""தம்பி, கணக்கெடுக்க வந்திருக்கீக. போட்டா எல்லாம் எடுக்காதீக. எங்க சமுதாயம் பெருசு. ஊருக்குள்ள கட்சிக் கொடி கட்டக்கூடாது; பிரச் சாரமும் செய்யக்கூடாது. நாட்டாமை தலைமையில ஊரு கூடித்தான், யாருக்கு ஓட்டுனு முடிவு பண்ணுவோம்''’எனக் கூறி, நம்மைக் கையைப் பிடிக்காத குறையாக திருப்பி அனுப்பினார்கள், கடையநல்லூர் ச.ம. தொகுதியின் தேன்பொத்தை கிராமத்தில்.
""என்னோட கல்யா ணத்துக்கு ரூ.25 ஆயிரமும் தாலிக்கு 4 கிராம் தங்கமும் தந்தாக, இந்த ஆட்சியில. அவுகளத்தான் ஆத ரிப்பேன்''’என அடித் துச் சொன்னார், விசுவநாதபுரம் சங்கரி.
நம்மைக் கட்சிக்காரர்கள் என நினைத்துக்கொண்ட அச்சன்புதூரின் மூதாட்டிகள் மையது மீராவும் சிக்கந்தர் அம்மாளும், ""எய்யா, எந்தச் சின்னத்துக்குப் போடப் போறீகன்னு கேக்கியளே.. . ஆயிரம் ரூவா பென்சன் பல மாசமா நின்னுபோச்சு. இந்த வயசுல வேலை பாத்துப் பொழைக்க வேண்டியிருக்கு. மொதல்ல ஆயிரம் ரூவா குடு, கேள்விக்கு பதில் சொல்தம்யா''’என்று வாயடைக்கப் பார்த்தார்கள்.
""வெலவாசியச் சமாளிக்க முடியல. புழங்குற தண்ணியக்கூட வெலை குடுத்து வாங்கணும்னா நாட்டுநெலம எங்க போய்க்கிட்டு இருக்குது. அரசியல்வாதிங்க கூசாம ஓட்ட வாங்கிட்டுப் போயிடுறாங்க.. வருசம் முழுசும் நாங்கதாம்யா பொசுங்கிகிட்டுக் கெடக் கோம்''’என வெறுப்பைக் கொட்டினார், திருச்சிற் றம்பல கற்பூர இசக்கி.
""மூணு மாசமா தண்ணி கெடைக்காம தெண்டாடுறம். ஓட்டைப் புடுங்குறதுக்காக, ‘அதச் செய்யுறம், இதச் செய்யுறம்னுதான் வாராக. பெறவு இல்ல தெரியுது, இவுக பவிசு. மொதல்ல அடிப்படை வசதிகளைச் செஞ்சு குடுத்திட்டு, ஓட்டுக்காக ஊருக்குள்ள வாங்க; நாங்க இன்னும் ஏமாளி இல்லைனு திருப்பி அனுப்பிட் டம்''’-அதிகமாகவே ஆத்திரப்பட்டார், மேலக்கரையநல்லூர் லட்சுமி.
""காவலர் தேர்வு, இளைஞர் காவல்படைனு அறிவிப்பெல்லாம் குடுத்தாக. எல்லா டெஸ்ட்டுலயும் பாசாகியும் கடைசியில கட் ஆஃப் மார்க்குனு சொல்லி, என்னைப் போல நிறையப் பேரை கழிச்சிட்டாக. வேலைவாய்ப்புனு அறிக்கை விடுறதெல்லாம் சும்மா...''’என கோபத்தின் உச்சத்தில் பேசினார், வாசுதேவநல்லூர் ச.ம.தொகுதியின் வடக்குபுதூர் குருநாதன்.
""குஜராத்துல மோடி என்ன செஞ்சாரோ; ஆனா மதுவை ஒழிச்சிருக்காரே'' எனப் பெருமிதத்தோடு சொல்கிறான், முதல் முறையாக வாக்களிக்கப் போகும் டிப்ளமோ படிக்கும் மாரியப்பன்.
திருவில்லிபுத்தூர் சாலியர் தெருவில் முருகன், ""தென்காசியை தனி தொகுதியாக்கியது பிடிக்கவே இல்ல.. நான் எந்தக் கட்சியும் இல்ல. ஓட்டு போடறதுக்கும் மனசு இல்ல. போடாமலும் இருக்கமுடியல. அஞ்சு வருஷத்துக்கு ஒரு தடவைதான் வாய்ப்பு. ஏதாச்சும் ஒரு வேட்பாளருக்கு போட்டுத்தான் ஆகணும்''’என குழப்பமாகவே பேசினார்.
மம்சாபுரத் தில் திருநாவுக் கரசு என்ற முதி யவர் ""காங்கிரஸ் தோற்கும்கிறது எனக்குத் தெரி யும்.. ஆனாலும்.. என் ஓட்டு காங்கிரஸுக்குத் தான் இப்படியே பழகிப்போச்சு'' என்றார் பாரம்பரிய ஈர்ப்புடன்!
ராஜபாளையம் சர்ச் தெருவில்“""தெருவுக்குள்ள வந்தாத்தானே வேட்பாளர் யாருன்னு மக்களுக்குத் தெரியும்.. வேட்பாளருக்கும் எந்த எந்த தெரு மோசமா இருக்கும்கிறதும் தெரியும்''’ என ஆதங்கப்பட்டார் ஆல்பர்ட்.
பச்சமடம் ஊரில் நம்மிடம் வந்துபேசிய செல்வராஜ், ""அவரு எங்க கூட்டணி கட்சி வேட் பாளர்தான். ஆனாலும், அவரு எம்.பி. ஆயிட்டா தேவையில்லாத பிரச்சினையெல்லாம் தலைதூக்கும். அதுக்காகவே இந்தத் தடவை நான் மாத்தி போடப்போறேன்''’என்று பொடி வைத்துப் பேசினார்.
தளவாய்புரத்தில் கிருஷ்ண வேணி என்பவரோ, ""மோடி நல்ல மனுஷன்னு எல்லாரும் சொல்லுறாங்க. ஆனா அவரு இந்தத் தொகுதியில நிற்கல. பம்பரத்துக்கு ஓட்டு போட்டா மோடி பிரதமர் ஆயிருவாருன்னு சொல்லுறாங்க. அது எப்படின்னு எனக்கு புரியல''’என்றார் வெள்ளந்தி யாக.
-பரமசிவன், ராமகிருஷ்ணன்
இந்தியாவே எதிர்பார்க்கும் தொகுதி இது. இங்கு யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்கிற வாதப் பிரதி வாதங்கள் தொகுதியிலும், தமிழகத்திலும் அதைக் கடந்தும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது. நமது சர்வேயில், இரட்டை இலைக்கு டிக் செய்தவர்கள்கூட, ""இங்கே யாருங்க ஜெயிப்பாங்க? உங்க சர்வே அனுபவம் என்ன சொல்லுது'' என்று ஆவலுடன் கேட்கிறார்கள்.
மலைப்பகுதிகளில் உள்ள மக்களும், சமதளத்தில் உள்ள மக்களும், ""எங்க சிட்டிங் எம்.பி. ஆ.ராசா பெயர் சொல்கிற அளவிற்கு இந்தத் தொகுதிக்கு பல திட் டங்களை நிறைவேற்றியிருக்காரு. அவர் மேலே 2ஜி கேஸ் வராமல் இருந்திருந்தால், ஜெயிலில் போடாம இருந்திருந்தால் இன்னும் நிறைய திட்டங்கள் எங்களுக்கு வந்திருக்கும்'' என்கிறார்கள் கட்சி வேறுபாடின்றி. ஆனாலும் அவரவர் விரும்புகிற கட்சிக்கே டிக் செய்கிறார்கள்.
நீலகிரி மலை யில் பலரும், ""இங் கே நிலச்சரிவு ஏற்பட்டப்ப எங்களுக்கு உடனடியா நிவாரண உதவி கிடைக்க வழி செஞ்சாருங்க. அதுபோல உடனடியா கம்பளிப்போர்வை கொடுத்தனுப்பி னாருங்க. இதுக்கு முன்னே பிரபு, மாஸ்டர் மாதன் இவங்களெல்லாம் எம்.பியா இருந்திருக்காங்க. பிரபுவை நாங்க தர்மபிரபுன்னுதான் சொல்லுவோம். ஆனா, அவர் தர்மம் செஞ்சதெல்லாம் கோயிலுக்குத்தான். அப்பவெல்லாம் எம்.பியை பார்க்கவே முடியாது. போன 5 வருசமாத்தான் மக்களுக்கானத் திட்டங்களுக்கு நிதி கிடைச்சது. எம்பி.யையும் சந்திக்க முடிஞ்சுது'' என்கிறார்கள்.
மலைப்பகுதியில் குடியேறியுள்ள இலங்கையின் மலையகத் தமிழர்கள் மத்தியில், ""நம்ம புள்ளப்பா என்ற பாசம் ஆ.ராசா மீது இருக்கிறது. ராசாவின் அப்பாவுக்கு பூர்வீகம் இலங்கையின் மலையகப் பகுதி என்பதால் இந்தப் பாசம். அதனால் கூடலூரில் சூரியன் படுபிரகாசம். குன்னூரில் குடிதண்ணீரை ஒரு குழியிலிருந்து சேகரித்துக்கொண்டிருந்த பெண்மணியிடம் சர்வே படிவத்தை நீட்டினோம். ""ஒரு குடம் தண்ணி சேந்த ஒரு மணி நேரமாகுதுங்க. ஆனா, இதை குடிக்க முடியாது. கழுவிக்கொள்ளத்தான் பயன்படுத்தணும்'' என்றார் வேதனையுடன். வரும் வழியெல்லாம் வரிசையாக காலி குடங்களைப் பார்க்க முடிந்தது.
தேயிலை நன்கு விளைந்தாலும் டீத்தூளுக்கு விலை கிடைக்கவில்லை என்றும், முட்டைகோஸ் போன்ற காய்கறிகள் விளைந்தாலும் நட்டம்தான் என்ற குமுறல் மலைப்பகுதி விவசாயிகளிடமும் கேட்கிறது. மேட்டுப்பாளையம் தொகுதியில் உள்ள பலமான முஸ்லிம் வாக்குவங்கி சூரியன் பக்கம் முழுமையாக நிற்கிறது.
அ.தி.மு.க பலமுள்ள அவினாசியில் அருந்ததியர் சமுதாயத்தினரிடம் படிவத்தைக் கொண்டு சென்றபோது, இலைக்கு நடுவே சூரியனுக்கும் டிக் விழுந்தது. ""3% இடஒதுக்கீடு கொடுத்தது கலைஞர்தான்னு போன எலெக்சன்ல எங்களுக்குத் தெரியாதுங்க. இப்ப தாங்க இந்த கறுப்புசட்டை சென்னி யப்பனும் அவங்க ஆளுங்களும் வந்து திண்ணைப் பிரச்சாரம் செய்து உண்மையைச் சொன்னாங்க'' என்றனர்.
நீலகிரி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தே.மு.தி.க தரப்பினர் சூரியன் பக்கம் சாய்வதையும் காண முடிந்தது. கம்யூனிஸ்ட் தோழர்கள், ""எங்கள் முதுகில் குத்திய அ.தி.மு.கவுக்குப் பாடம் புகட்டுவோம். எங்கள் ஓட்டு களை வீணடிக்கமாட்டோம்'' என்கிறார்கள்.
இத்தனைக்கும் நடுவில், இந்தியாவே எதிர்பார்க்கும் இந்த தொகுதியில் அ.தி.மு.க ஜெயிக்க வேண்டும் என்பதற் காக எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் மேலிடம் செலவழிக்கும் என்ற பேச்சு அனைத்துத் தரப்பினரிடமும் உள்ளது& சர்வே டீம்
கருத்துக்கேட்பை நாம் தொடங்கிய போடி திருமா புரத்தில், சில பெண்கள் வீடுகளின் முன்னால் ஆயாசமாக உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் நம் படிவத்தை எடுக்கத் தொடங்கியதுமே, ""இப்பதான் இங்க இருக்கிற கட்சிக்காரர் ஒருத்தரு, வீடுவீடா வந்து, இந்த சின்னத்துக்குதான் ஓட்டு போடணும்னு மெரட்டுறதப் போல சொல்லிகிட்டுப் போயிருக்கார்... இந்த நேரம் பாத்து... நீங்க வேற சாமீ...''’என்று பெருமூச்சு விட்டனர்.
ஆண்டிப்பட்டி வட்டாரம் முழுக்க, பெரும்பாலானவர்கள் கண்ணை மூடிக்கொண்டு சொல்வது, ""அந்தக் காலத்துல இருந்தே ரெட்டலைக்குதான்யா... அத மாத்த முடியுமா?''’என்ற வாசகம்தான்.
ஜக்கம்பட்டியைச் சேர்ந்த நெசவாளர் பால்ராஜோ, ""அம்மாவுக்கு ஓட்டுப்போட்டா கரண்டு நிக்காம வரும்னு சொன்னாக. எங்கய்யா.. நெசவுக்கு பாவு(நூல்) இருக்குது.. தறி ஓட்டுறதுக்கு கரண்ட்டு இடைவெளி இல்லாம வரணு மேய்யா. இதனால, நெய்ய முடியாம வேறு வேலைகளுக் குத்தான் போயிகிட்டு இருக்கோம்''’என்றார் விரக்தியாக.
தேனி, அல்லி நகரத்தைச் சேர்ந்த புஷ்பமோ, ""ஓட்டு போடுவது நமது உரிமை. அதுக்குப் பணத்தை வாங்கினா, அது நம்மளையே விக்கிறதுக்குச் சமமாயிரும். நாட்டுல எல்லாரும் இப்பிடி நடந்துக்கணும்கிறதுதான் என்னோட கோரிக்கை''’ என்று நாட்டுப்பற்றால் நெகிழ்ச்சி அடையச் செய்தார்.
கதிர்நரசிங்கபுரத்தில் மாடு பிடித்துக்கொண்டு போன பெரியவர்களை மடக்கியபோது... ""அய்யா, எதுன்னாலும் வீட்டுக்காரம்மாகிட்ட கேட்டுத்தான் சொல்லுவேன். சாயங்காலம் வீட்டுப் பக்கமா வாங்கய்யா''’ என ஆச்சர்யப்பட வைத்தார் நாச்சிமுத்து.
உசிலம்பட்டி தொகுதி எழுமலையில், ""செயலலிதா, கருணாநிதி ரெண்டு பேருமே அவுகவுக டிவியில மத்தவுக ஊழல் செஞ்சதா, ஆளுகளப் போட்டு, திருப்பித் திருப்பி காட்டுறாக. ஒரே கொழப்பமா இருக்கு. ரெண்டுபேரு மேலயும் பிடிப்பு இல்லை. இத னால யாருக்கும் ஓட்டு இல்லைங்கிற பொத்தானைத் தான் அமுத்தப்போறேன்''“என்றார் சின்னக்கண்ணு.
ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியில் வடகாடு கிராமத்தில் நாம் சென்ற சமயம் பார்த்து, பெரிய தட்டியில் ’கை’ சின்ன உருவத்தைக் கட்டியபடி 5 மாட்டு வண்டிகளில் கட்சிப்பிரச்சாரம் செய்துகொண்டு போனார்கள். அதைச் சுட்டிக்காட்டியபடி நம்மிடம் பேசிய பெரியவர், ""தம்பி, அதைப் பாத்தீங்களா? இது எதைக் காட்டுதுன்னு பாத்தீங்களா? பெட்ரோல், டீசல் விலையை ஏத்திட்டான். அதனால மோட்டார் வாகனத்தை வாடகைக்கு எடுக்க முடியாதுன்னு, சொல்லாம சொல்லிக் காட்டுறாரு, நிதியமைச்சர் ப.சிதம்பரம்''’என்றார் விவரமாக.
திருநாளூரில் நம்மிடம் எதிர்ப்பட்ட சீருடையோடு வேலைக்குக் கிளம்பிக்கொண்டு இருந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், ""உங்களுக்கு டிக் அடிக்கிறது இருக்கட்டும்; அரசாங்கம் உறுதி சொன்ன 10 சதவீத பஞ்சப்படியை பத்து மாசமா நிறுத்திட் டாங்க. இதுக்கு ஏதாவது வழிபண்ண முடியுமா, பாருங்க?'' என்று சொல்லியபடி, படிவத்தை நிரப்பத் தொடங்கினார்.
சிவகங்கை அலவாக்கோட்டையில் விவசாயி மாணிக்கமோ, ""கரும்புக்கு நியாயமான விலை வாங்கித் தர்றதா சொல்லி, ஓட்டு வாங்குனாக. அந்தப் பக்கம் போயி ஆலைக்காரன்கிட்ட பொட்டிய வாங்கி, எங்களையே ஏமாத்திப்புடுறாக. இந்தவாட்டி வரட்டும், அவுகளா நாங்க ளானு பாத்துப்புடுறம்''’என்று ஆவேசப்பட்டார்.
திருப்பத்தூர் ச.ம.தொகுதியில் சிங்கம் புணரியில் ரேசன் கடைக்கு வந்த இளம்பெண் ஒருவர், “ ""என் பேர ஈரப் போட்றாதீக. ஓட்டுப் போடுறவுக கடமையை நாங்க சரியா செய்யுறோம். ஓட்டு வாங்கிட்டுப் போனவுக ஒழுங்கா அவுக கடமையைச் செய்றாகளா?'' என்று பொரிந்து தள்ளினார்.
மானாமதுரையில், ""ஒவ்வொரு எலக்ஷனப்பவும் வைகையாத்துக்குக் குறுக்க மாத்துப் பாலம் போட்டுத் தர்றம்னு சொன்னாய்ங்க. பேச்சு பேச்சாதான் போச்சு. பாலம் வரவே இல்லை. ஒரு வேளை ஆத்துல தண்ணிவந்தாதான், பாலம் போடணும்னு நினைச்சிருப் பாய்ங்களோ?''’ என்று நிறைவேறாக் கோரிக்கையை நக்கலாகச் சுட்டிக்காட்டினார், லாரி ஓட்டுநர் சரவணன்.
அன்னிய செலாவணியை அள்ளிக்கொண்டு வரும் பனியன் புகழ் திருப்பூர் தொகுதியில் வித்தியாசமான வாக்காளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
ஊத்துக்குளி அருகே ஒரு கிரா மத்து ரோட்டில் டூவீலரில் பயணித்த நம்மை, இரண்டு டூவீலர்களில் வந்த 4 இளைஞர்கள் கோபத்தோடு வழிமறித்தார் கள். விசாரித்தார்கள். அடையாள அட்டை யை வலுக்கட்டாயமாக வாங்கிப் பார்த்த பிறகே அவர்களது முரட்டுக் குணமும் ஆத்திரக்குரலும் மாறின.
""ஸாரி... ஸாரி... புதுசா யாரைப் பார்த்தாலும் திருட்டுப் பசங்களாவே எங்களுக்குத் தோணுது. இதே ரோட்ல எத்தனை வழிப்பறி... எத்தனை தாலிக்கொடிகள் அறுத்திருக்கானுங்க தெரியுமா? டூவீலர்ல வந்துதான் கைவரிசையைக் காட்டுறானுங்க. போலீஸ் ஒண்ணும் ஆக்ஷன் எடுக்கலை சார். புடுச்சுக் கொண்டு வா... கேஸ் போடுறேன்கிறாங்க. உங்களுக்குத் துணைக்கு வரட்டுங்களா?'' -அன்போடு நம்மை அனுப்பி வைத்தார்கள்.
மேலே நீங்கள் படித்த தகவலுக்கு எதிரான கருத்தை கோபி தொகுதி நம்பியூரில் நாம் கேட்டோம். ""நான் அ.தி.மு.க.காரன். ஆனால் இந்தத் தடவை இலைக்கு ஓட்டுப்போட மாட்டேன். இந்தத் தொகுதியை தன்னோட உசுராக நெனைக்கிற செங்கோட்டையனை சிதம்பரம் தொகுதிக்கு அனுப்பிவிட்டார்கள். அவருக்கு மினிஸ்டர் பதவியை கொடுக்கலைங்க. எல்லாம் தோப்பு செஞ்ச குறுக்குப் புத்திங்க. சத்தியமா நான் போட மாட்டேனுங்க?'' ஏதோ நாம் இலைக்கு ஓட்டு கேட்டதுபோல நம் மீது கோபத்தைக் காட்டினார் அந்த மனிதர்.
இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவச் சிப்பிகள், திருப்பூர் சர்வே கடலில் நமக்கு அகப்பட்டன. எல்லாவற்றையும் எழுதினால் இன்னும் ஏழெட்டுப் பக்கங்கள் நீளும்.