14 மே, 2014


சென்னை - தயார் நிலையில் வாக்கு எண்ணும் மையங்கள்!
 


இந்தியாவின் 16-வது பாராளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 7-ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கியது. மொத்தம் 9 கட்டங்களாக நடந்த இந்த தேர்தல் நேற்று முன்தினம் முடிந்தது. இதில்
6-வது கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு உட்பட்ட 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24-ந் தேதி (வியாழக்கிழமை) நடந்தது.


சென்னையில் வடசென்னை, தென்சென்னை மற்றும் மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்தது. தமிழகத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில், தென்சென்னை தொகுதிக்குட்பட்ட (விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, வேளச்சேரி, மைலாப்பூர், சோழிங்கநல்லூர், தியாகராயநகர்) 6 சட்ட மன்ற தொகுதிகளில் 1,131 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவுக்கு 4 ஆயிரத்து 759 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் சீல் வைத்து, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு வாகனங்கள் மூலம் கொண்டு சென்றனர்.
அதேபோல, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட வில்லிவாக்கம், அண்ணாநகர், எழும்பூர், துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்ட 1,153 வாக்குச்சாவடி மையங்களில் நடந்த தேர்தலில் மொத்தம் 3,630 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வடசென்னை தொகுதிக்குட்பட்ட ராயபுரம், கொளத்தூர், திரு.வி.க.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த 1,308 வாக்குச்சாவடிகளில், 3 ஆயிரத்து 924 வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்ததும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள தேர்தல் அதிகாரிகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைத்து, சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள ராணிமேரி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த 3 மையங்களிலும், வாக்குப்பதிவு எந்திரங்கள் சட்டமன்ற தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் சீல் வைக்கப்பட்டுள்ளன. ‘சீல்’ வைக்கப்பட்ட ஒவ்வொரு அறைக்கு வெளியே ஒரு துணை ராணுவ படை வீரர் உள்பட 3 போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி பாதுகாத்து வருகின்றனர். வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும் துணை ராணுவ படை வீரர்கள், தமிழ்நாடு சிறப்பு படை மற்றும் ஆயுதப்படை போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் துப்பாக்கி ஏந்தியபடி, தடுப்பு வேலிகளை அமைத்து 5 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் கமிஷனின் அனுமதியின்றி வேறு யாரையும் இந்த மையங்களில் நுழைய விடாமல் பாதுகாத்து வருகின்றனர். மேலும் மையங்களை சுற்றிலும் தடுப்பு வேலிகள் அமைத்தும், சாரங்கள் அமைத்தும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறைக்கும் 4 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக் கப்பட்டு வருகிறது.
மேலும், வாக்கு எண்ணும் மையங்களை சுற்றிலும், மையங்களின் முகப்பு பகுதிகளிலும் ரகசிய கேமராக்களை பொருத்தி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 14 மேஜைகள் வீதம் (18 சட்டமன்ற தொகுதிகள்) மொத்தம் 352 மேஜைகள் வாக்கு எண்ணிக் கைக்காக அமைக்கப்பட்டு இருப்பதாகவும், வாக்குகளை எண்ணுவதற்காக இந்தமுறை ஒவ்வொரு மையத்திற்கு 2 ‘கவுண்ட்டர்கள்’ வீதம் 6 சிறப்பு ‘கவுண்டர்கள்’ அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
மேலும், பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாக உள்ளதை முன்னிட்டு கூடுதலாக மேஜைகள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும், சில தேர்தல் பார்வையாளர்கள் தமிழகத்துக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியானது. இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘கூடுதலாக தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது, வாக்கு எண்ணும் மேஜைகள் பயன்படுத்துவது குறித்து எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் தேர்தல் கமிஷனிடம் இருந்து வரவில்லை’’ என்று கூறினர்.