ஒரு சமூகம் செய்யவேண்டிய பணியைத் தனிமனிதராக முன்னெடுத்து எமது எழுத்துச் செல்வங்கள் பல அழிந்துவிடாமற் காப்பாற்றியவர் குரும்பசிட்டி இரா.கனகரத்தினம். ஆவணக் காப்பு என்ற சொல்லையே அவரிடம் இருந்துதான் அறிந்தேன். இன்று அவர் மீளாத்துயிலில் ஆழ்ந்தார். அவருக்கென் அஞ்சலி!! என இளவாலை விஜேந்திரன் தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார்.
1990களில் கண்டி முல்கம்பலையில் சரிநிகர் பத்திரிகைக்காக இவரை முதலில் சந்தித்து இருக்கிறேன்... பின்னர் கொல்பிட்டியில் உள்ள அலோஅவனியூவில் இரண்டு தடவைகள் சந்தித்த ஞாபகம்... மிகப்பெரும் பணியை தனியொருவராக செய்த இரா கனகரட்ணம் அவர்களின் மறைவு, தமிழ் உலகிற்கு பேரிழப்பு என்றே சொல்ல வேண்டும்.. இரா கனகரட்ணம் அவர்கள் குறித்து பேராசிரியர் சந்திர சேகரன் அவர்கள் எழுதிய குறிப்பொன்றும், அவர் குறித்து விக்கிபீடியாவில் வந்த குறிப்புகளையும் தொகுத்து இங்கு தருகிறோம்...
நடராஜா குருபரன்.
தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு தமிழரின் கல்வி போன்ற இன்னோரன்ன துறைகளில் பணியாற்றி வந்த வருகின்ற ஏராளமான தமிழர்களை இனங்காண முடியும். ஆயினும், குரும்பசிட்டி இரா.கனகரத்தினம் கடந்த 45 ஆண்டுகளாக ஆற்றி வரும் அரிய தமிழ்ப் பணிக்கு ஈடு இணையில்லை என்றே கூறவிடலாம்.
ஈழத்தமிழர்களின் 100 வருட வரலாற்றை ஆவணப்படுத்தி, அதனை நிரந்தரமாகப் பேணிப் பாதுகாத்து, வருங்காலத் தலைமுறையினருக்கு வழங்கும் பணியில் கண்டி உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் நீண்டகாலமாக ஈடுபட்டு வருகிறது.
இப்படி (Micro film) செய்யப்பட்ட ஒரு வலாற்றுத் தொகுதியை (200) யுனெஸ்கோ முன்வந்து வாங்கி சுவிற்சர்லாந்தில் (Glarus Archives) பாதுகாப்பாகவும், ஆய்வாளர்களின் பயன் பாட்டுக்காகவும் வைத்துள்ளது.
இலங்கை வாழ் தமிழர்கள் என்றில்லாது. உலகளாவிய தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகளை நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமைவாய்ந்த பத்திரிகைகள், சஞ்சிகைகள் என்பனவற்றிலிருந்து இனங்கண்டு அவற்றைத் தரம் பிரித்து சேகரித்து ஒரு தமிழர் ஆவணக் களஞ்சியத்தையே உருவாக்கியுள்ள பெருமை கனகரத்தினத்தைச் சேரும். சமகாலப் பத்திரிகைகளை மட்டுமன்றி, கடந்தகாலப் பத்திரிகைகளையும் பழைய பத்திரிக்கைக் கடைகளிலிருந்து வாங்கித் தூசி தட்டி அவை கொண்டிருக்கும் வரலாற்றுத் தகவல்களையும் சேகரித்துள்ளார்.
புகழ்பூத்த ஈழத்துப் பெரியார்கள், தமிழகப் பெரியார்கள், சமயமும் சமயத் தலங்களும், இலங்கைத் தமிழ் பேசும் சமூகங்கள், தமிழக இலங்கைத் தொல்லியல் ஆய்வுகள், சிங்கள மக்கள் மொழி, பண்பாடு, சிங்களவர் - தமிழர் தொடர்புகள், தமிழர்கள் கலைகள், தமிழர் கலையும், பண்பாடும் உலகளாவிய தமிழர் (சிங்கப்பூர், தாய்லாந்து, மொறிசியஸ், இந்தோனேசியா, மலேசியா, பர்மா, வியட்நாம், தென்னாபிரிக்கா, கம்போடியா ஆகிய நாடுகளில் தமிழரும் தமிழ்ப் பண்பாடும்) ஆகிய பொதுத் தலைப்பு மற்றும் தனித்தலைப்புக்களில் ஏறத்தாழ 7000 கட்டுரைகள் அவர் சேகரித்து வைத்துள்ளார். ஒவ்வொரு தலைப்பையொட்டி 10 முதல் 300 கட்டுரைகள் வரை அவருடைய ஆவணக் காப்பகத்தில் உண்டு.
கண்டியில் உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் என்ற பெயரில் இயங்கும் இவரது நிறுவனம் 1899 தொடக்கம் தொடர்ச்சியான தமிழர் வரலாற்றைத் திரட்டிப் பாதுகாத்து வருவதுடன் நோர்வே அரசின் உதவியுடன் அவற்றை 200 மைக்ரோ பிலிம்களில் பதிவு செய்துள்ளது. இவற்றின் 200 பிரதிகள் யுனெஸ்கோ நிறுவனத்தினூடாக சுவிற்ச்சர்லாந்திலுள்ள சுவடிகள் அமைப்பொன்றிடம் (Glarus State Archives) பாதுகாப்பு நோக்கங்களுக்காக வைப்புச் செய்யப்பட்டுள்ளன. மைக்ரோ பிலிம்களாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுக்கப்பால் இன்னும் 150 பிலிம்களில் பதிவு செய்யக் கூடிய ஆவணங்களை கனகரத்தினம் முறையாக வகைப்படுத்தி சேகரித்து வைத்துள்ளார். தமது சக்திக்குட்பட்ட வரை இலங்கைத் தமிழர் வரலாற்றை பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வரும் தகவல் பதிவுகளைத் திரட்டிப் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறையினரிடம் கையளிப்பதை நோக்கமாகக் கொண்டு இயங்குபவர் இரா.கனரத்தினம்.
தம்மிடமுள்ள ஆவணங்களில் 80 சதவீதமானவற்றை மைக்ரோ பிலிமாக தயாரித்துள்ள கனகரத்தினம் அவற்றை இவ்வடிவில் 200 ஆண்டுகளுக்கு பாதுகாக்க முடியும் என்கிறார்.
உண்மையில், ஒரு நிறுவனம் செய்ய வேண்டிய பணிiயைத் தனிமனிதனாக நின்று கனகரத்திரம் அவர்கள் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரைத் தவிர, 'வீரகேசரி' பத்திரிகை நிறுவனமும் யாழ்ப்பாணக் கல்லூரியும் தம்மிடமுள்ள சேகரிப்புகளை இவ்வாறு மைக்ரோ பிலிம் வடிவில் கொண்டு வர முயற்சித்ததாக ஒரு தகவல் உண்டு.
1974ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டில் கனகரத்தினத்தின் சேகரிப்புக்களின் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. வண.பிதா. தனிநாயக அடிகள் இக்கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார். 1994 ஆம் ஆண்டில் 'உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒரு அறிமுகம்' யாழ் - கண்டி, கனடா, ஒஸ்லோ என்னும் தலைப்பில் ஒரு கண்காட்சியை இவர் நடத்தியுள்ளார்.
இலங்கை, இந்தியா, மலேசியா ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகளில் குடியேறிய தமிழர்கள் தமது மொழி மற்றும் இனத்துவ அடையாளங்களை இழந்து வருகின்றார்கள். குறிப்பாக மொறிசியஸ், பீஜித் தீவுகள், இந்தோனேசியா, தென்னாபிரிக்கா முதலிய நாடுகளில் இத்தகைய நிலைமை காணப்படுகின்றது.
இப்பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களுடைய தனித்துவம் பற்றி அறிவுறுத்தி அவர் தம் பிரச்சினைகளை உலகறியச் செய்யும் நோக்குடன் உலகத் தமிழப் பண்பாட்டு இயக்கம் ஒன்றை ஏற்படுத்தக் கடுமையாக உழைத்தவர் கனரத்தினம். இந்தியத் தமிழறிஞர் (சாலை இளந்திரையன்) இவ்வமைப்புக்கு முதலாவது தலைவராக விளங்கினார். அவரது இம்முயற்சிகள் காரணமாகவே மொறிசியஸ், மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவரைத் தமது நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
தமிழர்கள் தமது வரலாற்றை மறந்தவர்களாகவோ, வரலாற்றை இழந்தவர்களாகவோ மாறி விடக்கூடாது. தமிழர்கள் தமது வரலாற்று சார்ந்த ஆதாரங்களை முறையாகத் தொகுத்து வைக்காமையால் பல்வேறு புனைகதைகள் உண்மை வரலாறு என்ற போர்வையில் முன் வைக்கப்படுகின்றன. சர்வதேச மட்டத்தில் கூட தமிழினம் பண்பாட்டுப் பின்னணியற்றதோர் இனமாக மாறி வருகின்றது என்று சிந்தித்த கனரத்தினம், தமிழினத்தின் இந்த வரலாற்றுத் தேவையை உணர்ந்து உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றின் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளார். 'ஆவண ஞானி' என்று அவருக்கு கனடா தமிழர்களால் வழங்கப்பட்டுள்ள பட்டம் பொருத்தமானதே!.
- பேராசிரியர் சொ. சந்திரசேகரன்
ஆவணக் காப்பகம்
ஈழத்தமிழர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி, உலகத் தமிழ் ஆவணக் காப்பகம் என்ற அமைப்பை கண்டியில் நிறுவி அவற்றைப் பாதுகாத்து வந்தார். இவரால் ஆவணப்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுத் தொகுதி யுனெஸ்கோவின் ஆதரவில் சுவிட்சர்லாந்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகின் பழமை வாய்ந்த பத்திரிகைகள், இதழ்களிலிருந்து உலகத் தமிழர்களின் செய்திகளைத் தரம் பிரித்து சேகரித்து வைத்துள்ளார். இந்த ஆவணங்களை நோர்வே அரசின் உதவியுடன் 200 இற்கும் அதிகமான குறுஞ்சுருள்கலில் பதிவு செய்து வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 1974 உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் இவரின் ஆவணங்கள் அடங்கிய கண்காட்சி பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. 1994ஆம் ஆண்டில் கனடா, நோர்வே ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.
சாலை இளந்திரையன் தலைமையில் இயங்கிய உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தில் சேர்ந்து முன்னின்று உழைத்தார். கனடாத் தமிழர் இவருக்கு ஆவண ஞானி என்ற பட்டம் வழங்கிக் கௌரவித்தனர்.
குரும்பசிட்டி இரா. கனகரத்தினம் (இறப்பு: 22 யூன் 2016) என அழைக்கப்படும் இராமசாமி கனகரத்தினம் உலகத் தமிழர்களின் கலைகள், பண்பாடுகள், சுவடிகளை அறிமுகம் செய்யும் அறிஞர், எழுத்தாளர். உலகத் தமிழர் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறுவி, தமிழர் தொடர்பான பல ஆவணங்களை சேகரித்து வைத்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிறுவனர். உலகத் தமிழர் குரல் என்ற மாத இதழை வெளியிட்டார்.
வாழ்க்கைக் குறிப்பு
இரா கனகத்தினம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டம் குரும்பசிட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். கண்டி மாவட்டம், முல்கம்பலை என்ற ஊரில் வாழ்ந்து வந்தவர்.
பிறப்பு குரும்பசிட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
இறப்பு 22 ஜூன் 2016
முல்கம்பலை, கண்டி, இலங்கை
தேசியம் இலங்கைத் தமிழர்
அறியப்படுவது ஆவணக் காப்பாளர்
வாழ்க்கைத் துணை பவளராணி கனகரத்தினம்
இரா. கனகரத்தினம் எழுதிய
நூல்கள் உள்ளன.
• சிறுகதை ('சீசரின் தியாகம் 1952')
• அலைகடலுக்கு அப்பால் தமிழர் (1973),
• உலகத்தமிழர் ஐக்கியத்தை நோக்கி (1974)
• இறி யூனியன் தீவில் எங்கள் தமிழர் (1979)
• மொறிசியஸ் தீவில் எங்கள் தமிழர் (1980)
• உலகத்தமிழர் ஆவணக்காப்பகம் ஓர் அறிமுகம்
• உலகத் தமிழர் ஒருமைப்பாடு - சில நற்கூறுகளும் அணுகுமுறைகளும் (1981)
• ஒரு நூற்றாண்டு இலங்கைத்தமிழர் வரலாறு
• ஒரு குடையின்கீழ் உலகத்தமிழினம்