29 ஜூலை, 2015

'என் பயணிகள்... என் உடைமை!' - தீவிரவாதிகளிடமிருந்து பயணிகளை காத்த பேருந்து ஓட்டுநர்

ஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் ஒன்றும் புதிதல்ல; ஆனால், குர்தாஸ்பூரில் நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்,
காமன் மேன் ஒருவரின் நடவடிக்கையால் தீவிரவாதிகளே லேசாக தொடை நடுங்கிய சம்பவம் உலகத்துக்கே புதிது. காரணம் - பஸ் டிரைவர் நானக் சந்த். 

குர்தாஸ்பூரில் இந்தியப் பாதுகாப்புப் படைக்கும், தீவிரவாதிகளுக்கும் நடந்த சண்டையில், பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உட்பட 8 பேர் இறந்துபோனது வருத்தத்திற்குரிய விஷயம். இருந்தாலும், தாக்குதலின்போது நானக் சந்த்தின் அதிரடி நடவடிக்கையால், 75 பேர் காப்பாற்றப்பட்டிருப்பது, நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக சினிமா பாணியில் துப்பாக்கிச் சண்டை போட வில்லை; வெடிகுண்டு வீசவில்லை; நேருக்கு நேர் நின்று எதிர்க்கவில்லை - ஆனால் இன்று, ‘‘இந்தியாவின் மிகச் சிறந்த வீரர்’’ என்று பஞ்சாப் பாதுகாப்புப் படை அதிகாரிகளால் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார் நானக் சந்த்.

என்ன நடந்தது? நானக் சந்தே சொல்கிறார்...

‘‘வழக்கம்போல் அன்று காலை என் ரூட்டில் பஸ்ஸை ஓட்டிக் கொண்டிருந்தேன். திடீரென துப்பாக்கிச் சத்தம் காதைப் பிளந்தது. அப்போதுதான் தெரிந்தது - அந்த இடம் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்று. பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் கடுமையாக சண்டை நடந்து கொண்டிருந்தது. பஸ்ஸில் 75 பயணிகள் இருந்தார்கள். யாரையும் சத்தம் போட வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். திடீரென எங்கிருந்தோ ஒரு பெட்ரோல் குண்டு எங்கள் பஸ்ஸை நோக்கி வீசப்பட்டது. நான் சுதாரித்தவாறு பஸ்ஸை ஓட்டினேன். பஸ்ஸில் அலறல் சத்தம் அதிகமானது.
நான் பஸ்ஸை நிறுத்தவே இல்லை. சடாரென பஸ்ஸைத் திருப்பி, தீவிரவாதிகளை நோக்கி பஸ்ஸைச் செலுத்தினேன். இதில் சில தீவிரவாதிகள் தங்களை நோக்கி பஸ் முன்னேறி வருவதில் குழப்பமடைந்து பயந்துபோய், என் பஸ்ஸை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். மயிரிழையில் நானும் தப்பினேன்; அவர்களும் சிலர் தப்பித்துக் கொண்டார்கள்!’’ என்று சொன்ன நானக் சந்த், நேராக பஸ்ஸை அரசு மருத்துவமனைக்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்.

‘‘என் பயணிகள் என்னை நம்பி வந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்ற வேண்டியது என் கடமையல்லவா? அதுதான் பஸ்ஸை எங்கும் நிறுத்தாமல், மருத்துவமனைக்குக் கொண்டு வந்தேன்!’’ - லேசான தீக்காயத்துக்கு மருந்து தடவியபடி சொல்கிறார் நானக் சந்த்.

பஸ்ஸில் பயணித்த 75 பயணிகளும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடி நானக் சந்த்தைக் கடவுளாகப் பாவித்துக் கொண்டிருக்கின்றனர்.