29 ஜூலை, 2015

இலங்கையின் இரகசியத் தடுப்பு முகாம்களை அம்பலப்படுத்திய அனைத்துலக மனித உரிமை நிபுணர்!இலங்கையில்  சித்திரவதைகள், வல்லுறவுகள், சட்டவிரோத தடுத்து வைப்புக்கள் போன்ற பல்வேறு தரப்பட்ட வழிகளில் தமிழ்ச் சமூகம் மீது திட்டமிடப்பட்ட துன்புறுத்தல்கள் அரச அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதாக அனைத்துலக ஆய்வு அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் நிபுணர் யஸ்மின் சூகா தலைமையிலான சிறிலங்காவில் உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்க மற்றும் பாதுகாப்புப் படைகளின் உயர் மட்டத்தினால், சித்திரவதைகளும், பாலியல் வன்முறைகளும் எவ்வாறு நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட கொள்கையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை இந்த 134 பக்க அறிக்கை விரிவாக விளக்கியுள்ளது

இன்னமும் முடிவுறாத போர்: இலங்கையில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015′ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்கள் கவனமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
போருக்குப் பின்னர் தாம் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக, சாட்சிகளால் தெரிவிக்கப்பட்ட இரகசிய தடுப்பு முகாம்கள் உள்ளிட்ட 41 தடுப்பு முகாம்கள் பற்றிய விபரங்களும் இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக திருகோணமலை டொக்யார்ட் கடற்படைத்தளத்தில், காட்டுக்குள் உள்ள இரகசியத் தடுப்பு முகாமின் செய்மதிப்படம் இதில் இணைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியாவில் யோசெப் முகாமின் தடுப்பு முகாம் வசதிகள் குறித்த விரிவான வரைபடமும் இதில் இடம்பெற்றுள்ளது.

இந்த அறிக்கைக்காக சாட்சியமளித்த 155 பேரில் கால் பங்கினர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்ற பின்னர் தமது உறவினர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியம் அளித்துள்ளர்.

இது குறித்து நடவடிககை எடுக்கா விட்டால், மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்குவதில் அனைத்துலக சமூகம் தோல்வியடையும் என்று எச்சரித்துள்ள இந்த அறிக்கை, இதனை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைக்காக   ஐ.நா பாதுகாப்புச் சபை பரிந்துரைக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

திருகோணமலை டொக்யார்ட்டில் உள்ள சிறிலங்கா கடற்படையின் இரகசிய தடுப்பு முகாமின் புவிநிலைகாட்டி விபரங்களை அம்பலப்படுத்தியிருக்கிறோம். அங்கு பணியாற்றிய சித்திரவதைகளை மேற்கொண்டவர்களின் பெயர்கள் படங்களும் உள்ளன.

வெள்ளை வான் கடத்தல்களுக்கான தளமாக வவுனியா யோசெப் முகாமை இராணுவப் புலனாய்வுப் பிரிவு பயன்படுத்தி வந்துள்ளது. அங்கு பல சாட்சிகள் சித்திரவதைகள் மற்றும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளனர்.

41 தடுப்பு முகாம்களை அடையாளம் கண்டுள்ளோம். எனினும், இலங்கையில் இதற்கு மேலும் இரகசிய தடுப்பு முகாம்கள் இருக்கலாம்.

ஏனென்றால், உயிர் தப்பிய பலர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் கொண்டு செல்லப்பட்டதால், தாம் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தோம் என்று அறியாதுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், இத்தகைய மீறல்களில் ஈடுபட்ட இலங்கை  இராணுவத்தின் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் சிறிலங்கா கடற்படையின் புலனாய்வு அதிகாரிகள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.