22 ஏப்., 2014


காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா: நாஞ்சில் சம்பத் பேச்சு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மருதராஜாவை ஆதரித்து கொள்கை பரப்பு துணை செயலாளர் நாஞ்சில் சம்பத் நேற்று இரவு மண்ணச்சநல்லூரில் பிரச்சாரம் செய்தார். 
அப்போது அவர் பேசியபோது
,  ‘’இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு. இந்த தேர்தலில் இந்தியாவில் 81 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். காடுகளை மட்டுமே நம்பி இருக்கும் பிலிப்பைன்ஸ் முன்னேறி இருக்கிறது. மீனை மட்டும் நம்பியிருக்கும் நார்வே, மனித உழைப்பை மட்டுமே நம்பியிருக்கும் ஜப்பான், கூட்டுப் பண்ணையை நம்பி இருக்கும் ரஷ்யா, அறிவியலை நம்பியிருக்கும் அமெரிக்கா ஆகிய நாடுகள் முன்னேறி இருக்கின்றன.


ஆனால் நிலக்கரி, இரும்பு, மனித ஆற்றல் என எல்லா வளமும் கொண்ட தீபகற்ப இந்தியா இன்னும் முன்னேறவில்லை. அதற்கு இந்த நாட்டை 60 ஆண்டுகாலம் ஆண்ட காங்கிரஸ்தான் காரணம். நம் நாட்டில் 58 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்றனர். எச்.ஐ.வி.–யால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியா. மூட நம்பிக்கை குழியில் சிக்கித் தவிக்கிறது நம் நாடு.
நம் ராணுவ வீரனின் தலையை துண்டித்தது பாகிஸ்தான். அருணாசல பிரதேசத்தின் ஒரு பகுதியில் சீன கொடி பறக்கவிடப்படுகிறது. கவுரவர்களின் சபையில் பாஞ்சாலியின் துகில் உரிக்கப்பட்டதைப் போல இந்திய துணை தூதர் தேவ்யானியின் துகிலை உரித்த நாடு அமெரிக்கா. இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை. உங்களுக்கு தெரியாமல் உங்கள் கழுத்து நெரிக்கப்படுகிறது. உங்களுக்கு தெரியாமல் உங்கள் கைகள் சங்கிலியால் பிணைக்கப்படுகின்றன.
இந்தியாவை இன்னும் அடிமை நாடாக ஆக்கியதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி. அந்த காங்கிரசுக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் முடிவுரை எழுதியவர் அண்ணா. இந்தியா அரசியலில் முடிவுரை எழுதப் போகிறவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா.
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் உரிமைக்கு பா.ஜ.க. குரல் கொடுக்குமா? அதற்கு ஏதாவது அந்த கட்சி உறுதியளித்துள்ளதா? காவிரியில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை கருணாநிதியால் நிலைநாட்ட முடிந்ததா? நடுவர் மன்ற தீர்ப்பை சட்டப் போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா. இந்தியா வல்லரசாக ஆக சந்தியாவின் மகள் ஜெயலலிதா இந்தியாவை ஆள வாய்ப்பு தாருங்கள். இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’’என்று தெரிவித்தார்.