புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 மார்., 2024

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

www.pungudutivuswiss.com
தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது.

திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது.

திமுக 21 இடங்களில், அதிமுக 33 இடங்களில், பாஜக 20 இடங்களில் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் அறிவிக்கப்படுள்ள வேட்பாளர்களில் தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள்.

கே. அண்ணாமலை

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த சில மாதங்களாகவே, பேச்சு அடிபட்டு வந்தது. நான் போட்டியிட மாட்டேன் என முதலில் கூறிய அண்ணாமலை, தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.

அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது.

தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கோவையில்தான் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை.

கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக கருதுகிறது.

சிங்கை ராமச்சந்திரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

கோவையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் இவர், முதல் முறை வேட்பாளர். தேர்தல் களத்துக்குப் புதிது என்றாலும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர்.

அதிமுகவின் இளைஞர் அணி முகங்களில் பிரபலமான இவர், கோவை அதிமுக வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கோவையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “ஐ அம் வெயிட்டிங்” என்று பதிவிட்ட அவர், சமூக ஊடக தளங்களில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டு பிரபலமானவர்.

பாஜகவிலிருந்து களமிறங்கும் இளம் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட இவரே சரியானவர் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது.

தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகக் குறிப்பாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை.

சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ள நகரம். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர்.

தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர்.

மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் நகர்ப்புற மக்களுக்கான சரியான வேட்பாளராக இருப்பார் என்று பாஜக கருதியதால் தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

விஜய பிரபாகர்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,DMDK

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் இருந்து தேமுதிக சார்பாகப் போட்டியிடுகிறார்.

விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெறும் தேர்தலில், அவர் பிறந்த ஊரான ராமானுஜபுரம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

ஏ சி சண்முகம்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடுகிறார்.

கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருப்பது பாஜகவுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது.

கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.

கனிமொழி

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.

ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.

கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். அவர் தாயாரது சமூகமும் தூத்துக்குடியில் அவர் நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணம்.

நயினார் நாகேந்திரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன்.

பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற முடிந்தது.

இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கு முக்கியக் காரணம்.

ஆ. ராசா

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா தற்போது மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.

தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டத்தில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது.

பாஜக அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.

தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக.

செல்வ கணபதி

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பட மூலாதாரம்,FACEBOOK

இவர் 1991இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் 1999இல் அதிமுகவின் சார்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

கட்சியின் முதல் கட்டத் தலைவர்கள் பட்டியலில் இவர் இல்லாதபோதும், சேலம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர்.

அவர் மீதிருந்த ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வ கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்த்து சேலத்தில் அதிமுக சார்பாக 31 வயது புதுமுகமான விக்னேஷ் நிறுத்தப்பட்டுள்ளார்.

டிடிவி தினகரன்

தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள்

பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்தத் தொகுதியில் சமூக செல்வாக்கையும் பெற்றுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார்.

ad

ad