7 நவ., 2013

மன்மோகன்சிங்கை அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும்: தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று  அழைப்பது தமிழ் மக்களின் அரசியலை பலவீனப்படுத்தும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர்  செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் இணைந்து  வெளியிட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
 
வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வரவேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளதாக இந்தியஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. இதன்போது யாழ்ப்பாணத்திற்கும் வரவேண்டும் என்றும் கடிதம்மூலம் கோரியுள்ளதாகவும் அவ்வூடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இக்கடிதம்பற்றிய செய்திக்கு தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும், தமிழகத்திலும்  பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில்  பொதுநலவாயமாநாடு பற்றி விக்னேஸ்வரன் கடிதத்தில் எதுவும் எழுதவில்லையென்றும் கொழும்பு வரும்போது யாழ்ப்பாணத்திற்கும் வாருங்கள் என்று மட்டுமே எழுதியதாகவும் முதலமைச்சரது அந்தரங்க செயலாளர் ஊடகங்களுக்கு கூறியிருக்கின்றார். 
 
ஆனாலும்  இதற்கு முன்னர் கடந்த செப்ரெம்பர் முற்பகுதியில் இந்தியன் எக்ஸ்பிறஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் பொதுநலவாயமாநாட்டிற்கு வரவேண்டுமென்று  கூறியிருந்தார்.
 
இரண்டு தினங்களுக்கு முன்னர் அமெரிக்கத் தூதுவருடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் வலிவடக்கு வீடுடைப்பு விவகாரமானது அரசியல் விடயம். ஆகவே அரசாங்கத்தோடுபேசியே அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 
 
இவற்றை வெளிநாடடிலிருந்து வருகின்றவர்களோடு பேசி என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறியவர் மறுபுறத்தில் இந்தியப் பிரதமர்  யாழ்ப்பாணம் வந்து நிலைமைகளைப் பார்வையிட வேண்டுமென்று கோரி கடிதம் எழுதியுள்ளார். இவ்விரு சம்பவங்களும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்ளச் செய்வதேயன்றி வேறில்லை என்பதனை தெட்டத்தெளிவாக காட்டுகின்றது.
 
விக்னேஸ்வரன் அவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமென்று கடிதம் எழுதியமை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினுடைய ஒப்புதலில்லாமலோ, அல்லது கூட்டமைப்பினருக்கு தெரியாமலோ நடைபெற்றதல்ல. எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது இந்தியப்பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்வதனை தமிழ்மக்கள் விரும்பவில்லை என்றும், பொதுநலவாய மாநாட்டை தாம் பகிஸ்கரிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தது. கூட்டமைப்பின் இவ் இரட்டை அணுகுமுறையானது தமிழ்மக்களின் எதிர்ப்புக்களை சமாளித்து தமது மறைமுக நிகழ்ச்சிநிரலை முன்கொண்டு செல்லும் செயற்பாடாகவே நாம் பார்க்கின்றோம்.
 
பொதுநலவாயநாடுகள் இம்மாநாட்டை புறக்கணிப்பதானது இலங்கை சர்வதேச சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தப்படும் நெருக்கடிநிலை உருவாக்கியுள்து. குறிப்பாக பிராந்திய வல்லரசாக விளங்கும் இந்தியா கலந்துகொள்ளாதிருக்குமாயின் இலங்கைக்கு பாரிய இராஜதந்திர பின்னடைவை உண்டாக்கும். இந்த  ஆபத்திலிருந்து இலங்கை அரசை காப்பாற்றவே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முற்படுகின்றது. 
தமிழ்நாட்டுமக்கள் தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு வலிமையான பின்பல சக்திகளாவர். 
 
விக்னேஸ்வரனின் இக்கடிதமும் இதற்கு முன்னர் கணவன்-மனைவி பிணக்கில் தமிழ்நாடு தலையிடத் தேவையில்லை என்ற கருத்தும் ஈழத்தமிழர் விவகாரத்திலிருந்து தமிழகமக்களை அகற்றும் திட்டமிட்ட செயற்பாடுகளேயாகும். தமிழ்த்தேசியத்தை வலியுறுத்துவதற்காக மக்கள் வாக்களித்து அவர்களின் விரல்களிலுள்ள மை காய்வதற்கு முன்னரே தமிழ்மக்களின் இதுவரைகால தியாகம் நிறைந்த
 
போராட்டத்தையும், தமிழகமக்களின் தொடர்ச்சியான ஈழத்தமிழருக்கு ஆதரவான போராட்டத்தையும் பலவீனப்படுத்த முற்படுகின்றனர்.  
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனதும், தமிழத்தேசியக்கூட்டமைப்பினரதும் திட்டமிட்ட இச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது. 
 
அத்துடன் இம்மாநாட்டை இந்தியா முழுமையாகப் புறக்கணிக்க வேண்டுமெனவும், இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாதென்றும் கோருவதுடன், இதனை வலியுறுத்தி தமிழக மக்கள் நடாத்தும் போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முழுமையான ஆதரவினையும் தெரிவித்துக்கொள்கின்றது.