புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

புலிகள்.நா.க.தா.அரசு,ஒருங்கினைப்புகுழு உட்பட 15 புலம்பெயர் அமைப்புகளுக்கு சிறிலங்கா தடை – ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி

ஜெனிவா தீர்மானத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அனைத்துலக அளவில், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டிய, 15 விடுதலைப் புலிகள் சார்பு அமைப்புகளை தடை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்படி, அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நோர்வே, இத்தாலி, சுவிற்சர்லாந்து. பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஆகிய நாடுகளில் செயற்படும், 15 புலிகள் ஆதரவு அமைப்புகளை வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளாக சிறிலங்கா அரசாங்கம் அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 தீர்மானத்துக்கு அமைய இந்த தடை அறிவிப்பு பெரும்பாலும் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர், 2001 செப்ரெம்பர் 28ம் நாள், வெளிநாடுகளில் உள்ள தீவிரவாத அமைப்புகளை தடைசெய்வது தொடர்பான தீர்மானம், அமெரிக்காவினால் ஐ.நா பாதுகாப்புச் சபையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதற்கமையவே, புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்புகளை சிறிலங்கா அரசாங்கம் தடை செய்யவுள்ளது.

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த தடை தொடர்பான அறிவிப்பை இந்த வாரம் வெளியிடுவார் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ள அதேவேளை, இன்னொரு ஆங்கில ஊடகம் இன்று இந்த அறிவிப்பு வெளியாகலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இதுதொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் கூறியுள்ளது.

இவ்வாறு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகள் என்று சிறிலங்கா அரசினால், தடை செய்யப்படும் அமைப்புகள் அனைத்தும், வி.ருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வணபிதா.எஸ்.ஜே இமானுவல் அடிகளார் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை, மற்றும், நெடியவன் எனப்படும் பேரின்பநாயகம் சிவபரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் குழு, விநாயகம் எனப்படும், சேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி தலைமையிலான புலிகளின் குழு ஆகியவற்றின் கீழ் செயற்படுபவை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்புகளாக தடைசெய்யப்படும் அமைப்புகள் 
1.தமிழீழ விடுதலைப் புலிகள்.
2.தமிழர் புனர்வாழ்வுக் கழகம்.
3.தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
4.பிரித்தானியத் தமிழர் பேரவை.
5.உலகத் தமிழர் அமைப்பு.
6.கனேடியத் தமிழ் காங்கிரஸ்.
7.அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரஸ்.
8.உலகத் தமிழர் பேரவை.
9. தேசிய கனேடியத் தமிழர் பேரவை.
10. தமிழ்த் தேசிய பேரவை.
11. தமிழ் இளைஞர் இயக்கம்.
12. உலகத தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.
13. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்.
14. தமிழீழ மக்களவை.
15. உலகத் தமிழர் நிவாரண நிதியம்.
16. தலைமைச்செயலக குழு.

விடுதலைப் புலிகள் மீள ஒருங்கிணைவதாக காட்டி,வரும் சிறிலங்கா அரசாங்கம், அதற்கு இந்த அமைப்புகளே உதவுவதாக கூறி இந்த தடையை அறிவிக்கவுள்ளது.

ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 தீர்மானமானது, வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளை பற்றிய தகவல்களை நாடுகள் பரிமாறிக் கொள்வதற்கும் பயங்கரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பதற்கும் வழியேற்படுத்துகிறது.

இதன்படி, வெளிநாடுகளில் இயங்கும் புலிகள் சார்பு தடை செய்யப்பட்ட அமைப்பகள் பற்றிய விபரங்களைக் கோரவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேற்கு நாடுகளிடம் சிறிலங்கா அரசாங்கம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த அமைப்புகளுடன் தொடர்பு வைத்து கொள்பவர்களும் அவற்றின் நிதி உதவிகளை பெறுவோரும் குற்றவாளிகளாக காணப்பட்டு, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

சிறிலங்கா அரசாங்கத்தினால் தடை செய்யப்படவுள்ள இந்த அமைப்புகள் அண்மையில் ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டுவதில், தீவிரமாக ஈடுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad