7 நவ., 2013

 சிறிலங்காவிற்கு தலையிடி; அன்சாரியும் வரமாட்டார்? 
சிறிலங்காவில் நடக்கவுள்ள பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்க இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் முடிவெடுத்தால், இந்தியக் குழுவுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரியும் தலைமையேற்றுச் செல்லமாட்டார் என இந்தியன் எக்ஸ்பிரஸ்
செய்தி வெளியிட்டுள்ளது.

பொதுநலவாய  மாநாட்டுக்குச் செல்வதா என்பது குறித்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இன்னமும் முடிவெடுக்கவில்லை.

இந்தியப் பிரதர் மாநாட்டைப் புறக்கணிக்க முடிவெடுத்தால், துணைக்குடியரசுத் தலைவர் அல்லது வெளிவிவகார அமைச்சர் இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்குவார் என்று முன்னர் செய்திகள் வெளியாகின.

ஆனால்,மன்மோகன்சிங் பொதுநலவாய  மாநாட்டைப் புறக்கணிக்க முடிவெடுத்தால், அவருக்குப் பதிலாக இந்தியக் குழுவுக்கு துணைக்குடியரசுத் தலைவர் தலைமை தாங்கிச் செல்லமாட்டார் என்று தெரியவந்துள்ளது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தே இந்தியக் குழுவுக்குத் தலைமை தாங்குவார்.

2011ம் ஆண்டில் பேர்த்தில் நடந்த பொதுநலவாய  மாநாட்டுக்கு, பிரதமர் செல்லாத நிலையில், துணைக் குடியரசுத் தலைவரே பங்கேற்றிருந்தார்.

அரசியல் நிர்ப்பந்தங்களினால், பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்க முடியாது போனால், அவருக்குப் பதிலாக துணைக்குடியரசுத் தலைவரை அனுப்புவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஆனால், பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டைப் பறக்கணிப்பதன் மூலம், 13வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக சிறிலங்காவுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனுப்ப முற்படும் போது, துணைக்குடியரசுத் தலைவரை அனுப்பினால் இந்தியக் குழுவின் தரம் உயர்ந்து விடும்.

மேலும் துணைக்குடியரசுத் தலைவர் அரசியலமைப்புசார் நிலையில் உள்ளவர். அவர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது.

இதனால் அவர் அரசாங்கத்தின் சார்பாக தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்துவதும், பிரகடனங்களை வெளியிடுவதும் சிக்கலானது.

எனவே, பிரதமர் அல்லது வெளிவிவகார அமைச்சரே கொமன்வெல்த் மாநாட்டுக் குழுவுக்கு தலைமையேற்பது என்று உயர்மட்டக் கலந்துரையாடலில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பிரதமர் மன்மோகன்சிங், பொதுநலவாய  மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று வெளிவிவகார அமைச்சு வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=854912425107585599#sthash.YImuxm4j.dpuf