வைகோவை நாம் வெற்றி பெற செய்ய வேண்டும் : ஆதரவாளர்களிடம் அழகிரி பேச்சு

விருதுநகர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி ஒன்றியம், வில்லூரை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் செல்வம் என்பவரது தோட்டத்துக்கு மு.க.அழகிரி சென்றார். அங்கு ஏராளமான அவரது ஆதரவாளர்கள் திரண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.அழகிரி பேசியபோது, ’’திருமங்கலம் இடைத் தேர்தலில் நான் ஆற்றிய பணிக்கு கட்சியின் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவி கிடைத்தது. இடைத்தேர்தலின் போது இந்த பகுதி மக்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி கொடுத்தேன். பேச்சு மாறி நடப்பவன் நான் அல்ல.
இந்த தொகுதியில் போட்டியிடும் வைகோவுக்கும் எனக்கும் தி.மு.க.வில் ஒரே மாதிரியான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் அவர் என்னை சந்தித்து தன் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டார். நான் ஆதரவு கொடுக்கிறேன். மற்றவர்களை காட்டிலும் வைகோ மிகச்சிறந்த மக்கள் சேவகர். இது மக்களுக்கு நன்கு தெரியும்.
முல்லை பெரியாறு பிரச்சினை, மதுவிலக்கு கோரி நடைப்பயணம் செய்தவர். தமிழக மக்கள் பிரச்சினைக்கு பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கக் கூடியவர். அதற்காக நாம் அவருக்கு பம்பரம் சின்னத்தில் ஓட்டு போட்டு வெற்றி பெற செய்ய வேண்டும்’’என்று தெரிவித்தார்.