புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


******

தமிழகத்தின் சென்சிட்டிவான தொகுதிகளில் திருநெல்வேலியும் ஒன்று.

இங்கே தி.மு.க வேட்பாளர் தேவதாசசுந்தரம். அ.தி.மு.க. சார்பில் கே.ஆர்.பி.பிரபாகரன் களம் இறங்கி இருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பில் சிட்டிங் எம்.பி-யான ராமசுப்பு, தே.மு.தி.க. வேட்பாளராக சிவனணைந்த பெருமாள், ஆம் ஆத்மி சார்பில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக்குழுவின் உறுப்பினரான மை.பா.ஜேசுராஜ், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் முகம்மது முபாரக், இந்து மக்கள் கட்சி வேட்பாளராக சுப்பிரமணி என்று பெரிய கூட்டமே இங்கே களம் காண்கிறது. இதுதவிர, தமிழ்நாடு மக்கள் காங்கிரஸ் வேட்பாளராக யாதவ மகாசபையின் தேவநாதனும், சுயேச்சையாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.ஏ.கே.ஏ.லட்சுமணனும் களம் இறங்கி அரசியல் சூட்டை அதிகரித்து உள்ளனர்.
தி.மு.க-வைப் பொறுத்தவரை, வேட்பாளர் தேவதாசசுந்தரம் சென்னையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவர் என்பது மைனஸ் பாய்ன்ட். கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசலை வைட்டமின் 'ப’ மூலம் சாமர்த்தியமாக சமாளித்துவிட்டார். 'தொழில் வாய்ப்பில் பின்தங்கி இருக்கும் இந்தத் தொகுதியை முன்னேற்றுவேன்’ என்கிற வாக்குறுதியை பிரதானமாகக் கொண்ட அவரது பிரசாரம் மக்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு இவருக்கான கூடுதல் பலம்.
அ.தி.மு.க-வின் வேட்பாளரான பிரபாகரனுக்கு சொந்தக் கட்சியினர் முழு ஒத்துழைப்பு தரவில்லை. பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் நிர்வாகிகள் கோட்டைவிட்டனர். தொகுதி முழுக்கவே இருக்கும் குடிநீர் பிரச்னை ஆளுங்கட்சி வேட்பாளருக்கு சிக்கலை உண்டாக்கி இருக்கிறது.
தே.மு.தி.க வேட்பாளர் சிவனணைந்த பெருமாளுக்குக் கூட்டணி பலம் இருந்தாலும் பிரசாரத்தில் வேகம் இல்லை. மோடியின் அலை தன்னை டெல்லிக்கு இழுத்துச் செல்லும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் சூப்பராக செயல்பட்ட காங்கிரஸின் சிட்டிங் எம்.பி-யான ராமசுப்புக்கு எதிராக சொந்த கட்சியினரே ஒத்துழையாமை இயக்கம் நடத்தினர். ஆனாலும், தனக்கு உள்ள செல்வாக்கினால் கணிசமான வாக்குகளை இவர் வாங்குவார்.
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் வேட்பாளரான முகம்மது முபாரக் இஸ்லாமிய சமூகத்தினரின் வாக்குகளைப் பிரிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பார். ஆம் ஆத்மி கட்சிக்கு கடலோர கிராமங்களில் மட்டுமே ஆதரவு இருக்கிறது.
இறுதி நிலவரப்படி, சொந்தக் கட்சி பலம், பண பலம் ஆகியவற்றால் தேவதாச சுந்தரம் முதல் மரியாதையோடு தேர் இழுக்கத் தயாராகிறார்.

******

முக்கடலும் சங்கமிக்கும் தொகுதியான கன்னியாகுமரியில், மாநிலக் கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தேசியக் கட்சிகள்தான் முட்டிமோதுகின்றன. சோனியா, மோடி என இருவருமே தங்கள் வேட்பாளர்களுக்காக அனல் பிரசாரம் செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.  
பகீரத பிரயத்தனப்பட்டு தமிழகத்தில் மெகா கூட்டணி அமைத்து சாதித்துக் காட்டிய பி.ஜே.பி. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்தான் இந்தத் தொகுதியின் வேட்பாளர். இந்தத் தொகுதியில் கணிசமாக இருக்கும் பி.ஜே.பி-யின் பாரம்பரிய ஓட்டுக்கள், கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்கள் தனக்கு மிக பலமாக இருக்கும் என பொன்னார் நம்புகிறார். இளைஞர்கள், மீனவர்கள் பற்றி தனது பிரசாரத்தில் ஹைலைட்டாகப் பேசி அவர்களது வாக்குகளையும் கவர்கிறார்.
இவருக்கு டஃப் ஃபைட் கொடுக்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார். தனது தனிப்பட்ட செல்வாக்கும், காங்கிரஸ் வாக்குகளும் வெற்றிக்கோட்டை எட்டவைக்கும் என்ற நம்பிக்கையில் தீவிர பிரசாரத்தில் இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு உட்கட்சிப்பூசல் ரொம்பவே குடைச்சலைக் கொடுக்கிறது. பொன்னாரும் வசந்தகுமாரும் இந்து நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அந்தச் சமூக வாக்குகளைக் கவர்வதில் இருவருக்கும் இடையில் பலத்த போட்டி.
இந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பவை கிறிஸ்துவ மக்களின் வாக்குகள்தான். அவை பி.ஜே.பி-க்கு பெரும்பாலும் போகாது. அந்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றிவிட வேண்டும் என்று வசந்தகுமார் துடியாய்த் துடிக்கிறார். இருந்தாலும் போட்டியில் இருக்கும் மற்றக் கட்சிகள் அந்த வாக்குகளைப் பங்குபோடுகின்றன.  
அ.தி.மு.க. வேட்பாளர் ஜாண்தங்கமும், தி.மு.க. வேட்பாளர் எஃப்.எம்.ராஜரத்தினமும் தேசிய கட்சிகளுக்கு அடுத்த நிலையில்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க. தொகுதி பொறுப்பாளரான பச்சைமால், கட்சி நிர்வாகிகளை சம்பந்தம் சம்பந்தம் இல்லாத பகுதிகளுக்கு தேர்தல் பணிகளை கவனிக்க அனுப்பியதில், நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கிறார்கள். அந்த அதிருப்தி வாக்குகள் பி.ஜே.பி. பக்கம் திரும்பவே வாய்ப்பு உண்டு. அதனால், ரேஸில் அ.தி.மு.க. பின்தங்கியுள்ளது.
சி.பி.எம். சார்பில் போட்டியிடும் பெல்லார்மினும், ஆம் ஆத் ஆத்மி வேட்பாளரான 'கூடங்குள எதிர்ப்பு போ​ராளி’ சுப.உதயகுமாரனும் கணிசமான வாக்குகளை வாங்குவார்கள்.
கூட்டணி பலம், தனக்கே உரித்தான அணுகுமுறை உள்ளிட்ட காரணங்களால் குமரியில் பொன்னார் மின்னுகிறார்.


****

இரண்டு 'சாமி’களுக்கு நடுவே நடந்த காரசார பிரசாரமே புதுவை நாடாளுமன்றத் தொகுதியின் பரபரப்பு.
ராஜ்யசபா, லோக்சபா என 23 ஆண்டுகளாக எம்.பி-யாக இருந்த நாராயணசாமி, காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து மாநிலக் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ், பி.ஜே.பி-யுடன் கூட்டணி அமைத்து முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணனைக் களமிறக்கியுள்ளது. மேலும் கூட்டணிக்கு முரண்பட்டு பா.ம.க. சார்பில் அனந்தராமன் நிறுத்தப்பட்டுள்ளார். தி.மு.க. சார்பில் நாஜிம், அ.தி.மு.க. சார்பில் ஓமலிங்கம் என புதுவையில் ஏழு முனைப் போட்டி.
மோடியின் படத்தை வைத்து இரண்டு கட்சிகள் ஓட்டு சேகரிக்கும் வினோத அரசியலை இங்கு மட்டுமே காண முடியும். ராதாகிருஷ்ணன், அனந்தராமன் இருவருமே மோடி பேனரில் வலம் வருகிறார்கள். ரங்கசாமி முதல்வராகப் பொறுப்பேற்று மூன்றாண்டுகள் முடிந்தும் தேர்தல் நேரத்தில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை சரிவர நிறைவேற்றவில்லை. 'அதற்கு மத்திய அமைச்சர் நாராயணசாமி போட்ட முட்டுக்கட்டைதான் காரணம்’ என்கிறார் ரங்கசாமி. என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ராதாகிருஷ்ணன் புதுவை நகர பகுதி மக்களுக்கு நல்ல பரிச்சயம். எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காதவர். முன்னாள் சபாநாயகரும்கூட. இவை இவருக்கு ப்ளஸ்.
அனைத்து வேட்பாளர்களை விடவும் விரைந்து பிரசாரத்தைத் தொடங்கியவர் நாராயணசாமி. நேரம் காலம் பார்க்காமல் கடுமையாக உழைத்தார். கடந்த வாரம் வரை முன்னிலையில் இருந்த அவருக்கு, புதுவை முதல்வர் ரங்கசாமி பிரசாரத்தைத் தொடங்கியவுடன் செல்வாக்கு சரியத் தொடங்கியது. மேலும், மாநிலத்தில் உள்ள வன்னியர் சங்கங்கள் பா.ம.க. பக்கம் சாயாமல் என்.ஆர். காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இது இவருக்கு ப்ளஸ்.
தி.மு.க. வேட்பாளர் நாஜிம் தன் சொந்த ஊரான காரைக்கால் முஸ்லிம் வாக்குகளை நம்பி களத்தில் இறங்கியுள்ளார். மேலும், புதுவையில் உள்ள கணிசமான தி.மு.க. ஓட்டுக்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பெறுவார். அ.தி.மு.க. வேட்பாளர் ஓமலிங்கமும், பா.ம.க. வேட்பாளர் அனந்தராமனும் அதற்கு அடுத்த இடங்களைத்தான் அடைய முடியும் போல் தெரிகிறது.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று, சோனியா குடும்பத்தோடு இன்னும் நெருக்கமாகிவிடலாம் என்பது நாராயணசாமியின் கணக்கு. அந்த மனக் கோட்டையை மணல் கோட்டை ஆக்கிவிடுவார் ராதாகிருஷ்ணன் என்பதே இன்றைய நிலை!

ad

ad