புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஏப்., 2014

வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் - அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு

வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைகள் முற்றிலும் பொய்யானவையாகும்.

இவ்வாறு அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு [International Crisis Group] அண்மையில் வெளியிட்ட தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி.

சிறிலங்காவில் 2009ல் உள்நாட்டுப் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் இதன் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் தொடர்பாக உள்நாட்டு மற்றும் அனைத்துலக நாடுகள் மிகவும் விசனமடைந்துள்ளன. வடக்கில் குவிக்கப்பட்டுள்ள அதிகளவான படையினர், வடக்கு மாகாண ஆட்சியில் இராணுவத்தின் மிக ஆழமான ஈடுபாடு போன்றன நாட்டில் நிலையான சமாதானத்தை எட்டுவதற்கு மிகவும் அவசியமான ஜனநாயக நிறுவகங்களை மீள ஒழுங்குபடுத்துவதில் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன.

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை அகற்ற வேண்டும் என சிறிலங்கா அரசாங்கம் மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு அனைத்துலக அமைப்புக்கள் அழுத்தம் கொடுத்துவருகின்ற நிலையில் வடக்கில் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமானளவு குறைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகிறது.

வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறிவருகிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இந்தப் பரப்புரைகள் முற்றிலும் பொய்யானவையாகும்.

வடக்கில் தற்போதும் மிக அதிகளவான படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பல்வேறு தரவுகள் சுட்டிநிற்கின்றன. வடக்கில் வாழும் பொதுமக்களின் நிர்வாகங்களில் சிறிலங்காப் படையினர் தலையீடு செய்வதுடன், மக்களின் அன்றாட வாழ்வை படையினர் கட்டுப்படுத்துகின்றனர் என்பதையும் கண்காணிக்கின்றனர் என்பதையும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் ஆதாரப்படுத்துகின்றன.

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது மட்டுமன்றி இவர்கள் சமூக மற்றும் அரசியல் சார் நடவடிக்கைகளில் பங்குகொள்வதானது விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. போருக்குப் பின்னான வடக்கு இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்பதை சிறிலங்கா அரசாங்கமும் இராணுவத் தரப்பும் தொடர்ச்சியாக மறுத்துவருவதுடன், படையினர் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக இம்மாதம் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர்களில் கூட, சிறிலங்கா அரசாங்க மூத்த அதிகாரிகள் புதிய தகவல்களைத் தெரிவித்திருந்தனர்.

மே 2009ல் வடக்கில் நிறுத்தப்பட்டிருந்த 70,000 பாதுகாப்புப் படையினர் தற்போது 12,000 இராணுவ வீரர்களாகக் குறைக்கப்பட்டுள்ளனர் எனவும் வடக்கு முழுவதிலும் பத்திற்குக் குறைவான இராணுவ முகாங்களே உள்ளதாகவும் ஜனவரி 19 அன்று, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வழங்கிய உரையொன்றில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு இரண்டு நாட்களின் பின்னர், மே 2009ல் வடக்கில் கிட்டத்தட்ட 120,000 ஆகக் காணப்பட்ட படையினரின் எண்ணிக்கை 2013ன் இறுதியில் 80,000 ஆக அதாவது மூன்றில் ஒரு பங்கால் குறைக்கப்பட்டதாக ஜெனீவாவில் இராஜதந்திரிகள் மத்தியில் உரையாற்றிய போது சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சிறிலங்கா அதிபரும் அவரது செயலரும் வடக்கில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பட்ட தகவலைக் கூறியுள்ளனர். போரின் முடிவில் வடக்கில் 300,000 இராணுவ வீரர்கள் இருந்தனர் எனவும் வீரதுங்க குறிப்பிட்டது போன்று 200,000 பேர் இருக்கவில்லை எனவும் சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச அறிவித்திருந்தார். 2009 இலும் அதற்குப் பின்னரும் வடக்கில் மொத்தப் படையினரின் மூன்றில் இரண்டு பங்கு படையினர் குவிக்கப்பட்டிருந்தனர் என்பதே உண்மையாகும்.

இதனை அடிப்படையாகக் கொண்டு வீரதுங்கவின் அறிவிப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும் கூட, வடக்கில் தற்போது 120,000 படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். வடக்கின் சனத்தொகை 1058762 ஆகக் காணப்படும் இந்நிலையில், ஒவ்வொரு 8.7 பொதுமக்களுக்கும் ஒரு இராணுவத்தினன் உள்ளான் எனக் கணக்கிட்டால் அது மிகவும் உயர்ந்த விகிதமாகவே கருதப்படும். போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் இராணுவத்தினர் மிக அதிகளவில் வடக்கில் குவிக்கப்பட்டுள்ளமை கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும்.

வீரதுங்க தனது உரையில் இராணுவத்தினர் எண்ணிக்கையை மட்டுமே குறிப்பிட்டிருந்தார். ஆனால் இவர் குறிப்பிட்ட எண்ணிக்கையை விட வடக்கில் கடற்படை, வான்படை, சிறப்புப் படை உட்பட பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானனோர் காணப்படுகின்றனர். இவற்றை எல்லாம் கணக்கிடும் போது வடக்கில் வாழும் ஐந்து பொது மக்களுக்கு ஒருவர் என்கின்ற விகிதம் காணப்படுகிறது. இந்த விகிதமானது தற்போது கஸ்மீரில் நிறுத்தப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை மற்றும் செச்செனியாவில் இரண்டாம் உலக யுத்தத்தின் போது நிறுத்தப்பட்டிருந்த படையினர் மற்றும் வடஅயர்லாந்தில் போர் இடம்பெற்ற போதும் அல்ஜீரியா மீதான பிரான்சின் ஆக்கிரமிப்பின் போதும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் படையினர் குவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால் சிறிலங்காவின் வடக்கில் போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்த நிலையிலும் கூட, ஐந்து பொதுமக்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் குவிக்கப்பட்டுள்ளமை மிகவும் உயர்ந்த விகிதமாகும்.

வடக்கில் குவிக்கப்பட்டுள்ள படையினரின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடு காணப்படுகின்றமை புதிய விடயமல்ல. யாழ் மாவட்டத்தில் இராணுவத்தின் எண்ணிக்கை மிகக் கணிசமான அளவில் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது 15,600 படை வீரர்கள் மட்டுமே அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச 17.06.2012ல் அறிவித்திருந்தார். ஆனால் 09.07.2012 அன்று யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சிவில் இராணுவ ஒருங்கணைப்பு நிலையத்தின் இணையத்தளத்தில் யாழ் மாவட்டத்தில் 35,000 இற்கும் மேற்பட்ட படையினர் தனது கட்டளையின் கீழ் செயற்படுவதாக அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதனால் கோத்தபாய ராஜபக்சவின் அறிவிப்பு தொடர்பில் பல்வேறு கேள்வியெழுப்பப்பட்டது. இந்த முரண்பாடு சுட்டிக்காட்டப்பட்டதை அடுத்து ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணையத்தளத்திலிருந்து இப்புள்ளிவிபரம் நீக்கப்பட்டது. போருக்குப் பின்னான சிறிலங்காவின் வடக்கில் பிரசன்னமாகியிருந்த படையினரின் எண்ணிக்கை தொடர்பில் மீண்டும் மீண்டும் தவறான தகவல்கள் வழங்கப்பட்டதானது அனைத்துலக சமூகத்தின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய அதேவேளையில் வடக்கில் ஜனநாயகத்தை மீளநிலைநாட்டுவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தால் நேரடியாக எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பிலும் முரண்பாடான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

போர் முடிவடைந்ததன் பின்னர் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பாதுகாப்புப் படைகளின் தலைமையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களின் பொருளாதார அபிவிருத்தி தொடக்கம் அவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை வழங்குதல் மற்றும் சட்ட ஒழுங்குகளை நிலைநாட்டுதல் போன்றவற்றில் இராணுவத்தினர் தமது தலையீடுகளை மேற்கொள்கின்றனர் என்பதை இவ்வாறான புதிய இராணுவத் தலைமையங்கள் அமைத்தமை சுட்டிநிற்கின்றன.

"கிளிநொச்சி மாவட்டத்தை மீளக்கட்டியெழுப்பும் நோக்குடன் இங்கு சமாதானம் மற்றும் இயல்புநிலையை மீளக்கொண்டுவருவதே எமது நோக்காகும்" என 29.06.2009 அன்று கிளிநொச்சி பாதுகாப்புப் படையின் தலைமையகம் அறிவித்திருந்தது. இதன் தலைமையகம் தற்போது ஏ-09 நெடுஞ்சாலையில் உள்ள இரணைமடுவில் அமைந்துள்ளது. இத்தலைமையகத்தின் கீழ் 57வது, 65வது மற்றும் 66வது ஆகிய மூன்று காலாற்படைப் பிரிவுகளும்,11 காலாற்படை பிரிகேட்டுக்களும், பொறியியற்துறை, சேவைத்துறை, மருத்துவப் பிரிவு உட்பட 39 பற்றாலியன்களும் உள்ளடங்குகின்றன.

இதற்கும்மேலாக, கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் கீழ் கடற்படை, வான்படை, சிறப்பு அதிரடிப்படை மற்றும் காவற்துறையின் துணைஆயுதப் பிரிவும் உள்ளன. கிளிநொச்சி படைத்தலைமையகத்தைச் சேர்ந்த வீரர்கள் ஈருருளிகளிலும் நடந்தும் நாளாந்த ரோந்துப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.

இவற்றுக்கப்பால் கிளிநொச்சியில் உள்ள பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் மக்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். உள்ளுர்வாசிகள் பலர் சிறிலங்காப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் வழங்குனர்களாகச் செயற்படுவதாக நெருக்கடிகள் குழுவால் கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் மூலம் அறியப்படுகிறது.

இது கிளிநொச்சி வாழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களைக் கட்டுப்படுத்துதலும் கண்காணித்தலும் என்பது இராணுவத்தின் முதன்மையான நோக்காகக் காணப்படுவதால் மக்கள் அசௌகரியங்களைச் சந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது. கண்காணிப்புக் கருவிகளை விடுதிகளில் பொருத்த வேண்டும் என இராணுவத்தினர் தமக்கு அறிவுறுத்தியுள்ளதாக பணியாளர் ஒருவர் தெரிவித்திருந்தார். கிளிநொச்சியிலுள்ள சாதாரண விடுதிகளில் கூட இவ்வாறான கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்த வேண்டும் என கட்டளையிடப்பட்டுள்ளதானது வடக்கில் சமாதானத்தைக் கட்டியெழுப்பி விட்டதாக சிறிலங்கா கூறுவது தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் வாழ்வின் ஒவ்வொரு விடயத்திலும் இராணுவத்தினரின் கண்காணிப்பு தொடர்கிறது. இது சிறிலங்கா அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சியைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

இவ்வாறான இராணுவத் தலையீடுகள் வடக்கில் தொடர்கின்ற போதிலும், பொதுமக்களின் விவகாரங்களில் இராணுவம் தலையிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நம்பவைக்க முயல்கிறது. போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் முடிவடைகின்ற நிலையிலும் மக்களுக்கான கட்டுமானத் திட்டங்களில் இராணுவத்தின் கண்காணிப்பும் தலையீடும் தொடர்கிறது. கிளிநொச்சியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் வீட்டுத் திட்டங்கள் தொடக்கம் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் தாதியர்களுக்கான விடுதிகள் அமைத்தல் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வீதிகள் அமைக்கும் திட்டங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினர் ஈடுபடுவதாக கிளிநொச்சி படைத்தலைமையகத்தின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொது மற்றும் தனியார் துறைகளுக்குத் தேவையான ஆளணிகளை ஒழுங்குபடுத்தும் திட்டம் தொடர்பாகவும் படைத்தலைமையகத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிற் சந்தையில் அதிகாரம் மிக்க இராணுவத்தின் தலையீடு காணப்படுவது தொடர்பாக நெருக்கடிகள் குழு கேள்வி எழுப்பியிருந்தது.

கிளிநொச்சி படைத்தலைமையகம் முற்றிலும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகும். அண்மையில் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கிளிநொச்சி படைத்தலைமையகமானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் பரப்புரை நிகழ்வுகளின் ஒளிப்படங்களைத் தனது இணையத்தளத்தில் பதிவு செய்துள்ளது. இதன்மூலம் இது எவ்வளவு தூரம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

வடக்கில் அதிகளவான படையினர் குவிக்கப்பட்டுள்ளதை மறுக்கின்ற சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகள் உள்நாட்டிலும் அனைத்துலக அரங்கிலும் உள்ள பார்வையாளர்களை அதிருப்தியடையச் செய்துள்ளது. வடக்கில் வாழும் மக்களின் ஒவ்வொரு விடயங்களிலும் சிறிலங்காப் படையினர் தமது கட்டுப்பாட்டையும் கண்காணிப்பையும் மேற்கொள்கின்றனர் என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயமாகும். இதன்விளைவாக வடக்கில் மீளிணக்கப்பாடு மற்றும் நிலையான சமாதானத்தை எட்டுவதென்பது மிகவும் கடினமானதாகும்.

ad

ad