நாம் உங்களிடம் கையளிப்பது வெறும் கடதாசிகள் அல்ல.
அவை ஒவ்வொன்றும் பொறுமதிவாய்ந்த எம் பிள்ளைகளின் உயிர்கள். எனவே, இதற்கு தகுந்த பதிலளிக்க வேண்டுமென காணாமற்போனோரின் பெற்றோர் கண்ணீர் மல்க மன்றாட்டமாக கேட்டுக்கொண்டனர்.
கொழும்பிலுள்ள காணாமல்போனோரின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இன்று காலை காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ. செபமாலை ஊடாக 2 ஆயிரத்து 301 காணாமல்போனோரின் விபரங்களை கையளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இது தொடர்பில் காணாமல்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
எம்மைப் போன்ற பல தாய்மார் இவ்வாறு தமது பிள்ளைகளை பறிகொடுத்த நிலையில் எங்கு போய் முறையிடுவதென்று தெரியாதுள்ளனர்.
எமது பிள்ளைகளைக் காணவில்லை என்று பொலிஸ் நிலையம் உட்பட 50 இற்கும் மேற்பட்ட இடங்களில் சென்று முறையிட்டும் இதுவரை எமக்கு எவ்விதமான பதிலும் கிடைக்கவில்லை.
காணாமல்போன எமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் தான் பொறுப்புக்கூற வேண்டும். ஏனெனில் அரச கட்டுப்பாட்டில் நாம் வசிக்கும் போதே எமது பிள்ளைகள் காணாமல் போயினர்.
அவ்வாறு இல்லாவிட்டால் எமது பிள்ளைகள் உயிரோடு இருக்கின்றனரா? அல்லது அவர்கள் உயிருடன் இல்லையா என்றாவது கூறுமாறு கேட்கின்றோம்.
வருடத்தில் ஒருமுறையேனும் பிள்ளைகளின் முகத்தையாவது பார்ப்பதற்கு இந்த ஆணைக்குழு எமக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும்.
முறைப்பாடுகள் செய்து எமக்குப் பழக்கப்பட்டு விட்டதால் ஆணைக்குழுக்கள் மீது முறைப்பாடு செய்வது தொடர்பில் நாம் நம்பிக்கை இழந்து விட்டோம்.
எல்லா இடங்களிலும் முறைப்பாடு செய்து தற்போது எங்கு போய் முறையிடுவதென எமக்குத் தெரியாதுள்ளது.
காணாமல்போன எமது உறவுகள் சிறைகளில் உள்ளனரா அல்லது மறைமுகமான சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் பார்வையிட எமக்கு இந்த ஆணைக்குழு சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்க வேண்டும்.
யுத்தம் முடிவடைந்து 5 வருடங்கள் நிறைவடைகின்ற போதிலும் ஜனாதிபதி காணாமல்போன உறவுகளை தேடிக்கொண்டிருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மனக் கஷ்டத்தையும் கவலையையும் அங்கலாய்ப்புகளையும் உணர்ந்து அவர்களின் நீண்டகால துயரத்திற்கு முடிவுகாணும் நோக்கத்தில் இவ் ஆணைக்குழுவை அமைத்தமைக்காக நாம் நன்றி தெரிவிக்கின்றோம்.
எனவே, இந்த ஆணைக்குழு எமக்கு தகுந்த பதிலளிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம். கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட ஏனைய ஆணைக்குழுக்களைப் போன்று இதுவும் எம்மை ஏமாற்றாது எமக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக செயற்படவேண்டும் என கண்ணீர் மல்க ஆணைக்குழுவின் தலைவரிடம் கோரிக்கை விட்டனர்.
காணாமல்போனோரின் உறவினர்களின் கோரிக்கைக்கு செவிமடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர்,
இது தொடர்பில் நாம் உதவிகளை செய்யமுடியும். பெற்றோர் மற்றும் உறவினர்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு இவ் ஆணைக்குழுவினால் பெற்றுக் கொடுக்கப்படும்.
காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய பதில் வழங்கப்படும்.
குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பிலேயே இவ் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்கின்றது.
இவ் ஆணைக்குழு கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே இது ஓர் அங்கமாக செயற்படுகின்றது.
உங்களுடைய மனக் கஷ்டத்தை நாம் நன்றாக உணர்கின்றோம். மேலும் தற்போதும் கடத்தல், காணாமல் போதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்யவும்.
மேலும் குறித்த காலப்பகுதியில் அப்பகுதியில் உள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் இராணுவ முகாம்களின் தரவுகள் எம்மால் பெறப்பட்டு வருகின்றன.
இதேவேளை, எம்மிடம் காணாமல்போன இராணுவ வீரர்கள் தொடர்பில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை தொடர்பிலும் நாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ் ஆணைக்குழு மீது நீங்கள் முழுமையான நம்பிக்கை வைத்து எம்மிடம் கையளித்துள்ள 2 ஆயிரத்து 301 காணாமல் போனோரின் விண்ணப்பங்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.