந்தியத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தந்திரோபாயமும் இந்தத் தண்ணீர் அரசியலினுள் அடக்கம்.

சுத்தமான குடிநீர் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று. ஆனால் இயற்கை அன்னை தாகம் தீர்க்கவென இலவசமாக வழங்கிய தண்ணீர் இன்றைய பொருளாதார உலகில் விற்பனைப் பண்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

நீராதாரங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு மழைநீரை மண் உறிஞ்சும் வேகத்தைவிட நிலத்தடி நீர் அதிவேகமாக உறிஞ்சப்படுகிறது. போரினால் நலிந்துபோயுள்ள ஈழத்தமிழ்ச் சமூகம் தான் வாழ்வாங்கு வாழ்ந்த மண்ணில் மேன்மேலும் விழுதெறிந்து கிளைக்கத் தண்ணீர் அரசியல் குறித்தும், தண்ணீர்ப் பொருளாதாரம் குறித்தும் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

கூடவே, வீண்விரயமிக்க நீர் பாவனையாலும், மிகையான விவசாய இரசாயனங்களாலும் கடும்வரட்சியினாலும், அளவிலும்   தரத்திலும் தாழ்ந்துபோயிருக்கும் நீர்வளத்தைப் பாதுகாப்பது குறித்துக் காலம் தாழ்த்தாது சிந்திப்பதும் அவசியமாகும்.

உலக தண்ணீர் தினமான  சொட்டுநீரும் எங்கள் சொத்து என்பதை மனதில் பதித்து அரிய வளமான நீர்ச்செல்வத்தைச் சாத்தியமான வழிகளிலெல்லாம்  பேணுவோம் என்று உறுதி ஏற்போம் என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad