புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2014


கோழியும் லாரியும் நிறைந்திருக்கும் நாமக்கல்லில் சிட்டிங் எம்.பி-யான காந்திசெல்வனுக்கே தி.மு.க. மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது. அ.தி.மு.க-வில் முன்னாள் எம்.எல்.ஏ-வான பி.ஆர்.சுந்தரமும், தே.மு.தி.க-வில் வழக்கறிஞர் எஸ்.கே.வேலுவும் களமிறங்கியுள்ளனர். சுப்ரமணியன் என்பவர் காங்கிரஸ் வேட்பாளர்.


நாமக்கல் மாவட்டம் முழுக்கவே குடிநீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. பி.ஆர்.சுந்தரம் ஓட்டுக் கேட்டு செல்லும் இடங்களில் ஆளுங்கட்சி மீது உள்ள கோபம் எதிரொலிக்கிறது. செலவுக் கணக்கு காரணமாக மேடையில் வேட்பாளர் இல்லாமல் ஜெயலலிதாவின் முதல் பிரசாரக் கூட்டம் நடந்தது நாமக்கல்லில்தான்! இதனால், வேட்பாளரின் முகம் பெரும்பாலோனோருக்குத் தெரியவே இல்லை. கட்சிக்குள் இருக்கும் சில கோஷ்டிப் பிரச்னைகளால் பிரசாரத்திலும் நிறையவே சுணக்கம் தெரிகிறது. எல்லாவற்றையும் தாண்டி இரட்டை இலை என்ற செல்வாக்கு சுந்தரத்தை கரை சேர்க்கும் என்பது அ.தி.மு.க-வினரின் நம்பிக்கை.
தி.மு.க. வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான காந்திசெல்வனை யார் வேண்டுமானாலும் எளிதில் சந்திக்க முடியும். கட்சியில் மாவட்டச் செயலாளராகவும் இருப்பதால், தொகுதி முழுக்கவே நல்ல அறிமுகம் இருக்கிறது. ஆனால், தொகுதிக்காக கடந்த ஐந்து வருடங்களில் வளர்ச்சித் திட்டங்கள் எதையும் பெரிதாகக் கொண்டுவரவில்லை என்பது அவருக்கு மைனஸ். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் கோபம், காந்திசெல்வனுக்குப் ப்ளஸ் ஆக மாற வாய்ப்பு இருக்கிறது. ஸ்டாலின் பிரசாரத்துக்கு வந்துபோன பிறகு, இன்னும் கூடுதல் தெம்புடன் வேலை பார்க்க ஆரம்பித்திருக்கிறார் காந்தி. நாமக்கல் மாவட்டத்தில் கணிசமாக இருக்கும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது காந்தியின் கூடுதல் பலம்.
தே.மு.தி.க. வேட்பாளரான எஸ்.கே.வேலு, நாமக்கல்லில் நன்கு அறிமுகமானவர் என்றாலும், தொகுதி முழுக்க அறியப்படாதவராகவே இருக்கிறார். மோடி அலையால், இளைஞர்களின் வாக்குகளும், கூட்டணி கட்சி வாக்குகளும் தனக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறார் வேலு.
காங்கிரஸ் கட்சிக்குக் குறிப்பிடும்படியான வாக்கு வங்கி நாமக்கல்லில் இருக்கிறது. ஆனால், அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு கட்சிக்குள் எதிர்ப்பு இருக்கிறது. இருந்தாலும் கை சின்ன வாக்குகளை வைத்து எப்படியும் டெபாசிட் வாங்கிவிட முடியும் என்பது காங்கிரஸ் வேட்பாளர் சுப்ரமணியத்தின் கணக்கு.
க்ளைமாக்ஸில் காந்திசெல்வனை முந்தி டாப் கியர் போடுகிறார் சுந்தரம்!

*****

டாலர் சிட்டியான திருப்பூர் ஐந்து முனைப் போட்டிகளால் திணறிக்கொண்டு இருக்கிறது.
அ.தி.மு.க. வேட்பாளரான சத்தியபாமா, கோபி யூனியன் சேர்மனாக இருந்தவர். இவரை வேட்பாளராக அறிவித்ததும் கட்சியில் நிறைய அதிருப்திகள் கிளம்பியது. தலைமைக்குப் புகார்களும் பறந்தது. கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை பகுதிகள் அ.தி.மு.க-வுக்கு செல்வாக்கான ஏரியா என்பது சத்தியபாமாவின் ப்ளஸ். அதே நேரத்தில் உட்கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல் அவரது வெற்றிக்கு ஆப்பு வைத்துவிடுமோ என்ற பயமும் சத்தியபாமாவுக்கு நிறையவே இருக்கிறது. சோர்ந்து போயிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் சத்தியபாமாவுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை என்ற குரலும் கோபி பகுதியில் உரக்கக் கேட்கிறது. திருப்பூரில் மின்வெட்டுப் பிரச்னையால் தொழில் உற்பத்தி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதுவும் ஆளுங்கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறும் வாய்ப்புள்ளது.
தி.மு.க. வேட்பாளர் டாக்டர் செந்தில்நாதன் வயதில் மூத்தவர். ஆனால், முதல் முறையாகத் தேர்தல் களத்தில் நிற்கிறார். உட்கட்சிப் பூசலால் டாக்டர் செய்வதறியாமல் குழப்பத்தில் இருக்கிறார். தி.மு.க-வின் வாக்கு வங்கியும், சிறுபான்மையினர், தலித் வாக்குகளும் தனக்கு சாதகமாக இருக்கும் என்பது டாக்டரின் எண்ணம்.
மோடி துதி பாடி முரசை பலமாகக் கொட்டுகிறது தே.மு.தி.க. மின்வெட்டு, தொழில் பிரச்னை, விவசாயப் பிரச்னைகளை முன்வைத்து, 'மோடி வந்தால் எல்லாம் சரியாகும்’ என வாக்கு கொடுத்து வாக்கு கேட்கிறார் தே.மு.தி.க. வேட்பாளர் தினேஷ்குமார். திருப்பூர் மாவட்டத்தில் நன்கு அறிமுகமானவர். மோடி அலையில் எப்படியும் கரையேறிவிடுவோம் என நம்புகிறார். பி.ஜே.பி.யின் வாக்குவங்கி இவருக்கு பலம் கொடுக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். கௌரவமான வாக்குகளைப் பெற்று டெபாசிட் வாங்கிவிட வேண்டும் என்பதுதான் இளங்கோவனின் தாகமாக இருக்கிறது. கோஷ்டிகளை மறந்து இளங்கோவனுக்காக காங்கிரஸ் கட்சியினர் ஒன்று சேர்ந்து வேலை பார்க்கின்றனர். தொழில் பிரச்னையில் மத்திய அரசு மீதான அதிருப்திதான் இளங்கோவனின் மைனஸ்.
இடதுசாரிகள் தரப்பில் கதிர் அரிவாள் கொடி பிடிக்கிறார் சுப்பராயன். மிக உற்சாகமாய் தேர்தல் வேலைகளை பார்க்கின்றனர் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சியினரும்.
காங்கிரஸும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் கௌரவமான வாக்குகளுக்காகப் போராட, ஏகப்பட்ட சிக்கலில் தி.மு.க-வும் திணறுகிறது. வெற்றிக்கு முட்டி மோதுவது இரட்டை இலையும், முரசும்தான்! அதில் சக்ஸஸ் சத்தியபாமா என்ற குரல்தான் திருப்பூரில் ஓங்கி ஒலிக்கிறது.

*****

மஞ்சள் மணக்கும் ஈரோட்டில் பி.ஜே.பி. கூட்டணியில் ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி, அ.தி.மு.க. சார்பில் செல்வக்குமார சின்னையன், தி.மு.க. வேட்பாளராக பவித்திரவள்ளி, காங்கிரஸ் சார்பில் கோபி ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.
தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அ.தி.மு.க-வில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு பிரசாரத்தைத் தொடங்கியவர் செல்வகுமார சின்னையன். கட்சியின் வழக்கறிஞர் பிரிவில் பொறுப்பு வகிப்பவர் என்பதைத் தவிர, கட்சி விவகாரங்களில் எந்தப் பங்களிப்பும் இல்லாதவர். வழக்கறிஞர் தயவிலேயே வென்றுவிடலாம் என்று அவரும் ஆரம்பத்தில் பிரசாரப் பணிகளை செய்தார். அதிருப்தி இருந்தாலும் கட்சி நிர்வாகிகள் எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் முதல்வருக்குப் பயந்து பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசாரத்தில் சுரத்து ஆரம்பத்தில் இருந்தே குறைவாக இருக்கிறது.
தொகுதியின் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்திக்கு ஏற்கெனவே பெரும்பான்மையான கிராமங்களில் நல்ல செல்வாக்கு இருக்கிறது. எளிதாக சந்திக்கக்கூடிய பிரமுகர் என்பது பலம்.
சில நாட்களுக்கு முன் விவசாயிகளுக்குக் கடன் வழங்கும் மத்திய அரசின் திட்டம் தொடர்பாக, அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர் கிட்டுச்சாமி வங்கி அதிகாரிகளை மிரட்டினார். இதையடுத்து, இந்த விவகாரத்தை ம.தி.மு.க-வினர் கிராமம் கிராமமாகப் பிரசாரம் செய்தனர். நமக்கு கிடைக்கும் வங்கிக் கடனை அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர்தான் தடுக்கிறார் என்றும் விவசாயிகள் நம்புவ‌தால், அ.தி.மு.க-வின் செல்வாக்கில் பின்னடைவு ஏற்பட்டு இருக்கிற‌து. 'கடந்த முறை அ.தி.மு.க. தயவு இருந்ததால்தான் கணேசமூர்த்தியால் ஜெயிக்க முடிந்தது’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர். இந்த முறை ஈஸ்வரனின் கொங்கு கட்சி ஆதரவு உள்ளதால் ம.தி.மு.க-வினர் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். மோடி வந்து சென்றதும் அவருக்கு கைகொடுக்கிறது.
அ.தி.மு.க-வும் ம.தி.மு.க-வும் கடும் போட்டியில் இருக்கும் சூழ்நிலையில், தி.மு.க-வின் வேட்பாளர் பவித்திரவள்ளி பகீரதப் பிரயத்தனம் செய்துவருகிறார். இவர் அரசியலுக்கும் புதுசு, தி.மு.க-வுக்கும் புதுசு, தொகுதிக்கும் புதுசு என்பதால் வெறுமனே உதயசூரியன் சின்னத்தை மட்டுமே நம்பி நிற்கிறார்.
டெபாசிட் தொகையைத் தக்கவைக்க முடியுமா என்பதே காங்கிரஸின் நிலை. இங்கு பிரபலமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருப்பூர் வேட்பாளராகப் போய்விட்டதால் தனிமையில் போராடிக்கொண்டு இருக்கிறார் கோபி.
பி.ஜே.பி. கூட்டணி பலமும் சிட்டிங் எம்.பி-யாக நற்பெயரும் இருப்பதால், ம.தி.மு.க. வேட்பாளருக்கே ஏறுமுகம்.

ad

ad