காமன்வெல்த்: பிரதமர் கலந்து கொண்டால் தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பிக்களும் பதவி விலக வலியுறுத்தல்
காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால், தமிழகம், புதுவையைச் சேர்ந்த 40 எம்.பி.க்களும் பதவி விலக வேண்டும் என புதுச்சேரி இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் வலியுறுத்தி உள்ளது.
அம்மன்றத்தின் நிறுவனர் பெ.பராங்குசம்
வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இலங்கை காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சி உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் தான் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்ய முடியும் எனக் கூறுவது வேடிக்கையாக உள்ளது.
கடந்த 2009-ல் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க இந்திய அரசு உதவி புரிந்தது. சொந்த மண்ணிலேயே வீடுகளை இழந்து அவர்கள் ஆதரவற்றவர்களாக உள்ளனர். வடகிழக்கு மாகாண முதல்வராக விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் எந்த அதிகாரமும் இல்லாத பொம்மை முதல்வர் போல் உள்ளார்.
இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி உரிமைகளைப் பெற்றுத் தர மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்றால் அது அதிபர் ராஜபட்சேவின் போர்க்குற்றங்களை அங்கீகரிப்பது போல் அமையும்.
தமிழக சட்டப்பேரவையிலும் அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஏழரைக் கோடி தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் அலட்சியப்படுத்தக்கூடாது. அம்மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டால் தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் 40 எம்.பி.க்களும் பதவி விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.