9 செப்., 2012


அமெரிக்காவினதும், மேற்குலக நாடுகளினதும் எதிர்ப்புக்களையும் மீறி ஈரானில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் மாநாட்டில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியுள்ளார் மகிந்த ராஜபக்ச. இந்தப் பயணத்தின் போது அதே எதிர்ப்புக்களை மீறி அங்கு வருகைதரும் ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன் மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப்பேச மகிந்த முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் பரவலாக செய்திகளை வெளியிட்டிருந்தன.

ஆனால், இரண்டு நாள் ஈரானில் தங்கியிருந்தபோது பாகிஸ்தான் அதிபர் ஆசிவ் அலி சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் கமீத் கர்சாய், பங்களாதேஸ் பிரதமர் சேக் ஹசீனா, ஈரானிய அதிபர் மொகமட் அகமடிநெஜாத், லெபனானிய அதிபர் ஜெனரல் மிசெல் சுலைமான், ஈரானிய ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கொமெய்னி ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தபோதும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையோ, ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனையோ சந்தித்துப் பேசாமலேயே நாடு திரும்பிய மகிந்த தனது அடுத்த பயணத்தை இந்தியாவிற்கு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
இந்தியப் பயணத்தின் நோக்கம் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்திப்பதற்காக எனப் பரப்புரை செய்யப்படுகின்ற
போதும் அதற்கும் அப்பால் மகிந்தவின் இந்தப் பயணத்தில் பல முக்கிய உள் நோக்கங்கள் நிறைந்திருக்கின்றன. இந்திய நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி சுஸ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை சென்றிருந்தது பலரும் அறிந்திருந்தது. எதிர்க்கட்சி, அதுவும் ஈழத் தமிழர்கள் குறித்து அதிக கரிசனைகளை வெளியிட்டுவரும் பா.ஜ.க. தலைமையில் அனைத்துக் கட்சிக்குழு இலங்கை செல்வதால், இக்குழுவினர் தமிழர்களின் அவல நிலைமையை அம்பலத்திற்கு கொண்டுவருவார்கள் என்றே உறுதியாக நம்பப்பட்டது. ஆனால், வழமைபோன்று இவர்களின் பயணமும் இறுதியில் தமிழ் மக்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்தது.
முள்ளிவாய்க்கால் வரையான பாரிய இன அழிப்பின் நிறைவின் பின்னர் இலங்கை சென்ற இந்தியப் பாதுகாப்பு ஆலோசனை அதிகாரிகளான எம்.கே.நாராயணனும், சிவசங்கர்மேனனும் அலரிமாளிகையில் தங்கள் உச்ச மகிழ்ச்சியை மகிந்த ராஜபக்சவுடன் பகிர்ந்துகொண்டதையும், இன அழிப்பின் பின்னர் இந்தியா சென்ற மகிந்த ராஜபக்சவிற்கு கொங்கிரஸ் ஆட்சியாளர்கள் செங்கம்பளம் விரித்து வரவேற்றதையும் தமிழ் மக்கள் இலகுவில் மறந்துவிடமாட்டார்கள்.
இப்போது அதே வழியில் எதிர்க்கட்சியான பா.ஜ.கவும் நடந்துகொள்ள முனைவது தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்
சியை ஏற்படுத்தியுள்ளது. சுஸ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கை சென்றிருந்தபோது, மகிந்த ராஜபக்சவை தமது மாநிலத்திற்கு வருமாறு  சுஸ்மா சுவராஜ் விடுத்திருந்த அழைப்பு இப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றது. அசோக மன்னரின் மகள் சங்கமித்ரா மூலம் புத்த மதம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பயணித்ததை எடுத்துரைக்கும் ஓவியத்தை டில்லியில் உள்ள சிறீலங்காத் தூதரகத்தில் சுஷ்மா சுவராஜ் கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தபோதே மகிந்தவிற்கு அழைப்பு விடுத்ததையும், அதற்காகவே மகிந்த இந்தியா வருகின்றார் என்ற இரகசியத்தைப் போட்டுடைத்துள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தின் சாஞ்சியில் அமைக்கப்படவுள்ள புத்த மதம் தொடர்பான பல்கலைக்கழக அடிக்கல் நாட்டு நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே மகிந்தவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை புரிந்த மகிந்த ராஜபக்ச புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகள் எங்கும் செல்லமுடியாது விரட்டியடிக்கப்பட்டு வருகின்றார். இலண்டன் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் உரை நிகழ்த்துவதற்காக வந்த மகிந்தவை, தங்கள் ஜனநாயக வழியலான போராட்டத்தின் மூலம் அந்த உரையை நிகழ்த்தமுடியாது தடுத்தது மட்டுமல்ல, தலை
மறைவாக நாட்டைவிட்டுத் தப்பியோடுகின்ற நிலைக்கு தமிழர்களின் எழுச்சி மிகு போராட்டம் தள்ளியிருந்தது.
அதன் பின்னர் இலண்டனுக்கு வருவதற்கு மகிந்த எடுத்த முயற்சிகள் எவையும் வெற்றியளிக்கவில்லை. இதே நிலைமையே புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு சென்றாலும் தனக்கு ஏற்படும் என்பதை மகிந்த நன்றாகவே உணர்ந்துள்ளதால் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இலட்சக் கணக்கான தமிழர்கள் வாழும் இலண்டன் ஒக்ஸ்போட்டில் நிகழ்த்தமுடியாமல் போன உரையை, கோடிக் கணக்கான தமிழர்கள் வாழும் இந்தியாவில் நடத்திவிட வேண்டும் என மகிந்த விரும்புகின்றார்.
எதிர்வரும் 21ம் திகதி இந்தியா செல்லவுள்ள மகிந்தவிற்கு தமிழகத்தில் இருந்து இப்போதே எதிர்ப்புக் குரல்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. மத்திய பிரதேச மாநிலத்தில் நடக்கும் விழாவிற்கு மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டதற்கு ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். அன்றைய தினம் போராட்டம் நடைபெறும் என்றும் வைகோ அறிவித்துள்ளார். ‘இலங்கை தமிழர்களுக்காக சென்னையில் போராட்டம் நடத்தினால் என்னையும் அழையுங்கள் வருகிறேன் என்று கூறிய பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த சிங் உள்ளிட்ட பல நல்ல தலைவர்கள் உள்ள நிலையில் ராஜபக்சவை இந்தியாவுக்கு அழைத்து வருவதாகக் கூறிய சுஷ்மாவை எச்சரிப்பதாகவும்’ அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ‘ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இனப்படுகொலையாளரான மகிந்த ராஜபக்ச இந்தியா வருவதனை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது’ என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் வலியுறுத்தியுள்ளார். ‘மகிந்த ராஜபக்ச இந்தியா வருவதில் தங்களுக்கும் உடன்பாடு இல்லை, அவரது வருகைக்கு நாங்களும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்’ என்று தி.மு.க தலைவர் கருணாநிதியும் கூறியுள்ளார்.
தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க கருத்துக்கள் எதனையும் இதுதொடர்பாக வெளியிடாதபோதும், அண்மைக் காலமாக முதல்வர் ஜெயலலிதா எடுத்துவரும் நடவடிக்கைகள் அனைத்தும் சிறீலங்கா ஆட்சியாளர்களுக்கு எதிரானதாகவே அமைந்துள்ளது. எனவே, தமிழகத்தில் உள்ள முதன்மையான கட்சிகள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் சிறீலங்காவிற்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டுள்ளன. இக்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து மகிந்தவின் வருகையை தடுத்து நிறுத்தவேண்டும். இன அழிப்புச் செய்த மகிந்த தமிழர்கள் வாழும் எந்தவொரு நாட்டிற்கும் கால் வைக்கமுடியாத நிலையை ஏற்படுத்தவேண்டும். ஆயிரக் கணக்கான தமிழர்கள் ஒன்றிணைந்து பிரித்தானியாவில் தடுக்க முடிந்ததை, இலட்சக் கணக்கான தமிழர்கள் உள்ள இந்தியாவில் முடியாதா?
ஆசிரியர் தலையங்கம்
நன்றி : ஈழமுரசு