29 ஜூலை, 2015

எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள்: யாழில் ஜனாதிபதியிடம் கண்ணீர்மல்கிய உறவுகள்


எங்கள் பிள்ளைகளை படையினரும், ஆயுதம் தாங்கியவர்களும் கொண்டு சென்றார்கள். அதற்குப் பின்னர் அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது தெரியவில்லை. எங்கள் பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா முன்னிலையில் காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
யாழ்.மாவட்டத்திற்கு நேற்றைய வருகை தந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
வடகிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை,  சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் அங்கஜன் இராமதன் வீட்டில் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போதே காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மேற்கண்டவாறு கண்ணீர்மல்க உருக்கமான கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.
குறித்த சந்திப்பில் மேலும் அவர்கள் குறிப்பிடுகையில்,
நாட்டில் பல இடங்களில் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதாகவும்,  இரகசிய முகாம்கள் உள்ளதாகவும் நாங்கள் அறிகிறோம்.
அவற்றை கேட்கும்போதெல்லாம் எங்கள் பிள்ளைகளுடையதாக இருக்குமோ? எங்கள் பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளார்களா? உயிருடன் இருக்கிறார்களா? என நாங்கள் தினசரி செத்துக் கொண்டிருக்கிறோம்.
எங்கள் பிள்ளைகள் எங்கே? எங்களுடைய பிள்ளைகளை மீட்டுக் கொடுங்கள். எங்கள் பிள்ளைகளை காணாமல்போக செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என நாங்கள் கேட்கமாட்டோம்.
மேலும் நாங்கள் 8 மாவட்டங்களிலிருந்து வந்திருக்கிறோம். எங்களுடைய பிள்ளைகளை சுற்றிவளைப்பிலும், சந்திகளிலும் சோதனை நடவடிக்கைகளிலும் நின்றிருந்த படையினரும், கடற்படையினரும், பொலிஸாரும் விசாரணைக்கென கூறியே அழைத்துச் சென்றார்கள்.
ஆனால் அதன் பின்னர் எங்களுடைய பிள்ளைகளை காணவில்லை. எங்கள் பிள்ளைகள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பதையாவது, அறியத்தாருங்கள்  என கண்ணீர்மல்க ஜனாதிபதிக்கு முன்பாக கூறியதுடன்,
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் வெளியிடப்பட்ட பிரச்சாரத்தின் போது விநியோகிக்கப்பட்ட பிரசுரம் ஒன்றில் காணாமல்போன பிள்ளைகள் சிலர் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அந்த பிரசுரத்தையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
காணாமல்போனவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறிய கதைகளை ஜனாதிபதி மிகவும் பொறுமையாக செவி மடுத்தார்.
மேலும் வலி,வடக்கு மீள்குடியேற்றம் தொடர்பில் இடம்பெயர்ந்த மக்களும், யாழ்.நீதிமன்றம் மீதான தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களுடைய உறவினர்களும் நேற்றைய தினம் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் உருவாக்கப்படும்- ஜனாதிபதி
வடகிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிகளிலும், யுத்தம் நிறைவடையும் காலப்பகுதிகளிலும் காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான செயலகம் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும்.
அந்த செயலகம் ஜனாதிபதியின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் ஒரு செயலமாக இருக்கும்.  சமகாலத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி செயலகத்தை உடனடியாக உருவாக்க முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்நிலையில் காணாமல்போனவர்கள் தொடர்பாக அவர்களுடைய உறவினர்கள் என்னை தொடர்பு கொள்ளும் வகையில் மேற்படிச் செயலகம் உருவாக்கப்படும்.
மேற்கண்டவாறு நேற்றைய தினம் யாழ்.வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடமாகாணசபை உறுப்பினரும், நாடாளுமன்ற வேட்பாளருமான அங்கஜன் இராமநாதனுடைய இல்லத்தில் காணாமல்போனவர்களின் பெற்றோர், உறவினர்களை சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போதே ஜனாதிபதி மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில்,
காணாமல்போனவர்களுடைய உறவினர்கள் அனுபவிக்கும் மன துன்பங்கள் மற்றும் சிக்கல்களை நான் அறிகிறேன். ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரும் எனக்கு தெரியும்,
ஜனாதிபதியான பின்னரும், அது எனக்கு தெரியும். ஜனாதிபதியான பின்னர் நான் இந்த விடயம் தொடர்பாக தேடிப் பார்த்தேன்.
மேலும் பாதுகாப்பு தொடர்பான கூட்டத்தில் காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பாக ஆய்வு அறிக்கையினை எமக்கு வழங்குமாறு நாங்கள் கேட்டிருக்கிறோம்.
மேலும் காணாமல்போனவர்கள் தொடர்பான உண்ன்மை நிலையினை கண்டறிவதற்கு தனியான செயலகம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.
ஆனாலும் அதனை உடனடியாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. தற்போது நாடாளுமன்ற தேர்தல் காலம் என்பதால் இப்போது அதனை உருவாக்குவதனால் பல சிக்கல்கள், உருவாகும்.
எனவே நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் அந்த செயலகத்தை உருவாக்க திட்டமிட்டிருக்கிறோம். இந்த செயலகம் என்னுடைய நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என்பதுடன் இதற்காக விசேடமான உத்தியோகஸ்த்தர்கள் நியமிக்கப்படுவர்.
இதன் ஊடாக வடகிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் மட்டுமல்லாமல், இலங்கையின் மற்றய பகுதிகளில் வாழ்கின்ற மக்களும் தங்கள் முறைப்பாடுகளை என்னுடைய கவனத்திற்கு எழுத்துமூலமாக கொண்டுவர முடியும்.
மேலும் விசாரணைக்கான குழு ஒன்றையும் இந்த செயலகத்தின் கீழ் உருவாக்குவோம்.
இதேபோன்று புதைகுழிகள் மற்றும் இரகசிய முகாம்கள் இருப்பது தொடர்பான தகவல்களை மக்கள் அறிந்தால் என்னுடைய கவனத்திற்கு கொண்டுவாருங்கள். அதன் ஊடாக உங்களுக்கு முழுமையான பாதுகாப்பினை வழங்கி அந்த இடங்களுக்கு அழைத்துச் சென்று ஆய்வுகள் நடத்தப்படும்.
இதற்குமேல் உங்களுடைய பிள்ளைகள் எனக்கும் பிள்ளைகளே. உங்கள் பிள்ளைகளின் வயதில் எனக்கு பேரப்பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களை மனதில் கொண்டு உங்களுடைய பிள்ளைகள் தொடர்பாக நிச்சயமாக பதிலளிப்பேன் என ஜனாதிபதி ஆறுதல் கூறினார்.