புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஏப்., 2014


நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்லத்தான் இங்கு வந்துள்ளேன் ... : சென்னை கூட்டத்தில் கலைஞர்
தென்சென்னை தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து, நேற்று மாலை எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர் பங்கேற்றார்.



கூட்டத்தில், தென் சென்னை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், கவிஞர் காசிமுத்து மாணிக்கம், பகுதி செயலாளர் தனசேகரன், ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் கலைஞர் பேசியபோது,  ‘’தி.மு.க. ஆட்சியிலேயே அப்போது இருந்த விலை வாசிக்கும், தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் விலை வாசிக்கும் வித்தியாசம் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். துவரம் பருப்பு ஒரு கிலோ 59-க்கு தி.மு.க. ஆட்சியில் விற்றது. அது இப்போது 75 ரூபாய். உளுந்துபருப்பு 55-லிருந்து இப்போது ரூ.75. கடலை பருப்பு ரூ.36-–லிருந்து இப்போது ரூ.54. நல்ல எண்ணெய். பெயரே நல்லண்ணெய் என்ன கிராக்கி பாருங்கள். இன்றைக்கு ஒரு கிலோ ரூ.220.
ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து எதை முன் எடுத்து சென்றார்கள்? எந்த திட்டத்தையும் அவர் நிறை வேற்றவில்லை. இன்றைக்கு அவர்கள் எடுக்கிற எந்த காரியம் என்றாலும் அவைகள் எல்லாம் நிறைவேற முடியாததால் முடங்கி போய், அழுகி போய், கிடப்பில் போடப்படுகின்ற திட்டங்களாக மாறி விட்டது.
சேது சமுத்திர திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். இந்த திட்டத்தால் 100-க்கும் மேற்பட்ட கப்பல்களை விட முடியும். கடற்கரை பகுதி வளம் பெரும். தொழில் தொடங்கிட எதுவான இந்த திட்டத்தை வேண்டாம் என்று சொன்ன ஒரு முதல்-அமைச்சரை சொன்னவரை பார்த்து இருக்கிறீர்களா?
இந்த திட்டம் வந்தால் தமிழகத்தில் வியாபாரம் வளரும், தமிழ்நாட்டில் கடற்கரை ஓரம் வளம் பெருகும் என்று நானும் சொன்னேன். அண்ணாவும் சொன்னார். இதை வேண்டாம் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு எவ்வளவு எதிர்ப்புகள். ஆனால் அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்பட்டு இருக்கிறாரா? சேதுசமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தி.மு.க. மிகப் பெரிய போராட்டத்தை அறிவிக்க இருக்கிறது. இதற்கு அவர் என்ன செய்ய போகிறார்?
நான் இப்போது முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல தான் இங்கு வந்துள்ளேன். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலே உள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்று தி.மு.க.வும், தமிழகத்திலே உள்ள பல கட்சிகளும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருவதும், அதுகுறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அவர்களை விடுவிக்க முடியும் என்ற கருத்தினை தெரிவித்து, அதனையொட்டி தமிழக அரசும் சட்ட விதிமுறைகளைச் சரியாக பின்பற்றாமல் அவசர அவசரமாக மேற்கொண்ட நடவடிக்கையில், அதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் தர வேண்டுமென்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா கூறியிருந்தார்.
மத்திய அரசு அதற்கு ஒப்புதல் வழங்காததோடு, தமிழக அரசுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்திலேயே ஒரு மனுவினை தாக்கல் செய்து, அந்த வழக்கின் தீர்ப்பினைத்தான், நேற்றைய தினம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று கோவையில் நடை பெற்ற ஒரு விழாவிலே வெளிப்படையாக தெரிவித்து, அந்த செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளிவந்துள்ளது.
வரும் 24-ந் தேதியன்று நாடாளுமன்றத்திற்கான தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள சூழ்நிலையில், நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெறவுள்ள 25-ந் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளை வினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ? என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு, நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக பாதகங்களை ஏற்படுத்த கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது தானா? என்பதையும் எண்ணிப்பார்த்து, அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளைக் காப்பாற்ற பயன்படும் என்பதுடன் அனைவருக்கும் நலன் பயக்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான். தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து, நீதி தராசு எல்லோரும் சமம் என்று நினைத்து பார்க்கக்கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துக்களை பொது விழாக்களில் கூறலாமா? இதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்’’என்று தெரிவித்தார்.

ad

ad