புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014





வித்தியாச மானதாக இருக்கிறது இந்த நாடாளு மன்றத் தேர்தல் களம். ஐந்து அணிகள் நிற்கும் நிலையில் யாரை யார் எப்போது எதிர்ப்பார்கள், எப்போது ஆதரிப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. தலைவர்களில் தொடங்கி சிறப்புப் பேச்சாளர்கள் வரை அனைத்துக் கட்சிகளிலும் பிரச்சாரம் அனல் பறக் கிறது. நேரடியாகக் கேட்பதுடன் தினமும் டி.வி.யிலும் இணைய தளத்திலும் பார்த்து ரசிக்கிறார்கள் தமிழக மக்கள். 
நக்கீரன்
கோடைகால வெப்ப அனல், தேர்தல் பிரச்சார அனல் இவற்றுடன் மின்வெட்டு அனலும் சேர்ந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் அந்த அனலை தணிக்கிறதா, மேலும் தகிக்க வைக்கிறதா என்பதைக்கூட உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஒவ் வொருவரின் பேச்சும் ஒவ்வொரு விதம்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா- ""என்னுடைய ஆட்சியில் மின்சார நிலைமை சீராக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தொடர்ந்து மின்வெட்டு ஏற்படுகிறது என்றால் ஏதோ சதி நடக்கிறது. இதற்குக் காரணமான சதிகாரர்களைக் கண்டுபிடித்து தண்டிக்காமல் ஓயமாட்டேன். காவிரி பிரச் சினையில் துரோகம் செய்தது யார் என்று சட்டமன்றத்துக்கு வந்து கருணாநிதி விவாதிக்கத் தயாரா? அவர்தான் வர வேண்டும். துரைமுருகனை அனுப்பக்கூடாது. தேர்தல் பிரசாரக் கூட்டம் என்பது வாக் காளர்களிடம் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பிரச்சாரம் செய்வதற்காகத் தான். ஆனால் இந்த மேடை யில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் யாரும் இல்லை. இந்திய தேர்தல் ஆணையத்தின் விந்தையான ஆணைகளும், கட்டுப் பாடுகளும்தான் இதற்கு காரணம்.''

தி.மு.க. தலைவர் கலைஞர்- ""இது நான் சந்திக்கும் கடைசித் தேர்தலாகக் கூட இருக்கலாம். இதைச் சொன்ன தும் நீங்கள் உணர்ச்சிவசப் படுகிறீர்கள். தமிழன் நிலை உயர- திராவிட இயக்கக் கொள்கைகள் வாழ நீங்கள் இந்தத் தேர்தலில் வெற்றி தேடித் தருவீர்கள் என்றால் நான் இன்னும் 50 ஆண்டுகள்கூட வாழ்வேன். கையை நான் கைகழுவிவிடவில்லை. மத்தியில் மதச்சார் பற்ற அரசு அமைய எந்தக் கையுடனும் கைகோர்க்கத் தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் மோடிகள் நுழைய முடியாது. ஏப்ரல் 24-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்  25-ந் தேதிக்குள் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களின் விடுதலை குறித்த வழக்கில் தீர்ப்பு வரும் என்று தலைமை நீதிபதி சதாசிவம் பொதுவிழாவில் பேசியிருப்பது அரசியல் விளைவை ஏற்படுத்துமோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது.''

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்- ""தமிழகம் மற்றும் தமிழர்களை முடக்க நினைக்கும் ஜெயலலிதாவை இந்த தேர்தலில் முடக்கி போட வேண்டும். உங்களால் ஒரு ஓட்டு என்றார் கலைஞர். ஆனால் தி.மு.க.வினர் ஒவ்வொருவரும் 100 ஓட்டு சேகரிக்க முடியும்.''

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு- ""ஊழல் ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்கிறார்களே தவிர அதை யார் ஒழிப்பது? பா.ஜ.க.வும் காங்கிரசும் ஊழ லில் ஊறிய கட்சிகளாக திகழ்ந்து வருகிறது. இனியும் அந்த கட்சிகள் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது. இந்தியாவில் ஜனநாயகம் நிலைத்து நிற்கவும் கம்யூனிஸ்டுகளை பலப்படுத்துங்கள்.''

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி- ""இலை மலர்ந்தால் ஈழம் மலரும்’ என கதை விடுகின்றனர். இலை மலர்ந்தால் ஈழம் மலராது. தொடர்ந்து அதற்கான போராட்டங்களை நடத்தினால் மட்டுமே ஈழம் மலரும். ஈழத்தாய் என வேடம் போடுகிறார் அந்த அம்மையார். ஈழத்திற்காக உண்மையாக உழைத்தது தி.மு.க.தான். அதற்காக ஆட்சியையே இழந்த கட்சியும் தி.மு.க.தான்.'' 

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ- ""நாங்கள் அரும்பாடுபட்டு கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கியிருக்கிறோம். தேர்தலுக்குப் பிறகு மத்திய ஆட்சியில் பங்கேற்க நினைக்கிறது அ.தி.மு.க. விதைத்தது நாங்கள் அதை அறுவடை செய்யலாம் என ஜெயலலிதா நினைக்கிறார். அது நடக்காது. போயஸ் தோட்டத்தில் பாராளுமன்ற செட்டிங் போட்டு, அதில் ஜெயலலிதா பிரதமர் போலவும், ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகராகவும் உட்கார்ந்து கொள்ளலாம்.''

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்- ""40 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டால் பிரதமராகிவிடலாம் என கனவு காண்கிறார் ஜெயலலிதா. ஒரு வாதத்திற்காக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் மீதமுள்ள 232 எம்.பி.க்களுக்கு என்ன செய்வார்? தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வோடு சேர்வதற்காக இந்த நிலையை அ.தி.மு.க. எடுத்துள்ளதாகக் கருதுகிறோம்.''

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின்-  ""மக்களைப் பார்த்து ஜெயலலிதா, "செய்வீர்களா? செய்வீர்களா?' என்று கேட்கிறார். நீங்கள் அவரைப் பார்த்து        "கடந்த 3 ஆண்டுகால ஆட்சியில் சொன்னதையெல்லாம் செய்தீர்களா? செய்தீர்களா? என்னத்த செய்து கிழிச்சீங்க?' என்று கேளுங்கள். ஜெயலலிதா ஹெலிகாப்டரில் ஏறும்போது, போலீசார் வயர்லஸ்ஸில் "ஓவர்' என்கிறார்கள். அவர் ஏறிவிட்டார்.. ஓவர் என்கிறார்கள். அவர் பறக்கிறார்.. ஓவர். அவர் இறங்கிவிட்டார்.. ஓவர் என்று எல்லாவற்றுக்கும் ஓவர் ஓவர் என்கிறார்கள். மொத்தத்தில் இந்த ஆட்சிக்கே ஓவர். காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்தின் நலனுக்கும் துரோகம் செய்தது யார் என பொதுமேடையில் விவாதிக்க ஜெயலலிதா தயாரா?''

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன்- ""இலங்கைத் தமிழர்களுக்கு என்ன  செய்தோம்; என்ன செய்வோம் என ஒரு வரி கூட பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் இல்லை. ஆனால்,  இலங்கைத் தமிழர் களை காப்போம் என்கிறார் மோடி. தமிழக மீனவர் களைப் பற்றி ஒரு வரியும் அவர்கள் தேர்தல் அறிக்கையில் இல்லை. ஆனால், தமிழக மீனவர்களின் நலனைப் பாதுகாப்போம் என்கிறார் மோடி. இப்படி இரட்டை வேடம் போடுபவர்தான் மோடி.''

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த்- ""குடிக்கத் தண்ணீர் இல்லை, வேலை இல்லை, மின்சாரம் இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் எதையும் செய்யமாட்டார்கள் என்பதால்தான் கரூர்  தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை உள்பட பல அ.தி.மு.க. வேட்பாளர்களை மக்கள் விரட்டி அடிக்கிறார்கள்.''

பா.ம.க நிறுவனர் ராமதாஸ்- ""ஒரு ரூபாய் ஊதியம் வாங்கிய ஜெயலலிதா, பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். கோடிக்கணக்கில் சொத்துக்களை குவித்துள்ள ஜெயலலிதாவுக்கு இந்த தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். பெண் முதல் அமைச்சர் ஆட்சி செய்யும் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் டெபாசிட் வாங்கக் கூடாது. வேறு கட்சிகளும் வாங்கக் கூடாது.''

விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்- ""என்னைத் தோற் கடிப்பதற்காக ஆளும் கட்சியும், வேறொரு கட்சியும் கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து பணம் கொடுத்து வாக்குகளை வாங்க ஆயத்தமாகி வருகிறது.. என்னை பற்றி ஒரு கட்சி அவதூறு பரப்பி வருகிறது.''

சி.பி.எம். மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்- ""ஜெயலலிதா ஒரு மாதமாக பிரச்சாரம் செய்து வரும் எந்த கூட்டத்திலும் பா.ஜனதாவை பற்றியும், மோடியை பற்றியும் விமர்சனம் செய்யவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கு உண்மையான மாற்று கட்சி இடதுசாரிகள்தான்.'' 

பா.ஜ.க. தமிழிசை சவுந்தரராஜன்- ""தமிழக மக்களுக்கு தி.மு.க., அ.தி.மு.க.வினர் என்ன செய்தார்கள். மாற்றுக் கூட்டணி அமையாதா? என மக்கள் ஏங்கினர். இந்த நிலையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி கூட்டணியாக, முதன்மை கூட்டணியாக அமைந்துள்ளது.  பா.ஜ.க. கூட்டணி 300 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். தமிழகத்தில் 40 தொகுதியிலும் வெற்றி பெறும்.'' 

தே.மு.தி.க. பிரேமலதா- ""மருத்துவமனைகள் என்ன நிலைமையில கிடக்குன்னு மக்களே உங்களுக்கே நல்லா தெரியும். தமிழ்நாட்டில் எந்த நல பணிகளும் நடக்கல. அதுதான் அ.தி.மு.க. அரசோட சாதனை. தே.மு.தி.க. இந்த தேர்தலில் பா.ம.க.வுடன் சேரக்கூடாது என பல்வேறு சூழ்ச்சிகள் நடைபெற்றன. ஆனால் அவற்றையெல்லாம் முறியடித்து தே.மு.தி.க.வும், பா.ம.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கிகளாக செயல்படுகின்றன.''

தி.மு.க. ராஜ்யசபா எம்.பி. கனிமொழி-  ""சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. போலீஸ்காரரின் வீட்டில்கூட கொள்ளை நடக்கிறது. ஒரு போலீஸ்காரருக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்றால் பொதுமக்களுக்கு எங்கிருந்து இந்த அரசு பாதுகாப்பு கொடுத்துவிடும். கொள்ளையர்களுக்கு பாதுகாப்பான இடம் தமிழகம், ஏனென்றால் அனைத்து கொள்ளையர்களும் தமிழகத்தில் பாதுகாப்பாக தங்கி உள்ளனர்.''

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்- ""விஜயகாந்த் தடுமாறி பேசுபவர். இப்போது அதிகம் தடுமாறி பேசுகிறார். தந்தை பெரியாருடன் மோடியை ஒப்பிட்டு பேசுகிறார். ஜாதி, மத பேதமின்றி அனைவரும் சரிசமமாக வாழ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றவர் பெரியார். ஆனால் மோடி மதவாதி. அவரை எப்படி பெரியாருடன் ஒப்பிட்டார் என புரியவில்லை.'' 

ad

ad