முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நேற்று முன்தினம் இரவு ஷில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றி கொண்டிருந்தபோது திடீரென மரணம் அடைந்தார். இதைத் தொடர்ந்து, அவரது உடல் நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டது. அதை முழு ராணுவ மரியாதையுடன் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டார்.
அதன்பின் அவரது உடல் டெல்லியில் உள்ள ராஜாஜி மார்க் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு, கலாமின் உடலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், பொதுமக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், டெல்லி ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்து கலாமின் உடல் பாலம் விமான நிலையத்திற்கு இன்று காலை 7 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது. ராணுவ வாகனம் மூலம் பாலம் விமான நிலையம் எடுத்துச் செல்லப்பட்ட கலாமின் உடல், டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது. பகல் 12.30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கியது.
கலாமின் உடலுடன் டெல்லியில் இருந்து விமானத்தில், மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கைய நாயுடு, பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், கப்பல் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கலாமின் தனிச்செயலாளர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்கள் வந்தனர்.
மதுரைக்கு வந்த கலாமின் உடலை தமிழக அரசு சார்பில் ஆளுநர் ரோசய்யா பெற்றுக் கொண்டார். இதற்காக, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஞானதேசிகன் தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்கள் மதுரைக்கு வந்தனர்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கலாமின் உடலுக்கு ஆளுநர் ரோசய்யா, தலைமைச் செயலர் ஞானதேசிகன், அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் மலரஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கலாமின் உடலுடன் ராணுவ ஹெலிகாப்டர், மண்டபம் கேம்ப் மைதானத்தில் வந்திறங்கியது. அங்கு, அப்துல்கலாம் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் உள்பட 6 அமைச்சர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதனையடுத்து கலாம் உடல், அங்கிருந்து ராணுவ வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினரின் அஞ்சலிக்கு பின்னர், ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இதை தொடர்ந்து, அப்துல் கலாமின் உடலுக்கு நாளை (30 ஆம் தேதி) இறுதிச் சடங்குகள் செய்யப்பட உள்ளது. இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி உள்பட பல்வேறு மாநில முதல்வர்கள், ஆளுநர்கள் கலந்து கொண்டு, இறுதி அஞ்சலி செலுத்த உள்ளனர்.