தேமுதிக தலைவர் விஜயகாந்த் மக்கள் நலக் கூட்டணிக்கு வந்துவிடுவார் என்று நம்பிக்கையோடு இருக்கிறார் வைகோ.
ஆனால் மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணியா அல்லது பாஜகவுடன் கூட்டணியாக என்ற ஊசலாட்டத்தில் இருக்கிறார் விஜயகாந்த்.
திமுகவுடன் கூட்டணி சேர்ந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராக இருந்ததாக சொன்ன விஜயகாந்த், பின்னர், மக்கள் நலக் கூட்டணிப் பக்கம் சாயத் தொடங்கினார். அதற்கேற்றபடி, வைகோவும் வலிந்து வலிந்து அவரை அழைத்துக் கொண்டே இருந்தார்.
இந்த நிலையில், அண்மையில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் விஜயகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் விஜயகாந்தே முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற வாக்குறுதியை விஜயகாந்துக்கு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத்தொடர்ந்து, விஜயகாந்த், தேசிய அளவில் பெரிய கட்சியான, ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்த பாஜகவுடன் கூட்டணி வைக்கவே அதிகம் விருப்பத்துடன் இருப்பதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனை தொடர்ந்து, திருச்சியில் வைகோ பேசும் போது மீண்டும் விஜயகாந்த்திற்கு மக்கள் நலக் கூட்டணியில் சேர அழைப்பு விடுத்திருக்கிறார். எந்தப் பக்கமிருந்து அழைப்புகள் வந்தாலும் விஜயகாந்த் இன்னும் நேரடியாக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பது குறித்து வாயைத் திறக்கவில்லை.