புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014

சிறந்த நிர்வாகி, குஜராத் மோடியா? தமிழகத்தின் இந்த ‘லேடி’யா? தென் சென்னை பிரசாரத்தில் ஜெயலலிதா விளக்கம்

நாட்டில் சிறந்த நிர்வாகி யார்? என்று கேள்வி எழுப்பியதுடன், குஜராத்தை சேர்ந்த மோடியா?, தமிழ்நாட்டை சேர்ந்த இந்த லேடியா? என்று தென்சென்னை தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா பேசினார்.


ஜெயலலிதா பிரசாரம்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் ஜெ.ஜெயவர்தனை ஆதரித்து, முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேன் மூலம் பிரசாரம் மேற்கொண்டார். கந்தன்சாவடி பஸ் நிலையம், ஐந்து விளக்கு, எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட், தியாகராயநகர் பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் மத்தியில் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
2011–ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்தல் நடைபெற்ற போது, 177 வாக்குறுதிகளை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். அவற்றில் 150 வாக்குறுதிகள் 3 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது எவ்வளவு பெரிய சாதனை?. மீதமுள்ள வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதற்கு இன்னும் 2 ஆண்டுகால அவகாசம் எங்களுக்கு உள்ளது. அதற்குள்ளாக நிச்சயம் நிறைவேற்றுவோம்.
ஆனால், 2009–ம் ஆண்டு மக்களவை தேர்தலையொட்டி, தி.மு.க.வால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. அப்படி இருக்கும்போது தி.மு.க. மீண்டும் வாக்குறுதிகள் அளிப்பது வாக்காளப் பெருமக்களாகிய உங்களை ஏமாற்றும் செயல்.
சி.பி.ஐ. சோதனை
2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் மூலம் பெருமளவுக்கு ஆதாயம் அடைந்த கட்சி தி.மு.க. அதனால் தான், காங்கிரஸ் கட்சிக்கு இன்றளவிலும் பக்க வாத்தியம் வாசித்துக்கொண்டிருக்கிறது தி.மு.க. இல்லையெனில், அவர்கள் மீதான நடவடிக்கையை காங்கிரஸ் முடுக்கி விட்டுவிடும். உதாரணத்திற்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ஹம்மர் காரை ஸ்டாலின் குடும்பத்தினர் பயன்படுத்தி வந்தனர். மத்திய காங்கிரஸ் கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொள்வதாக தி.மு.க. அறிவித்தவுடன், ஸ்டாலின் வீட்டை சி.பி.ஐ. சோதனையிட்டது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிற்கு தி.மு.க. ஆதரவை விலக்கிக்கொண்டதும், இதுபோன்று சோதனையிடுவது கண்டனத்திற்கு உரியது என்று அப்போது மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரமும், பாரத பிரதமரும் நீலிக்கண்ணீர் வடித்தனர். அதாவது, தி.மு.க. மத்திய அரசில் அங்கம் வகித்த காரணத்தினால் தான் இந்த முறைகேடு குறித்து மத்திய காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சி.பி.ஐ. சோதனைக்கு பிறகு தற்போதும் நடவடிக்கை ஏதுமில்லை. மத்திய காங்கிரஸ் அரசு இதை ஆழமாக கிளறவில்லை. காரணம் தி.மு.க. தமக்கு எப்போதாவது உதவும் என்று நினைத்து அந்த பிரச்சினையை கிடப்பில் போட்டுவிட்டது. தற்போது முறைகேடாக இறக்குமதி செய்யப்பட்ட அந்த ஹம்மர் காரை மத்திய அரசு பறிமுதல் செய்து, நிபந்தனையுடன் திருப்பி வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறதே?. இதுபற்றி ஸ்டாலினும், கருணாநிதியும் விளக்கம் அளிக்க வேண்டும்.
வளர்ச்சி விகிதம்
ஒரு மாநிலம் வளர்ச்சி பெற்று இருக்கிறதா? அந்த வளர்ச்சி ஏழை, எளிய நடுத்தர மக்களை சென்றடைந்து இருக்கிறதா? ஒடுக்கப்பட்ட மக்கள் வளர்ச்சி பெற்று இருக்கிறார்களா? என்பதை தெளிவுபடுத்தும் கண்ணாடியாக விளங்குபவை மனித வளக்குறியீடுகள். இதுவே விளம்பர வளர்ச்சி எது என்பதையும், உண்மையான வளர்ச்சி எது என்பதையும் தெளிவுபடுத்தும்.
குஜராத்தில் 16.6 சதவீதம் மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் 11.3 சதவீதம் மக்கள் மட்டும் தான் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர். உயிருடன் பிறக்கும் 1,000 குழந்தைகளில் ஒரு வயதடைவதற்குள் 38 குழந்தைகள் குஜராத்தில் இறந்து விடுகின்றன. ஆனால், தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 21 மட்டுமே. ஒரு லட்சம் குழந்தை பிறப்பில் தாய் இறப்பு விகிதம் குஜராத்தில் 122. தமிழ்நாட்டில் இது 90 தான். 2011–12–ம் ஆண்டு உணவு தானிய உற்பத்தி குஜராத்தில் 88.74 லட்சம் மெட்ரிக் டன் தான். தமிழ்நாட்டில் இது 101.51 லட்சம் மெட்ரிக் டன் என்ற உயரளவு ஆகும். அதே போன்று, உணவு தானிய உற்பத்தித் திறன் குஜராத்தில் ஹெக்டேருக்கு 21.4 குவிண்டால் தான். தமிழ்நாட்டில் இது 38.5 குவிண்டால் என்ற உயரளவாகும். குஜராத்தில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 22,220 ஆகும். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 36,996.
குஜராத்தில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 10 லட்சத்து 50 ஆயிரம் தான். தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை 15 லட்சத்து 90 ஆயிரம். அதாவது, 5 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் அதிகம். 2011 முதல் 2013 வரை குஜராத்தில் தொடங்கப்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில்களின் எண்ணிக்கை 1,20,016. ஆனால், தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களின் எண்ணிக்கை 1,61,732. அதாவது 41 ஆயிரத்து 716 தொழில்கள் கூடுதலாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன.
நேர்மாறான நிலை
2012–13–ம் ஆண்டு குஜராத்தில் பெறப்பட்ட அன்னிய முதலீடு வெறும் 2,676 கோடி ரூபாய். ஆனால், தமிழ்நாட்டில் பெறப்பட்டதோ 15,252 கோடி ரூபாய். ஊரகப் பகுதிகளில் தனிநபர் சராசரியாக செலவு செய்வது குஜராத்தில் 1,430 ரூபாய் ஆகும். தமிழகத்தில் இது 1,571 ரூபாய் ஆகும். நகர்ப்புறப் பகுதிகளில் தனிநபர் சராசரி செலவு குஜராத்தில் 2,472 ரூபாய் தான். தமிழ்நாட்டில் இது 2,534 ரூபாய் ஆகும். 2001 முதல் 2012 வரையிலான காலத்தில் குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை இது 29 சதவீதம் குறைந்துள்ளது. புரிந்துகொண்டீர்களா? குஜராத்தில் மகளிருக்கு எதிரான குற்றங்கள் 65 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் 29 சதவீதம் குறைந்துள்ளது. அதே போன்று சாதி, மத கலவரம் 2005 முதல் 2013 வரை குஜராத்தில் 479 ஆகும். தமிழ்நாட்டில் இது 237 தான்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் அதிக மக்கள் பயன்பெறும் மாநிலம் தமிழ்நாடு. குஜராத்தில் இதற்கு நேர் மாறான நிலைமையே உள்ளது. பொது விநியோக திட்டத்தில் இருந்து உணவுப் பொருட்களை கள்ளச் சந்தையில் விற்பது குஜராத்தில் 63 சதவீதம். தமிழ்நாட்டில் இது வெறும் 4 சதவீதம் தான். தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி; ஏழை, எளியோர் பங்கு பெறும் வளர்ச்சி என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிறந்த நிர்வாகி யார்?
இப்போது சொல்லுங்கள்? சிறந்த நிர்வாகி யார்? குஜராத்தைச் சேர்ந்த மோடியா? அல்லது தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த லேடியா? அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த நிர்வாகத்தை அளித்துக்கொண்டிருப்பவர் குஜராத்தின் மோடி அல்ல. தமிழ்நாட்டின் இந்த லேடி தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
வாக்களிப்பதற்கு முன்பு யாருக்கு வாக்களித்தால் தமிழகத்திற்கு நன்மை பயக்கும் என்பதை ஆராய்ந்து, சிந்தித்து, வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளப் பெருமக்களாகிய உங்களை, குறிப்பாக பெண்களை, இளைய சமுதாயத்தினரை, முதன்முறை வாக்காளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டின் நலன்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய அ.தி.மு.க.வுக்கு, மத்திய அரசின் கொள்கைகளை தீர்மானிக்கக் கூடிய வலிமையை நீங்கள் அளிக்க வேண்டும் என்று உங்களை எல்லாம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

ad

ad