நரேந்திர மோடி அழைத்தால் சேர்ந்து வாழத் தயார்: மனைவி யசோதா பென் பேட்டி
மோடியும், பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது, வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் முதன் முதலாக தனது மனைவியின் பெயர் யசோதா பென் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.
இந்த நிலையில் யசோதா பென் அளித்துள்ள ஒரு பேட்டியில்,
அவர் நாட்டின் பிரதமராக பதவி ஏற்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒட்டுமொத்த தேசத்தைவிட அதிகமாக மகிழ்கிறேன். என்னை அழைத்தால் அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்வேன். அவரது தேர்தல் வெற்றிக்காக விரதம் இருந்தீர்களா என்று கேட்கிறீர்கள். இது எனது அந்தரங்க விஷயம். வெளியே சொல்ல மாட்டேன்.
நானும் அவரும் விவாக ரத்து செய்து கொள்ளவில்லை. நாங்கள் சேர்ந்து வாழவில்லை அவ்வளவுதான். அவர் எப்போதுமே நாட்டுக்கு சேவை செய்யத்தான் விரும்பினார். அதனால்தான் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையை தியாகம் செய்துவிட்டார். அவரைப் பொறுத்தமட்டில், அவரது வாழ்க்கையில் நாடுதான் மிகவும் முக்கியம்.
இத்தனை வருடங்களில் அவர் என்னை ஒரே ஒருமுறை (1987ம் வருடம்) சந்தித்திருக்கிறார். நான் என் படிப்பைத் தொடர்வதற்கு அவர் ஊக்கம் தந்தார். அவர் முதன் முதலாக வதோதரா தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது, என்னை மனைவி என்று ஒப்புக்கொண்டபோது மிகவும் திரில் ஆக இருந்தது.
அவர் அழைத்தால் அவருடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறேன். இவ்வாறு யசோதா பென் கூறியுள்ளார்.