புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


தென் மாவட்டத்தில் இருந்து வரும் எவரும் விழுப்புரம் நெடுஞ்சாலையைத் தொடாமல் சென்னைக்கு வர முடியாது.


அந்த நெடுஞ்சாலை தொகுதியின் களத்தில் அ.தி.மு.க. வேட்பாளராக ராஜேந்திரனும் தி.மு.க. சார்பில் முத்தையனும் தே.மு.தி.க-வில் உமாசங்கரும் காங்கிரஸில் ராணியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆனந்தனும் மல்லுக்கட்டுகிறார்கள். விழுப்புரம், திண்டிவனம், வானூர், உளுந்தூர்பேட்டை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளும் ஆளுங்கட்சி வசம் இருப்பது அ.தி.மு.க. வேட்பாளருக்கு ப்ளஸ். தொகுதிக்குப் பெரிய அளவில் திட்டங்கள் கொண்டுவராததால் சிட்டிங் எம்.பி-யான ஆனந்தன், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் மீது இருக்கும் கோபம் இந்தத் தேர்தலில் எதிரொலிக்கும். நகரங்களில் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கு குறைவுதான் என்றாலும் கிராமங்களில் கிராஃப் உயர்கிறது.
17 வருடங்களுக்குப் பிறகு விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுகிறது. பொன்முடி ஆசியால் திடீர்  வேட்பாளராகிவிட்டார் டாக்டர் முத்தையன். அவரை வெற்றி பெறவைக்க வேண்டும் என்று வேட்டியை மடித்துக்கொண்டுக் களத்தில் குதித்த பொன்முடி, வேட்பாளரின் செலவு கணக்கு முதல், பிரசார பிளான் வரை எல்லாவற்றையும் தன் மேற்பார்வையிலே செய்து வருகிறார். கோஷ்டிப்பூசலில் ஒன்றியச் செயலாளர்களும் மற்ற நிர்வாகிகளும் முகத்தைத் திருப்பிக்கொண்டு இருப்பதால், முத்தையன் பிரசாரத்துக்கு ஆள் கிடைப்பதே கஷ்டமாக இருக்கிறது. விழுப்புரம் நகரத்தில் தி.மு.க. பலமாகவும், திண்டிவனம், வானூர், கண்டமங்கலம், மரக்காணம் போன்ற பகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் பலமாக இருந்தாலும், பொன்முடி மீது இருக்கும் அதிருப்தியால் அவர்களின் பங்களிப்பில் தொய்வு. விழுப்புரம் தொகுதியில் கணிசமாக இருக்கும் முஸ்லிம்களின் ஓட்டுகள் தி.மு.க-வுக்கு விழும்.
''விழுப்புரம் மாவட்டத்தில் தே.மு.தி.க-வுக்கும் பா.ம.க-வுக்கும் இருக்கும் ஓட்டு சதவிகிதத்தையும் சேர்த்தால் எங்கள் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி'' என்று தே.மு.தி.க-வினர் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆனால், பா.ம.க-வின் மொத்த ஓட்டும் உமாசங்கருக்கு விழுமா என்பது சந்தேகமே.
விழுப்புரத்தின் அடிப்படை பிரச்னை​களுக்காகப் போராடிவரும் கம்யூனிஸ்ட்கள் கணிசமான ஓட்டைப் பிரிப்பார்கள். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ராணி காங்கிரஸ் வேட்பாளராக நிற்பதால், உள்ளூர் காங்கிரஸார் ஏக கடுப்பில் உள்ளனர். வேட்பாளர் அறிமுகக் கூட்டமே அடிதடியுடன்தான் ஆரம்பித்தது.
மொத்தத்தில் வெற்றிவாய்ப்பு அ.தி.மு.க-வுக்குத்தான்.

***

தொகுதியைத் தக்கவைக்க தி.மு.க-வும் இலையைத் துளிர்க்கவைக்க அ.தி.மு.க-வும் படாதபாடுபட்டு வருகின்றனர்.
தி.மு.க. வேட்பாளரான மணிமாறனுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜுக்கும்தான் கள்ளக்குறிச்சியில் நேரடி போட்டி. இவர்களுக்கு டஃப் கொடுப்பவர் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர் ஈஸ்வரன்.
கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் விழுப்புரம் மாவட்டத்திலும் ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு ஆகியவை சேலம் மாவட்டத்திலும் என பரந்துவிரிந்துள்ளது கள்ளக்குறிச்சி தொகுதி.
தி.மு.க. வேட்பாளர் மணிமாறனின் அப்பா ராமகிருஷ்ணன் 1945 முதல் தியாகதுருவம் கிளைக் கழக செயலாளராக இருந்து வருகிறார். உடல்நிலை சீராக இல்லை என்றாலும், ஊர் ஊராகச் சென்று தன் வயது சீனியர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார். மணிமாறன், தான் நடத்தும் மவுன்ட் பார்க் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். எல்லா தரப்பு வாக்காளர்களையும் கவர்வதற்கான தீவிரம் தெரிகிறது.
'20 வருடங்கள் அரசுப் பணியில் இருந்துள்ளேன். என் மீது ஒரு ஊழல் புகார்கூட இல்லை’ என்று தன்னைப் பற்றி மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு கேட்கும் மணிமாறன், விவசாயத் துறையில் பணியாற்றியவர் என்பதால் தொகுதியில் உள்ள முக்கியப் பிரச்னையான தண்ணீர் பற்றாக்குறையைப் போக்குவார் என்று விவசாயிகள் நம்புகின்றனர். இதுபோன்ற பாசிட்டிவான விஷயங்கள் மணிமாறனின் செல்வாக்கை வேகமாக உயர்த்துகிறது. தன் ஆதரவாளருக்கு சீட் தராததால் பொன்முடி ஆதரவாளர்கள் உள்ளடி வேலையில் இறங்கியிருப்பது தி.மு.க-வுக்கு  மைனஸ்.
அ.தி.மு.க. வேட்பாளர் காமராஜ், அமைச்சர் மோகனின் உறவினர். காமராஜ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன், அவரை ஜீப்பில் ஏற்றி​கொண்டு கிராமம் கிராமமாகச்  சென்று வந்தார் மோகன். ஆனால், எதிர்பார்த்த  ரெஸ்பான்ஸ் இல்லை. தண்ணீர் பிரச்னை, பசுமை வீடு ஒதுக்கீட்டில் முறைகேடு, கள்ளக்குறிச்சியைத் தனி மாவட்டமாகப் பிரிக்காதது போன்றவை ஆளுங்கட்சிக்குப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அமைச்சர் மோகன், தனது சாதியை மட்டுமே முன்னிலைப்படுத்துவதால் மற்ற சமூகத்தினர் அதிருப்தியில் உள்ளனர். அவர்களின் ஓட்டுக்கள் தி.மு.க-வுக்கு விழும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தே.மு.தி.க வேட்பாளர் ஈஸ்வரன் சேலம் விநாயகா மிஷன் மருத்துவக் கல்லூரியில் பணியாற்று​வதால் தொகுதியில் நல்ல பரிச்சயம். பா.ம.க., ஐ.ஜே.கே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஓட்டு கைகொடுக்கும் என்பது தே.மு.தி.க-வின் எதிர்பார்ப்பு. ஆனால், பா.ம.க-வினர் முழு ஈடுபாட்டுடன் வேலை பார்க்​காதது தே.மு.தி.க-வை திகிலடைய வைத்துள்ளது.
மணிமாறனுக்கு மகுடம் ரெடி என்பதுதான் மக்களின் குரலாக இருக்கிறது.

******

இரும்பு நகரமான சேலத்தில் தகதகக்கும் வெயிலையும் தாண்டி அனல் பறக்கிறது அரசியல் கட்சிகளின் பிரசாரத்தால்!
தி.மு.க. வேட்பாளராக உமாராணியும், அ.தி.மு.க-வில் பன்னீர்செல்வமும், தே.மு.தி.க-வில் சுதீஷ§ம் களத்தில் சுழன்று வருகிறார்கள். இவர்கள் தவிர, காங்கிரஸில் மோகன் குமாரமங்கலம், ஆம் ஆத்மி சதீஷ்குமார் என களம் சூடுபறக்கிறது.
சேலம் தொகுதியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர் வாக்குகள் இருக்கிறது. பா.ம.க-வில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருள், தொகுதி முழுக்க பிரசாரத்தை முடித்துவிட்ட நிலையில், கூட்டணிக்கு தொகுதி கைமாறியது. ஆனாலும், பா.ம.க. தலைமையால் அருளை சமாதானப்படுத்த முடியவில்லை. அருளின் ஆதரவாளர்களும் சமாதானம் ஆகவில்லை. இந்தச் சூழ்நிலையால் தே.மு.தி.க. வேட்பாளரான சுதீஷ், பா.ம.க-வின் ஆதரவு முழுமையாகக் கிடைக்காமல் திண்டாடி வருகிறார். விஜயகாந்த்தின் மைத்துனர் என்பதால், தே.மு.தி.க-வினர் வரிந்துகட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள். ஆடிட்டர் ரமேஷ் படுகொலைக்குப் பிறகுதான் பி.ஜே.பி. வேகம் பெற்றது. அந்தவகையில் அனுதாப ஓட்டுகள் விழும் என தே.மு.தி.க. நினைக்கிறது. சேலத்துக்கு மோடி வந்து சென்றதும் சுதீஷ§க்கு உற்சாகம் அளித்துள்ளது. வெளியூர்காரர் என்பது பெரிய மைனஸாகப் பார்க்கப்படுகிறது.
தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கு ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தது. பிரசாரம் தொடங்கிய பிறகு அது மெள்ளக் குறைந்தது. 'நான் உங்க வீட்டுப் பொண்ணு. இதே சேலத்துலதான் நான் இருக்கேன். எப்போ வேண்டுமானாலும் நீங்க வந்து என்னைப் பார்க்கலாம்’ என்ற உமாராணியின் பிரசாரத்துக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. அதே நேரத்தில் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இரட்டை மனதுடன் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவாளர்கள் வாக்குகள் உமாவுக்குக் கிடைக்குமா என்பது சந்தேகம்தான். பா.ம.க. அருளின் ஆதரவாளர்கள் மறைமுகமாக உமாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டியிருப்பது அவருக்கு இன்னொரு ப்ளஸ்.
கவுன்சிலர் தேர்தலில் நின்று தோற்றுப்போன பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க-வில் சீட் வழங்கப்பட்டுள்ளது. இவர் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பது மட்டும்தான் ப்ளஸ். இவர், மாநகர் மாவட்டச் செயலாளர் எம்.கே.செல்வராஜின் தீவிர ஆதரவாளர். சேலம் அ.தி.மு.க-வுக்குள் இருக்கும் கோஷ்டிப்பூசல்களும், ஆளுங்கட்சிக்கு எதிராக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் குடிநீர், மின்தடைப் பிரச்னைகளும் இவருக்கு மைனஸ்.
காங்கிரஸ் வேட்பாளரோ எப்படியாவது கணிசமான வாக்குகளை வாங்கிவிடத் துடிக்கிறார்.
இங்கு தி.மு.க. வேட்பாளர் உமாராணிக்கும் தே.மு.தி.க. வேட்பாளர் சுதீஷ§க்கும் தான் போட்டி. சுதீஷ§க்கு பா.ம.க. முழு ஒத்துழைப்பு தராததால் உதயசூரியனின் செல்வாக்கில் உமாராணி முன்னுக்கு வருகிறார்.

ad

ad