தேனி மாவட்டம் பங்களாமேடு பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் "நாமே மாற்று! நாம் தமிழரே மாற்று" என்ற தலைப்பில் நேற்று எழுச்சிமிக்க கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் முக்கியப் பேச்சாளரான சாட்டை துரைமுருகன் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்தும், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகள் குறித்தும் மேடையிலேயே மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தாண்டி, தற்போது தவெக-வையும் சாட்டை துரைமுருகன் இலக்கு வைத்தது கூட்டத்தில் அனலைக் கூட்டியது.
சாட்டை துரைமுருகன் பேசிக்கொண்டிருந்த அதே வேளையில், தேனி - மதுரை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற சில இளைஞர்கள் திடீரென "டிவிகே! டிவிகே!" என்றும் "தளபதி விஜய் வாழ்க" என்றும் ஆக்ரோஷமாக முழக்கமிட்டனர். நாம் தமிழர் கட்சியின் மேடைக்கு அருகிலேயே மாற்றுக்கட்சியின் கோஷங்கள் எதிரொலித்ததால், அங்கிருந்த சீமான் தம்பிகள் கொதிப்படைந்தனர். மேடையைச் சுற்றியிருந்த தம்பிகள், கோஷமிட்டவர்களைக் கைது செய்யக் கோரி அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் முதல் கட்டமாக அங்கே பரபரப்பு நிலவியது.
பொதுக்கூட்டம் முடிந்து சாட்டை துரைமுருகன் புறப்பட்டுச் சென்ற பிறகு, மோதல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. தேனி - மதுரை சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி கட்டிய கார்கள் அதிக சத்தத்துடன் ஹார்ன் அடித்துக்கொண்டு வரிசையாக வருவதைக் கண்ட நாம் தமிழர் கட்சியினர், அந்த வாகனங்களைச் சிறைபிடித்தனர். "எங்கள் கூட்டத்திலேயே வந்து வம்பு செய்கிறீர்களா?" எனக் கேட்டு தவெக தொண்டர்களுடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் தவெகவினரின் கார்களைக் கைகளால் தட்டி ஆக்ரோஷமாகத் தாக்கத் தொடங்கினர். ஒருகட்டத்தில் இரு தரப்பு தொண்டர்களும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் உருவானது. உடனடியாகப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினருக்கும் இடையே புகுந்து தடியடி நடத்தாத குறையாக அவர்களைப் பிரித்தனர். பின்னர், தவெகவினரின் வாகனங்களை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
தமிழக அரசியலில் "யார் மாற்று?" என்ற போட்டி சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையே தற்போது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, இளைஞர்களின் வாக்குகளைக் கவர்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே நிலவும் போட்டி, இப்போது தெருச்சண்டையாக மாறத் தொடங்கியுள்ளது. தேனியில் நடந்த இந்தச் சம்பவம், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் இவ்விரு கட்சிகளுக்கும் இடையே நிலவப்போகும் கடும் மோதலுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.
தேனி பங்களாமேடு பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலால் அந்த இடமே சிறிது நேரம் போர்க்களம் போலக் காட்சியளித்தது. இது குறித்து இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்படலாம் என்பதால், தேனி நகரப் பகுதியில் கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்களிலும் இந்த மோதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி, இரு கட்சித் தொண்டர்களிடையே விவாதப் போரை உருவாக்கியுள்ளது